Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

``தோனி மட்டும் ஸ்பெஷலா?'' கோபத்தால் கரியரையே முடித்துக்கொண்ட ரெய்னா! #SureshRaina #CSK

சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னாவின் திடீர் வெளியேற்றம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 'பர்சனல்' காரணங்களுக்காக 2020 சீசனில் இருந்தே வெளியேறினார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருந்தாலும் பின்னணியில் பல கசப்பான சம்பவங்கள், ஈகோ யுத்தங்கள் நடந்ததாக சொல்கிறார்கள்.

நம்பர் - 2 ரெய்னா!

2008-ல் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டு ஏலம் நடத்தப்பட்டபோதே தோனிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னாவை வாங்குவதற்குத்தான் அதிக ஆர்வம் செலுத்தியது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். தோனி 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட, ரெய்னா 2.5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். தோனிக்கு அடுத்தபடியாக துணைக்கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். தோனி 'தல'யாகக் கொண்டாடப்பட சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல' எனக்கொண்டாடியது சிஎஸ்கே. ஏலம் வரும்போதெல்லாம் தோனிக்கு அடுத்தபடியாக அதிக தொகைக்கு சுரேஷ் ரெய்னாவை ரீடெய்ன் செய்துகொண்டே வந்தது சிஎஸ்கே. 2018-ல் முழுமையான ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாகவும் தோனியை ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கும், சுரேஷ் ரெய்னாவை 11 கோடி ரூபாய்க்கும் ரீடெய்ன் செய்துகொண்டது சிஎஸ்கே. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2021 ஏலத்தில் இன்னும் அதிக தொகைக்கு ரீடெய்ன் செய்யப்பட இருந்ததோடு, சென்னையின் கேப்டனாகவும் நியமிக்கப்பட இருந்தார் சுரேஷ் ரெய்னா. இந்நிலையில்தான் சின்ன ஈகோ மோதலில் சிஎஸ்கே-வை விட்டே வெளியேறியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

தோனி

துபாயில் என்ன நடந்தது?

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னையில் இருந்து துபாய் சென்றது சிஎஸ்கே அணி. துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபா அருகில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். ஆறு நாள்கள் க்வாரன்டீனில் இருந்துவிட்டு 27-ம் தேதி மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு 28 முதல் பயிற்சியைத் தொடங்குவதுதான் திட்டமாக இருந்தது. இந்நிலையில் க்வாரன்டீனில் இருந்தபோதுதான் சில ஈகோக்கள் எட்டிப்பார்த்திருக்கின்றன.

''தோனிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைபோல எனக்கும் ஒரு அறைவேண்டும்'' என அணியின் மேலாளரும், அறைகளை ஒதுக்கியவருமான ரஸல் ராதாகிருஷ்ணணிடம் கேட்டிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. ''அதுபோன்று இன்னொரு அறையில்லை'' என்று அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ''தோனிக்கு மட்டும் நல்ல வியூ தெரியும்படி ஹோட்டல் அறையை ஒதுக்கிவிட்டு, எனக்கு மட்டும் சரியான அறையை ஒதுக்காதது ஏன்... தோனி மட்டும் ஸ்பெஷலா?'' எனக் கேட்டிருக்கிறார். அங்கிருந்துதான் விஷயங்கள் அப்படியே எல்லைமீறியதாகச் சொல்லப்படுகிறது.

தோனி, ரெய்னா

அறை விவகாரம் தொடர்பாக ரெய்னா பேசியது தோனிக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வீடியோ கால் மூலம் ரெய்னாவிடம் பேசியிருக்கிறார் தோனி. அப்போது தோனியிடமும் தனக்கு செகண்ட் கிரேட் ட்ரீட்மென்ட்தான் தரப்படுகிறது என சொல்லியிருக்கிறார். இந்நிலையில்தான் கொரோனா டெஸ்ட் ஆகஸ்ட் 27-ம் தேதி எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் மற்றும் ரித்துராஜ் கெய்க்வாட் இருவருக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அணியின் உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு பாசிட்டிவ் எனத்தகவல் வர சுரேஷ் ரெய்னா இன்னமும் பதற்றம் ஆகியிருக்கிறார். உடனடியாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனுக்கு போன் அடித்திருக்கிறார் ரெய்னா.

அப்போது, ''அணி நிர்வாகம் சரியான பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கவில்லை, சென்னைக்குத் தேவையில்லாமல் வரவழைத்து முகாம் நடத்தியதுதான் இந்த நிலைக்குக் காரணம்'' எனச் சொல்லியிருக்கிறார். அதோடு துபாய் ஹோட்டலில் சில வீரர்கள் மற்ற வீரர்களின் அறைகளுக்குச் சென்றதாகவும், சரியான க்வாரன்டீன் விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்றும் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட அலட்சியத்தால் தன் குடும்பத்தை நினைத்து பயமாகயிருப்பதாகவும், இதுபோன்ற சூழலில் தன்னால் விளையாடமுடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவல் மீண்டும் தோனிக்கு சொல்லப்பட்டிருக்கிறது. தோனி பேசியும் சுரேஷ் ரெய்னா சமாதானம் ஆகாததோடு, கோபத்தில் சில வார்த்தைகளையும் விட்டிருக்கிறார். இந்தப் பிரச்னைகள் எல்லாம் அணியின் உரிமையாளரான என். சீனிவாசனுக்குப் பகிரப்பட்டிருக்கிறது. ரெய்னாவை பொறுமையாக இருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர் நான் இந்தியாவுக்குப் போகிறேன் எனத் திரும்பத் திருப்ப சொல்ல, அவரைத் தடுக்கவேண்டாம் என தோனியும் சொல்ல ரெய்னா இந்தியா வந்துவிட்டார்.

சுரேஷ் ரெய்னா

Also Read: சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே-வில் இருந்து ஏன் வெளியேறினார்... தள்ளிப்போகுமா ஐ.பி.எல்?! #CSK

சிஎஸ்கே அணி என்பது அணிக்குள்ளேயே மூன்று அடுக்குகளைக் கொண்டது. தோனி, காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபெளம்மிங், மேலாளர் ரஸல் ஆகியோர் முதல் அடுக்கில் இருப்பவர்கள். இவர்களைத்தாண்டி எந்தத் தகவலும் வெளியே போகாது. அப்படிப்பட்ட தகவல் தொடர்பு அரண் கொண்டது சிஎஸ்கே. அதனால்தான் ரெய்னா விவகாரத்தில் என்ன நடந்தது என்பது வெளியில் தெரியவே ஒருநாளுக்கும் மேல் ஆனது.

கோபத்தால் சிஎஸ்கே அணியில் இருந்த இடத்தை இழந்திருப்பதோடு, ஆண்டுக்கு 11 கோடி ரூபாயையும் இழந்திருக்கிறார் ரெய்னா. இந்நிலையில் தவற்றை உணர்ந்து அவர் திரும்ப அணிக்குள் வருவதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்கிறார்கள். ஆனால், அவரை தோனியும், அணி நிர்வாகமும் பழையபடியே ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.



source https://sports.vikatan.com/cricket/ego-clashes-in-csk-reason-behind-rainas-exit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக