Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

சென்னை: `பள்ளி மாணவி மீது ஒருதலைக்காதல்; பெண் தொழிலதிபருக்கு வந்த அதிர்ச்சி வீடியோ' - சிக்கிய மாணவன்

சென்னை குமரன்நகர் காவல் நிலையத்தில் 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தன்னுடைய செல்போன் நமபருக்கு இரவு, பகல் என பாராமல் ஆபாச வீடியோ, புகைப்படங்கள் வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் செல்போன் நம்பருக்கு ஆபாச வீடியோ, புகைப்படங்கள் அனுப்பியவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு செல்போன் நம்பர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது அந்தச் செல்போன், பள்ளி மாணவன் ஒருவருடையது எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவனைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

Representational Image

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பள்ளி மாணவனும், அந்தப் பெண்ணின் மகளும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவியிடம் முதலில் அந்த மாணவன் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியை மாணவன், ஒரு தலையாகக் காதலித்துள்ளார். இந்தத் தகவலைத் தெரிந்ததும் மாணவி, அந்த மாணவனுடன் பேசுவதைத் தவிரித்துள்ளார். இதற்கு மாணவியின் அம்மாதான் காரணம் என மாணவன் கருதியுள்ளார். அதனால், மாணவியின் அம்மாவின் செல்போன் நம்பரை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார் மாணவன். மேலும், அந்தச் செல்போன் நம்பரோடு மாணவியின் அம்மாவின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து பதிவேற்றி, தவறான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். அதனால், மாணவியின் அம்மாவுக்கு தவறான போன் அழைப்புகள் வந்துள்ளன. மாணவியின் அம்மா கொடுத்த புகாரின்பேரில் மாணவன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 56, 570, மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354D மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவியின் அம்மா பிசினஸ் செய்துவருகிறார். அவரின் செல்போன் நம்பர் மற்றும் மார்பிங் போட்டோக்கள் இன்ஸ்ட்ராகிராமில் பதிவு செய்யப்பட்டதும் சிலர் அந்த நம்பருக்கு நள்ளிரவில் போன் செய்து தொல்லைக் கொடுத்துள்ளனர். மேலும், அந்த நம்பருக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அதனால் மாணவியின் அம்மா மன வேதனையடைந்துள்ளனர். ஆரம்பத்தில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். அதன்பிறகுதான் தைரியமாக அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கடந்த மாதம் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியின் அம்மா புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய மகளும் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் இன்ஜினீயர் ஒருவரும் நட்பாகப் பழகியுள்ளனர்.

அம்பத்தூர் காவல்நிலையம்

Also Read: க்ரைம் ஸ்பெஷல்: நள்ளிரவில் ஹஸ்கி வாய்ஸ்

இன்ஜினீயருடன் என் மகள் பேசுவதை தவிர்த்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இன்ஜினீயர் என் மகள் மற்றும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் செல்போன் நம்பர்களை இணையதளத்தில் தவறாகப் பதிவு செய்துள்ளார். மேலும் அவர், தன்னுடைய சகோதரி மற்றும் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்களின் செல்போன் நம்பர்களையும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களையும் அதில் பதிவேற்றியுள்ளார். அதனால், எங்களின் செல்போன் நம்பர்களுக்கு தேவையில்லாத போன் அழைப்புகள் வந்தன. மேலும், அதில் பேசியவர்கள் அநாகரீமாகவும் பேசினர். அதனால் நாங்கள் மனவேதனையில் உள்ளோம். சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஜினீயரை கைது செய்து சிறையில் அடைத்தோம். ஊரடங்கில் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நேரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இணைய தள குற்றங்களும் இருமடங்காகியுள்ளன. இணையதள குற்றங்களைத் தடுக்கத்தான் சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர் அலுவலகங்களில் சைபர் க்ரைம் குற்றப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் பாதிக்கப்படுபவர்கள் தயக்கமின்றி புகார்களைக் கொடுக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அதே நேரத்தில் இணையதளம் மூலம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-school-student

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக