Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காரைக்குடி: சொத்துப் பிரச்னையில் சித்தப்பா கொலை! - தலையுடன் போலீஸில் சரணடைந்த சகோதரர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ளது தைக்கால் தெரு. இப்பகுதியை சேர்ந்த யூசுப் ரகுமான் என்பவர் புதுவயல் மெயின் ரோட்டில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது இறைச்சிக் கடையில் சிக்கன், மட்டன் விற்பனை அதிகம் நடப்பதால், இரவு நேரம் வரை கூட இவரது இறைச்சிக் கடை இயங்கும் என்கிறார்கள். இந்நிலையில் இவருக்கும் இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

கொலை செய்து தலையுடன் கொலையாளி

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருக்கும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. சொத்துப் பிரச்னையால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்வதில்லை. குடும்ப விழாக்களில் பார்த்துக் கொண்டால் கூட சண்டை ஏற்படும் என்று நினைத்து, இரு குடும்பத்தினரும் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லையாம்; அவற்றைத் தவிர்த்து விடுவார்களாம்.

இந்நிலையில், நேற்று இரவு சகுபர் அலியின் மகன்களான நியாஸ், ரகுமான் ஆகிய இருவரும், புதுவயல் பகுதியில் உள்ள தனது சித்தப்பா யூசுப் ரகுமான் கறிக்கடைக்கு வந்துள்ளனர். கோட்டைப்பட்டினத்தில் உள்ள சொத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், யூசுப் ரகுமான் அவர்களின் பேச்சுக்கு பிடிகொடுக்காமல், தனது வேலையைச் செய்துகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு சித்தப்பா யூசுப் ரகுமான், உடன்படவில்லை என அண்ணன், தம்பி இருவரும் தாங்கள் எடுத்துவந்திருந்த அரிவாளை எடுத்து யூசுப்பைக் கழுத்தில் வெட்டியிருக்கிறார்கள்.

கொலை செய்த அண்ணன் தம்பி

தலையைத் துண்டாக்கி, யூசுப்பைக் கொலை செய்தனர். பின்பு வெட்டப்பட்ட தலையுடன் சகோதரர்கள் இருவரும், இருசக்கர வாகனத்தில் சாக்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த ஆய்வாளர் சுந்தரியிடம் நடத்ததைக் கூறி சாக்குப் பையில் இருந்த தலையை வெளியே எடுத்துக் காண்பித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் சுந்தரி, இருவரையும் கைது செய்தார். யூசுப் ரகுமானின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read: காரைக்கால்: `தாயின் இரண்டாவது கணவர் கொலை; 25 ஆண்டுகள் தலைமறைவு!’ - போலீஸில் சிக்கிய நபர்

மேலும், கொலையாளிகளில் ஒருவரான ரகுமானுக்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை செய்யப்பட்ட நபர்

இதனிடையே சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன், விசாரணை குறித்து கேட்டறிந்தார். சொத்துப் பிரச்னைக்காக தனது சித்தப்பாவை அண்ணன், தம்பி இருவரும் கொலை செய்தது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/karaikudi-brothers-surrendered-before-police-in-a-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக