Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

கொதிக்கும் அமெரிக்கா, வேகமாக உருகும் ஆர்டிக்... காலநிலை ஆபத்தை இன்னும் உணரவில்லையா நாம்?!

கடந்த வாரம், அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிகமான வெப்பநிலை பதிவானது. கலிபோர்னியப் பகுதியில் அமைந்துள்ள மரணப் பள்ளத்தாக்கில் (Death Valley), கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதியன்று 54.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதைவிட அதிகரித்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். ஏனென்றால், வெப்பநிலையைப் பதிவு செய்கின்ற கருவிகள் வழக்கத்துக்கு மாறாக, விந்தையான முறையில் குழப்பத்தோடு செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையைப் பற்றி ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, இதேபோல் குவைத்தில் 2011-ம் ஆண்டின்போது அதிக வெப்பநிலை பதிவானது. அப்போது பதிவான வெப்பநிலையின் அளவு 53.3 டிகிரி செல்ஷியஸ். இப்போது அமெரிக்காவில் அதைவிட ஒரு டிகிரி அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதுமட்டுமன்றி, பூமியிலேயே அதிக வெப்பநிலை பதிவான முதல் 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் 21-ம் நூற்றாண்டில்தான் இருக்கின்றன. இருப்பதிலேயே மிக அதிக வெப்பநிலை 2016-ம் ஆண்டு பதிவானது. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் 2015, 2017, 2018, 2014, 2010, 2013, 2005 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இந்த ரெக்கார்டுகளை உடைக்கும் அளவுக்கு வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த வரிசையில் இப்போது 2020-ம் ஆண்டும்கூட அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. கடந்த ஜூன் மாதத்தில், ஆசியா, ஸ்காண்டினேவியா, மேற்கு ஐரோப்பா, மெக்சிகோ மற்றும் பெருங்கடலின் கணிசமான பகுதிகள் என்று பூமியின் பெருமளவு பகுதிகளில் அதிகளவிலான வெப்பநிலை பதிவானது. ஆர்டிக் பகுதியின் தட்பவெப்பநிலை, முதன்முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து அதிகரித்தது. சைபீரியாவிலுள்ள வெட்கோயான்ஸ்க் என்ற நகரத்தின் வெப்பநிலை 38 டிகிரி (100.4F) செல்ஷியஸாகப் பதிவானது. ஐக்கிய அமெரிக்காவின் மத்தியப் பகுதிகளில் வறட்சியும் பஞ்சமும் இந்த ஆண்டு அதிகமானதால், சோயா பீன்ஸ், சோளம், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

புவி வெப்பமயமாதல்

இந்நிலையில், ஆர்டிக் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகும் வேகமும் தீவிரமடைந்துள்ளது. உலகிலேயே ஆர்டிக் பகுதியில் உள்ள பனித்தகடுகள்தான் இரண்டாவது மிகப்பெரிய பனித்தகடுகள். இது கிரீன்லாந்தின் பாதி பரப்பளவை மூடும் அளவுக்குப் பெரியது. இந்தப் பனித்தகடுகள் மற்றும் பனிப்பாறைகள் அனைத்தும் அதிகரிக்கும் தட்பவெப்பநிலை காரணமாக உருகிக் கடலில் கலந்துகொண்டிருக்கின்றன. சமீபகாலமாகக் காலநிலை மாற்றம் வெப்பநிலையை வழக்கத்தைவிட வேகமாக அதிகரிக்க வைப்பதால், இவ்வாறு கடலில் சென்று கலக்கும் பனித்தகடுகளின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பாறை உருகுதல், 1985 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் ஏற்பட்டதைவிட 14 சதவிகிதம் அதிகம் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டில் கிரீன்லாந்தில் ஏற்பட்ட பனிப் பொழிவும்கூட வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், சராசரியாக 500 ஜிகா டன் அளவுக்குப் பனித்தகடுகள் உருகியுள்ளன. இது ஆண்டுதோறும் ஏற்படும் பனிப்பொழிவைவிட மிகவும் அதிகம். அதனால், பொழியும் பனிக்கும் உருகும் பனிப்பாறைக்கும் இடையிலான சமநிலை குலைந்துள்ளது.

இதுபற்றிப் பேசிய ஜெர்மனியின் ஆல்ஃப்ரெட் வெக்னர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியிலாளர் இங்கோ சாச்கென் (Ingo Sasgen), ``கிரீன்லாந்தின் பனித்தகடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேகமாக உருகுகின்றன. கடந்த வருடம் கிரீன்லாண்டில் ஏற்பட்ட பனிப்பாறை உருகுதலால் உலகின் கடல் மட்டம் சுமார் 0.006 அடி (1.5மி.லி) உயர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

2007 முதல் 2018 வரை ஒவ்வொரு வருடமும் பனித்தகடுகள் உருகும் அளவானது சிறிது சிறிதாக அதிகரித்து, இப்போது 60 ஜிகா டன் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது 1985 முதல் 1999 வரை ஏற்பட்ட பனி இழப்பைவிட அதிகம். இப்போது வரை 1985 முதல் 4,200 ஜிகாடன் அளவுக்குப் பனி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பனி இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் பனித்தகடுகள் இல்லாத சூழ்நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

அதுகுறித்துப் பேசிய நாசா விஞ்ஞானி அலெக்ஸ் கார்ட்னர், ``இது நம் கண்களுக்கு மிகச் சிறிய அளவாகத் தோன்றினாலும், நமது பூமிக்கு நிச்சயம் மிகப்பெரிய அளவே. இதோடு வெப்பத்தால் பனித்தகடுகளிலிருந்து உருகும் பனியையும் பெரிதாகும் கடலையும் சேர்த்தால் கடல் மட்டம் உயர்வதற்கு நிச்சயம் வழிவகுக்கும். இதனால் கடலோர வெள்ளம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

``ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் பனிப்பொழிவு பனித்தகடுகளைக் கடலிலிருந்து வேறு திசைக்கு இழுத்துவிடும். இதனால் வெப்பமாகும் கடல் காற்றால் பனித்தகடுகளை உருக்க முடியாது. இதன்பிறகு, கிரீன்லாந்து ஒரு நிலப் பிரேதசமாக மட்டுமே மாறிவிடும். இதனால் பனித்தகடுகள் உருகும் சதவிகிதமும் வருடாந்தரப் பனிப்பொழிவும்தான் பனிப்பிரதேசத்தின் சமநிலையைத் தீர்மானிக்கும்" என்கிறார் போஸ்டாம் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் மற்றும் காலநிலை ஆய்வாளரான ஸ்டேகன் ராம்ஸ்டார்ஃப்.

கிரீன்லாந்தில் பனிப்பாறை உருகுதல்

ஸ்டேகன் நாம்ஸ்டார்ஃப் கூறுவதுபோல், பனிப்பாறை உருகுவது, பனிப்பொழிவு இரண்டும் சீராக இருந்தால் பிரச்னையில்லை. வெப்பத்தில் உருகும் பனிப்பாறைகளைப் பனிப்பொழிவு ஈடுசெய்துவிடும். அதிகரிக்கும் வெப்பநிலையில் உருகும் பனிப்பாறைகளுடைய அளவு மட்டுமே உயர்வதும் பனிப்பொழிவு அதை ஈடுகட்டும் அளவுக்கு இல்லாததும்கூட இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம்.

துருவப் பகுதியில் பனித்தகடுகளை இழப்பது குறித்து, உலகம் முழுவதுமுள்ள காலநிலை ஆய்வாளர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதிகமாகும் கரிம வாயு வெளியீடு உருவாக்கிக் கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதல் காரணமாக, பனித்தகடுகள் வேகமாக உருகி வருகிறது. இது, கடல் மட்டத்தை உயர்த்துவதோடு பல்வேறு கடலோர நகரங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரும்.

ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கில் (Death Valley) 54.4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் அரிசோனா முதல் வாஷிங்டன் வரை வெப்பச்சலன அலை வீசி வருகின்றது. இதற்கும் கிரீன்லாந்து பனிப்பாறைகளின் உருக்கத்துக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்றே அறிவியலாளர்கள் கூறுகின்றனர். எப்போதுமே பூமி அதிகமாக வெப்பமடையும்போது, பனிப்பாறைகள் அதிகளவில் உருகுவதும் இயல்பான ஒன்றே.

கடல் மட்ட உயர்வு

இதனால் தற்போது பூமியின் ஒரு பக்கம் பனிப்பாறைகள் அதிகளவில உருகிக்கொண்டிருக்க, மறு பக்கம் வெப்ப அலை வீசி வருகிறது. காலநிலை மாற்றமானது பல்வேறு வகையில் இன்னும் பல பாதிப்புகளை எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகிறது. இதைத் தடுக்க நாம் பல்வேறு உடன்படிக்கைகளை, வாக்குறுதிகளை மேற்கொண்டுள்ளோம்.

நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பயன்படுத்திய இயற்கை வளங்களை நல்ல முறையில் விட்டுச் செல்ல வேண்டியது நம்முடைய கடமை. ஆனால், அவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், உலக நாடுகளும் பெருநிறுவனங்களும் மக்களுடைய நுகர்வுப் பசியை மேன்மேலும் அதிகப்படுத்தி லாபம் ஈட்டுவதற்காகச் செய்கின்ற இயற்கைச் சீரழிவுகள், பூமியின் சூழலியல் சமநிலையைக் குலைத்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகளை, பூமியைவிட அதிகமாகச் சந்திக்கப் போவதும் நாமாகத்தான் இருப்போம். ஏனெனில், பூமி எப்போதும் தன்னைத் தானே சீர்படுத்திக்கொள்ளும். ஆனால், மனித இனம்?



source https://www.vikatan.com/social-affairs/environment/why-temperature-spike-in-california-and-rate-of-arctic-glacier-melting-is-worrisome

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக