Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

`பசுமை ஜிடிபி' இப்போதைய சூழலில் ஏன் அவசியம்?

கொரோனாவுக்குப் பிறகு, மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் சீர்த்திருத்தங்கள் குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் லி.வெங்கடாசலம், தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பெ.துரைராசு ஆகியோர் ஆராய்ந்து சில முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய விஷயங்கள் என்ன?

முக்கிய நகரங்களில் காற்றின் தரம் உயர்தல், நதிகளில் நீரின் தன்மை அதிகரித்தல் மற்றும் நகர்ப்புறங்களில் திடக் கழிவுகளின் உற்பத்தி குறைதல் போன்ற முக்கியமான சிலமாற்றங்கள் இதில் அடங்கும். இவை குறுகிய கால மாற்றங்களேயாயினும், இவற்றில் சில மகத்தானவை. உதாரணமாக, கங்கை நதியின் மாசுபட்ட நீரை குடிநீரின் தரத்துக்கு உயர்த்தியது ஊரடங்கின் ஓர் உன்னத சாதனையாகும். இது 1987-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ரூ.4,800 கோடி செலவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட கங்கையைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளால்கூட சாதிக்க இயலாத ஒரு சாதனையாகும்.

உலகச் `சுற்றுச்சூழல் செயலாக்க குறியீட்டின்’படி பெருந்தொற்றுக்கு முன்னர் இந்தியாவில் சுற்றுச்சூழலின் தரம் மிக மோசமான நிலையிலேயே (அதாவது, 180 நாடுகளில் இந்தியா 168 வது இடத்தில்) இருந்துள்ளது. 2017-ம் ஆண்டில் மட்டும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சுமார் 23.7 லட்சம் பேர் இறந்துள்ளனர். 2013-ம் ஆண்டில், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் ஏற்பட்ட மொத்தப் பொருளாதார இழப்பு ரூ.3,70,000 கோடியாகக் கணக்கிடப்பட்டது. நடப்பாண்டில் இதைவிட அதிகரித்திருக்கக் கூடும். இது 2009-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த தேசிய வருவாயில் சுமார் 5.7 சதவிகிதமாகும். ஆனால், எளிதில் அளவிட இயலாத ஏனைய பொருளாதார (உதாரணம், நோய்க்கான செலவு) மற்றும் பொருளாதாரம் சாராத (உதாரணம், சூழல் சீர்கேட்டால் ஏற்படும் மனம் சார்ந்த பாதிப்பு) இழப்புக்கள் பன்மடங்காகும். சுற்றுச்சூழல் பிரச்னைகளால் ஏற்படும் இரண்டாம் கட்ட பாதிப்புகள் மக்களுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக, கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்தல் அவற்றில் ஒன்று. அவ்வாறான புலம்பெயர்தல் கிராமப் புறங்களில் போதுமான அளவுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் விவசாயம் பொய்த்துப் போவதனாலேயே ஏற்படுகிறது. விவசாயம் பொய்ப்பதே நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவது மற்றும் நீர்நிலைகள் அழிவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளால்தான். பெருவாரியான புலம்பெயர் மக்கள் `சுற்றுச்சூழல் அகதிகளாகவே’ கருதப்படுகின்றனர். இதிலிருந்து பெருந்தொற்றின்போது நிகழ்ந்த பின்னோக்குப் புலம்பெயர்தலுக்கு அடிப்படைக் காரணம் சுற்றுச்சூழல் பிரச்னைகளே என்பதை அறியலாம். நகர்ப்புறங்களிலிருந்து திரும்பிய பெரும்பாலான மக்கள் பெருந்தொற்றுக்குப் பின்னரும் கிராமங்களிலேயே தங்கிவிடக் கூடும் என்பதால், முன்னரே பாதிப்புக்குள்ளான சூழலில் அது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, இனி வரும் காலங்களில் `தற்சார்புப் பொருளாதாரம்’ என்பது கொரோனாவுக்குப் பிந்தைய `புதிய நடைமுறையாக’ இருக்குமாதலால், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே அவ்வாறான பொருளாதாரத்தைப் பலம் வாய்ந்ததாகவும் மற்றும் நிலைப்படுத்துவதாகவும் அமையும்.

Durairasu

பொதுவாக, பொருளாதார வளர்ச்சியும் சூழல் மேம்பாடும் எதிர் எதிர் திசையில் நகர்வதால், ஊரடங்கின்போது சூழலில் ஏற்பட்ட நேர்மறை மாற்றங்களைப் பொருளாதார இழப்பு என்ற பெரும் விலையைக் கொடுத்தே பெற்றோம். ஆகவே, ஊரடங்கை விலக்கிக்கொள்ளும்போது உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள் மீண்டும் சூழல் சீர்கேட்டைத் தோற்றுவிக்கும். இச்சீர்கேடு மக்களின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பதால், பெருந்தொற்று அவர்களை எளிதில் ஆட்கொள்ளும். எனவே, சுற்றுச்சூழல் மேம்பாடு என்பது மக்களின் உடல்நலத்தைப் பேணி பெருந்தொற்றிலிருந்து அவர்களை இப்போது மட்டுமன்றி எப்போதும் காப்பதாகும்.

மேலும், கிராமப்புறங்களில் வாய்ப்புக்களை அதிகரித்து, புலம்பெயர்தலைக் கணிசமாகக் கட்டுப்படுத்தி, மக்களின் நல்வாழ்வையும் மேம்படச் செய்யும் தன்மை கொண்டது.

தமிழகம் சிறந்த இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளபோதிலும், தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப் புறங்களிலிருந்து வரும் மாசு, திடக்கழிவு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல், நிலம் பாழ்படுதல், கடல் அரிப்பு, கடல்நீர் உட்புகுதல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிவது போன்ற மிகச்சீரிய சுற்றுச்சூழல் பிரச்னைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிகழ்த்தப்பட்ட கள ஆய்வின்படி, தொழிற்சாலைகளிலிருந்து வரும் மாசுகளின் தாக்கத்தால் அப்பிராந்தியத்தின் நிலைத்த பொருளாதார வளர்ச்சியே கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்பது தெளிவு. சூழல் மாசுபாட்டால் நமது மாநிலம் முழுவதிலும் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தை இதுவரை நாம் அளவீடு செய்யவில்லை என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தின் தன்மை மற்றும் அளவு, கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோர் கவனத்துக்கு வராமலேயே போய்விடுகிறது.

Venkatachalam

தற்போது மாநிலத்தின் பெருவாரியான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் சூழல் பிரச்னைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகள்; திருப்பூர், கரூர் மற்றும் ஈரோட்டில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள்; சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள்; தூத்துக்குடியில் உள்ள தாமிர ஆலை; சேலம்-சென்னைக்கிடையே முன்மொழியப்பட்ட 8 வழிச்சாலை; தஞ்சாவூரின் காவிரிப் படுகையில் நிறுவப்படும் எரிவாயுக் கிணறுகள்; தேனியில் நிறுவப்படும் நியூட்ரினோ திட்டம்; கன்னியாகுமரியில் வர இருக்கும் இணையம் துறைமுகம் போன்றவை இதில் அடங்கும். எனவே, வருங்காலங்களில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அரசாங்கம் சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தகுந்த நடவடிக்கைகள் மூலம் செவ்வனே கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். எனவே, மாநில அரசு இந்த பெருந்தொற்றுக் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாநிலத்திலுள்ள மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தேச நலனையே மேம்படுத்த இயலும்.

குறுகியகால நடவடிக்கைகள்:

மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பெருந்தொற்று காரணமாகப் போடப்பட்ட தடைகளை, குறைந்தது இந்த ஆண்டு இறுதிவரையாவது நீட்டிப்பதன்மூலம் வனம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் புத்துயிர்பெரும் நிகழ்வு மேலும் சில காலம் தொடர ஏதுவாகும். மாநில அரசு 2020-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஈர நிலங்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இதன்மூலம், மாநிலத்தின் விலைமதிப்பற்ற ஈர நிலங்களைப் பாதுகாக்க தனிக் கவனம் செலுத்த இயலும். நகர்ப்புறங்களில் பசுமைப் போர்வையை விரிவாக்குவதால் காற்று மற்றும் ஒலி மாசுபடுதலை வெகுவாகக் குறைக்க முடியம். ஆகவே, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் அதைக் கண்காணிக்கவும் மர அலுவலர்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நியூட்ரினோ

நீண்டகால நடவடிக்கைகள்:

பசுமை ஜிடிபி: மொத்த தேசிய வருவாய் (ஜிடிபி) என்பது நாட்டின் பொருளாதார நலனை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். ஆனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாததனால், தற்போது அளவிடப்படும் தேசிய வருவாயானது மாநிலத்தின் பொருளாதார நலனை பரிமளிக்கும் ஒரு குறியீடாகக் கருத முடியாது. மானுடம் மற்றும் சூழலுக்கிடையே கீழ்க்கண்ட மூன்று வித தொடர்புகள் உள்ளன:

1. மனிதர்கள் தங்கள் நுகர்வு மற்றும் உற்பத்தி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் சுற்றுச்சூழலிலிருந்து கிடைக்கும் எண்ணிலடங்காத விலையற்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

2. நுகர்வு மற்றும் உற்பத்தியால் விளைவிக்கப்படும் மாசு போன்ற எதிர்மறை வெளிப்பாடுகள் மேற்சொன்ன சூழல் சேவைகளைக் குலைப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை மனிதர்கள் சுமக்க நேரிடுகிறது.

3. எதிர்மறை வெளிப்பாடுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மனிதர்கள் `சூழல் பாதுகாப்புச் செலவை’ மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு பக்கம், எண்ணற்ற சூழல் சேவைகளின் பண மதிப்பை மாநில தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. எனவே, மாநில ஜி.டி.பி குறைத்து மதிப்பிடப்படுகிறது. மறு பக்கம், சூழல் பாதிப்பால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் மற்றும் சூழல் பாதுகாப்புச் செலவையும் மாநில ஜி.டி.பி-யில் கழிக்காமல் கணக்கிடுவதில் அது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாகிறது. உதாரணமாக, திருப்பூரில் இயங்கும் பின்னலாடை தொழிற்சாலைகள் 2018-19-ம் ஆண்டு சுமார் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டின. இது மாநில ஜிடிபியில் வருவாயாகக் காட்டப்படுகிறது. ஆனால், இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகளால் ஏற்படும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருளாதார இழப்பு (உதாரணமாக, உடல் நலம் பாதிப்படைவதாலும், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படுவதாலும், பல்லுயிர்ப் பெருக்கம் அழிவதாலும் ஏற்படும் இழப்புகள்) மற்றும் சூழல் பாதுகாப்புச் செலவு (உதாரணமாக, நோய்த் தடுப்பு மருத்துவச் செலவு, மண் வளப் பாதுகாப்புச் செலவு போன்றவை) சரியான முறையில் கணக்கிடப்பட்டு மாநில ஜி.டி.பி-யிலிருந்து கழிக்கப்படுவதில்லை.

Environmental pollution

எனவே, தற்போதைய மாநில ஜிடிபி இயற்கை வளம் சார்ந்த நிலைத்த வளர்ச்சியையோ, உண்மையான பொருளாதார நலனையோ வெளிப்படுத்தும் சரியான குறியீடாக அமைவதில்லை. ஆகவே, விலையற்ற சூழல் சேவைகளின் பண மதிப்பையும், சூழல் சார்ந்த பொருளாதார இழப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு செலவு ஆகியவற்றையும் முறையாக அவ்வப்போது கணக்கிட்டு பசுமை ஜி.டி.பி-யைத் தயாரிக்கும்பட்சத்தில் மாநிலத்தில் முறையான சூழல் கொள்கைகளை வகுப்பதோடு, மாநிலத்தின் நிலைத்த வருவாயை உறுதி செய்து சமூகத்தின் பொருளாதார நலனையும் மேம்படுத்த முடியும்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/why-green-gdp-is-important-in-current-scenario

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக