Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

`தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் புகழ்ந்த பிரதமர் மோடி!’- மான்கி பாத் உரை ஹைலைட்ஸ்

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் `மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ என்ற பொருளில் அகில இந்திய வானொலி வழியாக `மான்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார். அந்தவகையில், இன்று வானொலி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

கொரோனா

அவர் பேசுகையில், ``பொதுவாக இந்த நாள்களில் நாம் அதிகப்படியான பண்டிகளைக் கொண்டாடுவோம். ஆனால், கொரோனா சூழல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கிறார்கள். அது முன்மாதிரியாக மாறியிருக்கிறது. நாம் கொண்டாடும் விழாக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்கும்வண்ணம் நாம் நிறைய பண்டிகைகளைக் கொண்டாடிவருகிறோம். ஓணம், உலக அளவில் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியிருக்கிறது. விவசாயம் மற்றும் அறுவடை ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகொண்டது ஓணம் பண்டிகை’’ என்று குறிப்பிட்டார்.

Also Read: புதிய கல்விக் கொள்கை: `எப்படி சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது!’ - பிரதமர் மோடி

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

பிரதமர் மோடி, பொம்மைகளின் முக்கியவத்துவம் பற்றி விரிவாகப் பேசினார். ``உலக அளவில் விளையாட்டு பொம்மைகளுக்கான சந்தை என்பது ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு மதிப்புகொண்டது. ஆனால், இதில் இந்தியாவின் பங்கு என்பது மிகவும் குறைவு. விளையாட்டு பொம்மைகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கைகோக்க வேண்டும். உள்ளூர் விளையாட்டு பொம்மைகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தமிழகத்திலேயே தஞ்சாவூர், பொம்மைகள் உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இப்படியான பாரம்பர்ய பொம்மை வகைகளைப் போற்ற வேண்டும். விளையாட்டு பொம்மை என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவது, புதிய கல்வித் திட்டத்தில் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார். மேலும், `ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இன நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர், பயிற்சிபெற்ற நாய்கள் ராணுவத்தில் ஆற்றும் பணிகள் குறித்தும் பேசினார். அதேபோல், ஆசிரியர்கள் தினம், ஊட்டச்சத்து உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடி, தனது மான்கி பாத் உரையில் குறிப்பிட்டார்.



source https://www.vikatan.com/news/politics/pm-modi-praises-tanjore-thalaiyatti-pommai-in-his-maan-ki-baat-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக