Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

தூத்துக்குடி: தாம்பூலப் பையில் முகக் கவசம், கபசுரக்குடிநீர்! - திருமணத்தில் கொரோனா விழிப்புணர்வு

கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் திருமண மண்டபங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் திருமண நிகழ்ச்சி நடத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கௌதம்குமார் மற்றும் மனோகரி ஆகிய இருவருக்கும் நடைபெற்ற திருமணம், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவே நடந்துள்ளது.

வெப்பநிலை கண்டறிதல்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள், மண்டப வாசலில் இருந்தே மூன்று அடி சமூக இடைவெளியில் அழைத்து வரப்பட்டு உள் அரங்கில் சமூக இடைவெளியுடன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.

பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்க வேண்டிய இடத்தில், கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, தெர்மா ஸ்கேனர் இயந்திரம் மூலம் வெப்பநிலை கண்டறியப்பட்டு பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, கபசுர குடிநீர்ப்பொடி டப்பாக்களும், முகக்கவசமும் போடப்பட்ட தாம்பூலப் பைகளை மணமக்களே ஒவ்வொருவருக்கும் வழங்கினர்.

வரவேற்பறையில் சானிடைசர்

திருமண நிகழ்ச்சியில், `கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து முன்னெச்சரிக்கையாக தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?’ என்பது குறித்து மைக்கில் விளக்கமாகக் கூறப்பட்டது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசினோம். ``கொரோனா ஊரடங்கு துவங்கிய நாள்களில் நடந்த திருமண நிகழ்ச்சிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

Also Read: கேரளா: பேரனுக்கு திருமணம்; ஹெலிகாப்டரில் பறந்த 90 வயது தாத்தா! - நெகிழ்ச்சி சம்பவம்

இரு வீட்டார் தரப்பிலும் மிக நெருங்கிய, அதே நேரத்தில் 20-க்கும் குறைவான உறவினர்களைக் கொண்டே திருமண நிகழ்ச்சி நடத்திட அரசு அறிவுறுத்தியது. கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் சற்று குறைந்துள்ள நிலையில், மண்டபங்களில் திருமணம் நடத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றினோம்.

கபசுரக் குடிநீர் பொடி வழங்கிய மணமக்கள்

திருமண அழைப்பிதழிலேயே ,`அரசின் நெறிமுறைகளின் படி எளியமுறையில் நடைபெறும் திருமணம்’ என்றே குறிப்பிட்டிருந்தோம். வழக்கமாக திருமணத் தாம்பூலப் பைகளில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் சில்வர் பாத்திரம், சாக்லேட், கடலைமிட்டாய், பிஸ்கட் பாக்கெட், லட்டு, ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவைகளில் ஏதாவது ஒன்றைத்தான் போட்டுக் கொடுப்பது வழக்கம்.

ஆனால், தற்போதைய சூழலுக்கு ஏற்ப தாம்பூலப் பைகளில் முகக்கவசமும், கபசுரக் குடிநீர்ப்பொடி டப்பாவையும் போட்டு வழங்கிடலாம் என மணமக்கள் ஒரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அவர்களின் ஐடியாபடியே வழங்கினோம்” என்றனர்.

மரக்கன்று வழங்கிய மணமக்கள்

இதேபோல, ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கிளாக்குளத்தில் அருள் லிங்கப்பெருமாள், சத்தியவடிவு ஆகியோருக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலப்பையுடன் தேக்கு, மகோகனி, குமிள், சந்தனம், செஞ்சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன், மரம் வளர்ப்பின் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.



source https://www.vikatan.com/news/tamilnadu/thoothukudi-couple-gives-face-mask-kabhasura-kudineer-in-wedding

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக