Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

`மாஸ்டர்' படம் பார்த்த விஜய் என்ன சொன்னார்... படம் எப்போது, எங்கே ரிலீஸ்?!

சூர்யாவின் 'சூரரைப்போற்று' அமேசான் ப்ரைமுக்கு வந்ததுமே, எல்லோரின் எதிர்பார்ப்பும் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை எதிர்நோக்கித்தான் இருக்கிறது.

'மாஸ்டர்' ஓடிடி-யில் ரிலீஸாகிவிடும் என ஒரு தரப்பும், நிச்சயம் தியேட்டருக்குத்தான் வரும் என ஒரு தரப்பும் சொல்கின்றன. இதற்கிடையே விஜய் மாஸ்டர் படத்தைப் பார்த்த தகவலும் வெளியே வர கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். உண்மையில் நடப்பது என்ன, பட ரிலீஸ் எப்போது?!

விஜய்

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கடந்த மாதம் விகடனுக்கு அளித்திருந்தப் பேட்டியில் மாஸ்டர் நிச்சயம் தியேட்டர்களில்தான் வரும். தீபாவளிக்குள் நிலைமை சரியானால் தீபாவளி, இல்லையென்றால் பொங்கல் என்றும், விஜய்யும் தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறார் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில்தான் இப்போது சூரரைப் போற்று படத்தை அமேசான் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதால், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தையும் பெரும்தொகைக்கு ஓடிடி தளங்கள் வாங்கக்கூடும் எனப் பேச்சுகள் எழுந்தன. இதுதொடர்பாக 'மாஸ்டர்' டீமிடம் பேசினேன்.

'' 'மாஸ்டர்' படத்தின் பிசினஸ் மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 70 கோடி ரூபாய்க்கு படம் விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதேப்போல தமிழில் படத்தை ஒளிபரப்பும் உரிமை சன் டிவிக்கு 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. விஜய் படங்களுக்கு சர்வதேச மார்க்கெட் இருக்கிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் தியேட்டர்கள் திறந்தாலும் உலகம் முழுக்க தியேட்டர்கள் திறந்தால்தான் படத்தை வெளியிடமுடியும். சிலோன், சிங்கப்பூர், மலேசியா, யு.எஸ், யு.கே என முக்கியமான மார்கெட்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் தியேட்டர்கள் திறக்காமல் தமிழ்நாட்டில் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்தால் 'மாஸ்டர்' படத்தின் பிசினஸ் அடிவாங்கும். இது விஜய்யின் அடுத்தடுத்தப் படங்களையும் பாதிக்கும். மேலும், கொரோனாவால் மக்கள் மனதில் நிம்மதியில்லை. எதுவுமே நிச்சயமற்ற இந்த சூழலில் 'மாஸ்டர்' படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும் விரும்பவில்லை'' என்றார்கள்.

Master

''அப்படியானால், ஓடிடி தரப்பில் இருந்து உங்களை யாருமே தொடர்புகொள்ளவில்லையா?'' என்று கேட்டேன். ''ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமேசானில் இருந்து எங்களை அணுகினார்கள். அப்போதே எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டோம். அவர்களும் அதன்பிறகு எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை'' என்றார்கள்.

Also Read: ``நஷ்டமானாலும் பரவாயில்லை!'' - ஓடிடி-க்கு ஏன் வந்தது சூர்யாவின் `சூரரைப் போற்று'?

'' 'மாஸ்டர்' படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள், வாங்கியதொகையோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் அதிகப் பணம் கொடுத்தால், ஓடிடி-யில் நேரடி ரிலீஸ் செய்ய என்ஓசி தருகிறோம் என்று சொல்வதாக ஒரு பேச்சிருக்கிறதே?'' எனக் கேட்டேன். ''இதெல்லாம் சுத்தப் பொய். எந்த விநியோகஸ்தரும் பணம் கேட்கவில்லை. எல்லோருமே தியேட்டருக்குத்தான் படம் வரவேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். டிசம்பர் இறுதிக்குள் நிலைமை சரியாகிவிடும் எனக்கணித்து, 2021 பொங்கல் ரிலீஸை மனதில்கொண்டு நாங்கள் வேலை செய்துவருகிறோம்'' என்றார்கள்.

மாஸ்டர்

'மாஸ்டர்' படம் இந்தாண்டு ஏப்ரல் 9-ம் தேதிக்கு வெளியிடும் வகையில் தயாராகயிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் தள்ளிப்போனது. இந்நிலையில் முன்பு ரிலீஸுக்காக ரெடியாகியிருந்த படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்கி, சிலவற்றை மீண்டும் சேர்த்து, சில காட்சிகளை மட்டும் எடிட் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்த எடிட் செய்யப்பட்ட வெர்ஷனை சமீபத்தில் பார்த்த விஜய் ரொம்பவே ஹேப்பி என்கிறார்கள். படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, லோகேஷை அழைத்துப் பாராட்டியதோடு, ''அடுத்து நிச்சயம் நாம சேர்ந்து படம் பண்ணலாம்'' என்றும் சொல்லியிருக்கிறார்.

லோகேஷ் செம்ம ஹேப்பி!



source https://cinema.vikatan.com/tamil-cinema/where-and-when-vijays-master-will-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக