Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தடாலடியான பேரமா... நிதானமான பயணமா? என்ன செய்யப்போகிறார் பிரேமலதா? #TNElection2021

ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசிய வார்த்தைகள் இவை. ஒருபுறம் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும், `யாருக்கு எவ்வளவு சீட்டுகளை ஒதுக்கலாம்...’ என கூட்டணிக் கணக்குகளை வகுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தங்கள் கட்சிக்கான டிமாண்டை அரசியல்களத்தில் முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா.

பிரேமலதா விஜயகாந்த்

அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும்போதே, `சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பொதுக்குழுவைக் கூட்டி கூட்டணியை முடிவு செய்வோம்’ என அ.தி.மு.க-வுக்கும், விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்துச் சொன்ன கண நேரத்தில், ஸ்டாலினை விமர்சித்து `நாங்கள் இருக்கிறோம்' என தி.மு.க-வுக்கு தங்களின் இருப்பைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் பிரேமலதா.

தே.மு.தி.க-வின் அரசியல் கணக்குகள் ஒருபுறமிருக்க, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும், தே.மு.தி.க-வின் தேவையை எந்த அளவுக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதையும், தே.மு.தி.க-வின் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அலசுவதே இந்தக் கட்டுரை.

முதலில் தே.மு.தி.க குறித்த தி.மு.க-வின் நிலைப்பாட்டைப் பார்ப்போம்.

ஏற்கெனவே, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றது தி.மு.க. தற்போதுவரை, அந்தக் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியே நீடிக்க விரும்புகிறது தி.மு.க. அதேவேளையில் புதிதாக ஒரு சில கட்சிகளைக் கூட்டணிக்குள் இழுப்பதற்கான முயற்சிகளையும் செய்துவருகிறது தி.மு.க. அந்தப் பட்டியலில் தே.மு.தி.க-வும் ஒன்று. நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலைப்போல வெற்றி வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என நினைக்கிறது அந்தக் கட்சி. தென்மாவட்டங்கள், வடமாவட்டங்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை.

தே.மு.தி.க பிரேமலதா - ஸ்டாலின்

அதேவேளையில், மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க-வைவிட குறைவான பலத்துடனேயே களத்தில் நிற்கிறது தி.மு.க. அதைச் சரிசெய்ய அந்தப் பகுதிகளில் கணிசமான கவுண்டர் மற்றும் அருந்ததிய சமூக மக்களின் வாக்கு வங்கியை வைத்திருக்கும் தே.மு.தி.க-வை தன்பக்கம் இழுக்க முயன்றுவருகிறது. இதற்காக மூன்றுகட்டப் பேச்சுவார்த்தை நடந்தபோதும், இன்னும் ஒரு சுமுக முடிவு எட்டப்படவில்லை. ஆனால், `கண்டிப்பாக ஒரு நல்ல முடிவை எட்டி தே.மு.தி.க-வை கூட்டணிக்குள் இழுத்துவிட வேண்டும் என்கிற பெருமுனைப்பில் இருக்கிறார்கள் தி.மு.க-வின் இளம் ரத்தங்கள்’ என்கிறது தி.மு.க தரப்பு. அதேவேளையில், தே.மு.தி.க கூட்டணிக்கு வந்தால், அந்தக் கட்சிக்கு வெறும் பத்து சீட்டுகள் மட்டுமே வழங்க முடிவு செய்திருக்கிறது தி.மு.க தலைமை. அதனாலேயே இன்னும் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில்தான் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் பிரேமலதா. மறுபுறம் அ.தி.மு.க-வுக்கும் கூட்டணி குறித்து சிறு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தான் அவர் பேச்சு அமைந்திருக்கிறது. தே.தி.மு.க தரப்பில் சுதீஷ் ஓரளவு தி.மு.க-வுடன் நெருங்கி வருவதாகவும், பிரேமலதா மட்டும்தான் பல வகையில் முரண்டுபிடிப்பதாகவும் பேசப்படுகிறது. ஆனால், தே.மு.தி.க திட்டமிட்டே இப்படியொரு யுக்தியைக் கையாள்வதாகவும் சொல்லப்படுகிறது.

`எப்படியாவது தே.மு.திக-வை நம் பக்கம் இழுத்துவிட வேண்டும், ஆனால், அவர்கள் இழுத்த இழுப்புக்கு செல்லக் கூடாது’ என தி.மு.க தரப்பு நினைக்க, `15 சீட்டுக்கு மேல் ஓர் இடம்கூட இல்லை. விருப்பமிருந்தால் கூட்டணியில் நீடிக்கட்டும். இல்லையென்றால், கூட்டணியைவிட்டு வெளியேறிக்கொள்ளட்டும். தி.மு.க-வுடன் அவர்கள் பேசிவருவது நமக்குத் தெரியாதா?’ என கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.

பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி

`சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க-வோடு போட்டி போட்டுக்கொண்டு ஐந்து இடங்கள் வாங்கினார்கள். ஆனால், வடசென்னையில் நிறுத்த வேட்பாளரே இல்லாமல் சேலத்திலிருந்து ஒருவரை இங்கு கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்தினார்கள். சீட்டு மட்டுமா, கடந்த தேர்தலில் அந்தக் கட்சி பெற்ற தொகையும் மிக அதிகம். ஆனால், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அதில் ஒரு பைசாகூட செலவு செய்ததாகத் தெரியவில்லை. நாம் பணம் கொடுத்தது தேர்தலுக்குச் செலவழிக்கத்தானே தவிர, அவர்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக அல்ல. இப்போதும் முப்பது சீட்டு கேட்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு வாக்குவங்கியே இல்லை. தவிர ஒரு சீட்டுக்கு அந்த அம்மா கேட்கும் தொகைக்கு, பேசாமல் நம் கட்சியில் ஒருவருக்கு வாய்ப்பளித்தால், கட்சியில் அனைவரையும் திருப்திப்படுத்தியதுபோலவும் இருக்கும்... தேவையற்ற செலவும் இல்லை’ என முதல்வரிடம் கொந்தளித்திருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். ஆனால், இந்தப் பக்கமும் சுதீஷ் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் நீடிக்கவே விரும்புவதாகவும், பிரேமலதாவே மாற்றத்தை விரும்புவதாகவும் தே.மு.தி.க தரப்பில் நடந்துகொள்கிறார்களாம். இரண்டு பக்கமுமே சுதீஷ் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார். இன்னொரு புறம் பிரேமலதா கெடுபிடி முகம் காட்டுகிறார். இது ஒருவித காய்நகர்த்தல்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Also Read: எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

நிர்வாகிகளின் விருப்பம் என்ன?

செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்களும் நிர்வாகிகளும் முன்வைக்கிறார்கள்'' என பிரேமலதா சொல்லியிருந்தார். ஆனால், தே.மு.தி.க தரப்பில் விசாரித்தால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. தங்கள் கைகளில் இருக்கிற தொகையெல்லாம் இழந்தாகிவிட்டது. 2014-ம் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து கடந்து மூன்று தேர்தல்களில் தொடர் தோல்விதான். கட்சியிலிருந்தும் நிர்வாகிகளுக்குப் பணம் வழங்கப்படுவதில்லை. தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க தரப்பிலும் தே.மு.தி.க நிர்வாகிகளுக்கு போதிய அளவில் ஒத்துழைப்பு இல்லாததால் வெறுத்துப்போயிருக்கிறார்களாம் நிர்வாகிகள். அதனால் இந்தமுறையாவது வெற்றியை நோக்கிய பயணமாக நம் பயணம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்களாம். அதனால், தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கே பெருவாரியான நிர்வாகிகள் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதீஷ் - எடப்பாடி பழனிசாமி

''2006, 2009 தேர்தல் பெற்ற வாக்குகளையும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியையுமே இன்னமும் தே.மு.தி.க தலைமை நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், 2014 தேர்தலில் அடைந்த படுதோல்வியையும், 2016 தேர்தலில் விஜயகாந்தே டெபாசிட் இழந்ததையும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் இல்லாமல் அல்லாடியதையும் அந்தம்மா மறந்துவிடுகிறார். இன்னமும் தங்களைப் பெரிய கட்சி எனப் பகல் கனவு காண்கிறார். தற்போது பழைய விஜயகாந்தும் இல்லை, கட்சி ஆரம்பித்த புதிதில் கடுமையாகக் களப்பணியாற்றிய நிர்வாகிகளும் அவர்களுடன் இல்லை, முதல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அவர்கள் பெற்ற வாக்குவங்கியும் இல்லை.

அப்படி எதுவுமே இல்லாமல் அந்தம்மா கூட்டணிக் கட்சிகளிடம் வீம்புகாட்டி சீட்டுகளைப் பெறுவதைவிட, தேவையான அளவு சீட்டுகளைப் பெற்று, அதில் வெற்றிக்காக உழைத்து கட்சியையும், இழந்துவிட்ட வாக்குவங்கியையும் மீட்டாலே கட்சி நிர்வாகிகளுக்கு அது புத்துணர்ச்சியையும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தும். தே.மு.தி.க-வுக்குத் தற்போதைய தேவை தடாலடியான பேரமல்ல... நிதானமான பயணம்தான்'' என்றார் நம்மிடம் பேசிய தே.மு.தி.க-வின் முன்னாள் நிர்வாகி ஒருவர்.

இந்த விஷயத்தில் தே.மு.தி.க என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmdk-partys-election-strategy-for-upcoming-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக