மாணவன் கடத்தல்
தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, மதனபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் முடிச்சூர் சாலையில் ஹோட்டல் நடத்திவருகிறார். இவரின் மகன் நவஜீவன் (15) தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 28-ம் தேதி நவஜீவன், பைக்கில் மதனபுரம் சாலையில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் காரில் கடத்தினர். பின்னர் தங்கராஜை தொடர்பு கொண்டு உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் கொடு என மிரட்டினர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தாம்பரம் கூடுதல் உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சகாதேவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது காரின் பதிவு நம்பரைக் கண்டுப்பிடித்த போலீஸார் அதுதொடர்பாக விசாரித்தனர். மேலும் செல்போன் டவர் மூலம் மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் நம்பர்களை ட்ரேஸ் செய்தனர்.
களமிறங்கிய போலீஸ் டீம்
போலீஸாரின் துரிதமான நடவடிக்கையால் நவஜீவனைக் கடத்திய கார், செங்கல்பட்டு நோக்கிச் செல்வதை போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி அலுவலகத்திலிருந்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு மாணவன் கடத்தல் குறித்த தகவல் கூறப்பட்டது. உடனடியாக மறைமலைநகர் போலீஸார் காரை எதிர்பார்த்து காத்திருந்தனர். மறைமலைநகர் அருகே கார் வந்ததும் அதை போலீஸார் மடக்கினர். காரிலிருந்த நவஜீவன் மற்றும் அவரைக் கடத்தியவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீஸார் கூறுகையில், ``தங்கராஜின் உணவகத்தில் ஹரிகரன் (21) என்பவர் வேலைப்பார்த்தார். அப்போது அவர் ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், ஊழியர் ஹரிகரனை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ஹரிகரன், தங்கராஜை பழிவாங்கத்தான் அவரின் மகன் நவஜீவனை நண்பர்களோடு சேர்ந்து கடத்தியுள்ளார், இந்த வழக்கில் விக்னேஷ் (20) கார் டிரைவர் சரத்குமார் (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தற்போது நவஜீவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஹோட்டலில் வேலைப்பார்த்து வருகிறார். மாணவன் கடத்தப்பட்ட 5 மணி நேரத்துக்குள் மீட்டுள்ளோம்" என்றனர்.
பொய் சொல்றீங்க
தங்கராஜ் கொடுத்த புகாரில், `` நான் ஹோட்டலில் இருந்தபோது 28-ம் தேதி காலை 11 மணியளவில் என்னுடைய செல்போன் நம்பருக்கு ஒருவர் போன் செய்தார். அதில் பேசியவர் உங்களது மகனை முடிச்சூர் மதனபுரம் மெயின் ரோட்டில் பைக்கில் வரும்போது நாங்கள் வழிமறித்து கடத்தி உள்ளோம். 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்கள் மகனை உயிரோடு விட்டுவிடுகிறோம். சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணி தாம்பரம் பஸ் ஸ்டாண்டு வந்து போன் செய்யுங்கள். போலீஸிக்கு போனால் உங்கள் மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டினான். நான் உடனே நீங்கள் பொய் சொல்றீங்க, என் பையன் வீட்டில்தான் உள்ளான் என்று கூறினேன். அதற்கு அவன் உங்கள் மகனிடமே பேசுங்கள் என்று செல்போனை நவஜீவனிடம் கொடுத்தார். நான் என் மகனின் குரல் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அப்போது அவன் நான் கடைக்கு வரும் போது என்னை மூன்று பேர் வழிமறித்து டிஎன் 31 bb 6363 என்ற வெள்ளை நிற காரில் ஏற்றி வண்டலூர் கொண்டு சென்றார்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் நம்மிடம் வேலைப்பார்த்த ஹரிகரன். நான் பயந்து என்னை வீட்டில் கொண்டு போய் விடுங்கள் இல்லை என்றால் சத்தம் போடுவேன் என்றேன். உடனே ஹரிகரன் கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டினான்.
Also Read: சென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்குக் குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர்
எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்று கூறும்போதே செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹரிகரன் என்பவர், ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 6 மாதம் கடையில் வேலைப்பார்த்தவர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயம் என்பவரின் மகன். ஹரிகரனின் பழக்க வழக்கம் சரியில்லாமல் இருந்ததால் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டேன். எனவே என் மகனை கடத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்டு மிரட்டும் ஹரிகரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்து என் மகனை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், இந்திய தண்டனைச் சட்டம் 341, 364 A, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹரிகரன், விக்னேஷ், சரத்குமார் ஆகிய 3 பேரையும் சிறையில் அடைத்தார்.
மகனை மீட்டதும் தங்கராஜிம் அவரின் மனைவி ராஜகுமாரியும் நவஜீவனைக் கட்டிப்பிடித்து காவல் நிலையத்திலேயே முத்தம் கொடுத்தனர். பின்னர் மகனை மீட்டுக்கொடுத்த போலீஸாருக்கு தங்கராஜ் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.
பள்ளி மாணவன், காரில் கடத்தப்பட்ட போது பதற்றப்படாமல் புத்திச்சாலித்தனமாக காரின் பதிவு நம்பர், கடத்தியவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் தந்தையிடம் பகிர்ந்தாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/crime/kidnapped-boy-saved-and-three-persons-arrested-in-tambaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக