Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

கன்னியாகுமரி:`உழைப்பால் உயர்ந்தவர்’- வசந்தகுமார் உடலுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்கள் அஞ்சலி

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று நள்ளிரவு சொந்த ஊரான கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம், குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, அவரது மகன்கள் விஜய்வசந்த், வினோத்குமார், மகள் தங்கமலர் ஆகியோர் உடலின் அருகில் அழுதுகொண்டே இருந்தனர். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.

வசந்தகுமார் உடலுக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்

அஞ்சலி செலுத்திவிட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,``சாதாரண காங்கிரஸ் தொண்டனாக இருந்து மாநில அளவில் பொறுப்பேற்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது பெரிய விஷயம். சாதாரண தொழில் நிறுவனத்தை தொடங்கி இந்திய அளவில் பெரிய நிறுவனமாக மாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், கட்சியினருக்கும், அவர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் மன அமைதிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.

Also Read: கொரோனாவால் உயிரிழந்த நாட்டின் முதல் எம்.பி! - வசந்தகுமார் மறைவால் கலங்கும் ஆதரவாளர்கள்

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினர் கொடிக்குந்நில் சுரேஷ் கூறுகையில், ``கன்னியாகுமரியின் வளர்ச்சிக்காக நிறைய பேசியிருக்கிறார். சுற்றுலா போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக குரல் கொடுத்தார். எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், எம்.பி-யாக இருந்தபோதும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினார்" என்றார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ``வசந்தகுமார் எளிமையானவர்; அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவரே, ஒரு முதலாளி. ஆனால், மற்றவர்களை முதலாளி என அழைப்பார். யாரையும் கடிந்து பேசியது இல்லை. அரசு விழா, தனிப்பட்ட விழாக்களில் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தக் கூடியவர். நல்ல நண்பர். டெல்லியில் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரை காங்கிரஸ் இழந்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.

வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,``அவர் உழைப்பால் உயர்ந்தவர். காமராஜர் மீது தீவிர பற்றுக்கொண்டவர். எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர். அவரது மறைவை நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவருடைய புகழ் வாழ வேண்டும். அவருடைய குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல மனதுகொண்டவர் மறைந்துவிட்டாரே என தமிழக மக்கள் வருந்துகிறார்கள். அவரது புகழ் வாழ வேண்டும், லட்சியம் வெல்ல வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/death/political-leaders-pays-respect-to-h-vasanthakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக