Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி பிளாஷ்பேக் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு இரு அவைகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனா,ல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல்.

பட்ஜெட் மற்றும் குளிர்கால கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்வோம்.

#நாடாளுமன்றம்

பார்லிமென்ட், 1858-ம் ஆண்டு கவுன்சில் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அமைப்பான இது 144 தூண்களைக் கொண்ட "ஜனநாயகக் கோயில்' என போற்றப்படுகிறது. பிரிட்டன் கட்டடவியல் வல்லுநர்களான சர் எட்வின் லிட்டியான்ஸ் மற்றும் சர் ஹார்ப்ரட் பேக்கரினால் வடிவமைக்கப்பட்டு 1921-ம் ஆண்டு துவங்கி 1927 ஜனவரி 18-ல் இர்வின் பிரபுவால் திறக்கப்பட்டது. அசோகச் சக்கரத்தின் வடிவத்தைப் போல வட்ட வடிவில் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதி நாடாளுமன்றம் குறித்து கூறுகிறது.

Also Read: நானே கேள்வி நானே பதில்..! - சில சபாஷ் நிகழ்வுகள் #MyVikatan

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டதால் ஆங்கிலேயரின் பாராளுமன்ற முறையை நன்கறிந்திருந்தனர். இங்கிலாந்தில் மக்களவை, பிரபுக்களவை என இரண்டு அவைகள் இருப்பதைப் போன்றே இந்தியாவிலும் மக்களவை, மாநிலங்களவை என ஈரவை முறை வந்தது. உலகின் 79 நாடாளுமன்றங்கள் இரு அவைகளை கொண்டது. அதில் இந்தியாவும் ஒன்று.

Also Read: `விவாதங்களில் நம்பர் ஒன் ரவீந்திரநாத்; அன்புமணி..?!' -அதிர்ச்சி கொடுத்த நாடாளுமன்ற புள்ளிவிவரம்

நாடாளுமன்ற கூட்டங்கள் ஆறு மாத இடைவெளியில் கூட்டிட வேண்டும். அவை முறையே

*பட்ஜெட் கூட்டம் (பிப்ரவரி-மே)

*மழைக்கால கூட்டம் (ஜூலை-ஆகஸ்ட்)

*குளிர்கால கூட்டம் (நவம்பர்-டிசம்பர்)

இதுதவிர சிறப்புக் கூட்டத்தை பத்தில் ஒரு பங்கு மக்களவை உறுப்பினரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் கூட்டலாம்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கினர் இருக்க வேண்டும். மக்களவையில் 55 பேரும், மாநிலங்களவையில் 25 பேரும் இருக்க வேண்டும். இல்லையெனில் அவை ஒத்திவைக்க வேண்டும்.

நாடாளுமன்றம்

#நாடாளுமன்றக் குழுக்கள்

நாடாளுமன்றக் குழுக்கள் அரசியலமைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இக்குழு நாடாளுமன்றத்தின் அமைப்பு, அதிகாரம், சட்டமியற்றுவதற்கான உதவி, நிதி சம்பந்தமான ஆய்வு ஆகியவற்றை ஆராய்கின்றன.

நாடாளுமன்ற அவை பெரியதாய், விரிவாக விவாதங்களை பரிசீலிக்க, மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்ய, சட்ட நுணுக்கத்துடன் தெளிவு ஏற்படுத்த, பண மற்றும் நிதி மசோத்தாக்களுக்கு சட்டவடிவம் கொடுப்பது என.. இதன் பணிகள் மகத்தானது. நிலைக்குழு, ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு குழுக்கள் தவிர துறைவாரியான 17 நிலைக்குழுக்கள் 1993-ல் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு நிலைக் குழுவிலும் மக்களவை உறுப்பினர் 30 பேர், மாநிலங்களவை உறுப்பினர் 15 பேர் என 45 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு நிலைக்குழுவும் ஓராண்டு இருக்கும். பதினோரு நிலைக்குழு தலைவர்களை மக்களவைத் தலைவரும், 6 நிலைக்குழு தலைவர்களை மாநிலங்களவைத் தலைவரும் நியமிக்கின்றனர்.

#வினாக்கள்

ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடும்போதும் முதல் ஒரு மணி நேரம் வினா நேரம். இதில், முதலாவதாக விண்மீன் வினாக்களுக்கு (starred questions) வாய்மொழி விடையும், விண்மீன் குறிகளற்ற வினாக்களுக்கு (unstarred questions) எழுத்துப்பூர்வ விடையும் அளிக்கப்படும். பத்து நாள்களுக்குள் அவகாசம் அளித்து கேட்கப்படும் வினாக்கள் குறுகிய கால வினாக்களாகும்.

நாடாளுமன்றம்

பூஜ்ய நேரம் என்பது நாடாளுமன்றத்தில் யார் வேண்டுமானாலும் தங்களது கேள்விகளை முன்வைக்கும் நடைமுறை. இது 1962-ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்து 12 மணிக்குத் துவங்குவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.

வினா நேரத்திற்கும், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும் இடைப்பட்டது பூஜ்ய நேரமாகும். இதில் கேள்வி எழுப்ப, முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டியதில்லை.

#கோரிக்கைகள்

அன்றைய நாள் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு கோரிக்கைகள் வைக்கப்படும். பல்வேறு வகையான கோரிக்கைகள் உள்ளன அவை.. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அதை "தனிச்சிறப்புடைய கோரிக்கை" எனலாம்.முதலில் தாக்கல் செய்யப்பட்ட அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றாக அமைவது "மாற்றுத்தீர்மான கோரிக்கை". அதனையொட்டிய கோரிக்கை "துணை தீர்மானக் கோரிக்கை".

ஒரு விவகாரம் பற்றிய விவாதத்தை நிறுத்த பயன்படுவது "நிறுத்தத் தீர்மான கோரிக்கை". நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கப்பட்ட சலுகைகளை மீறிவிட்டால் "சலுகை தீர்மானக் கோரிக்கை". அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர உறுப்பினர் பயன்படுத்துவது "கவன ஈர்ப்புத் தீர்மானக் கோரிக்கை". தீர்மானத்தை ஒத்திவைக்க 50 பேர் ஆதரித்தால் அனுமதிப்பது "ஒத்திவைப்புத் தீர்மான கோரிக்கை".

நாடாளுமன்றம்

அமைச்சரவைக்கு எதிராகக் கொண்டு வருவது "நம்பிக்கையில்லா கோரிக்கை". நிதிஆண்டு துவக்கத்திலும், புதிய அரசு அமைந்தவுடனும் குடியரசுத் தலைவர் அவையில் உரையாற்றுவார். அதற்கானது "நன்றி நவிலல் தீர்மானக் கோரிக்கை". இவை தவிர தேசிய தீர்மானக் கோரிக்கை, ஒழுங்கு மீறல், அரைமணி நேர விவாதக் கோரிக்கை, சிறப்பு தெரிவிப்புத் தீர்மான கோரிக்கை என இருக்கும்.

நாடாளுமன்றத்தில் முக்கிய முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிப்பவை. அதில் சாதாரண பெரும்பான்மை என்பது அவைத் தலைவர் தவிர அவையில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தீர்மானிப்பது. சட்டத்திருத்தம் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க மூன்றில் இருபகுதி பெரும்பான்மை தேவை. இதனை சிறப்புப் பெரும்பான்மை என்கின்றனர்.

#கடந்த ஆண்டு


கடந்த ஆண்டு புதிய மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு, குடியரசு தலைவர் உரை மற்றும் 2019 பட்ஜெட் தாக்கல் ஒருங்கே நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் மசோதா உட்பட 36 மசோதக்கள் நிறைவேறியன. மக்களவை 281 மணி நேரமும், மாநிலங்களவை 195 மணி நேரமும் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

1969-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். இவர் கேபினெட் அமைச்சருக்கு சமமானவர். இரு அவைகளிலும் கட்சி கொறடாக்கள் இருப்பர்.

Representational Image

#மசோதா

சட்ட முன் வரைவுதான் மசோதா. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற மசோதாவே சட்டமாகிறது. இருவகை மசோதாக்கள் உள்ளன.

1.பொது மசோதா - அரசின் கொள்கையை வெளிப்படுத்தும் விதத்தில் அமையும். இதனை தாக்கல் செய்ய ஏழு நாள்கள் முன் தகவல் தர வேண்டும்.

2. தனியார் மசோதா - அமைச்சரைத் தவிர எந்த உறுப்பினரும் தாக்கல் செய்யலாம். இதற்கு ஒரு மாதம் முன் தகவல் தர வேண்டும். இவை தவிர சாதாரண மசோதாக்கள், பண மசோத்தாக்கள், நிதி மசோதாக்கள், சட்டத் திருத்த மசோதாக்கள் என ஒவ்வொரு மசோதாவும் சட்டமாவதற்கு தனி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஒரு சாதாரண மசோதாவை அமைச்சரோ அல்லது அவை உறுப்பினரோ அவைகளில் தாக்கல் செய்து விவாதித்து நிலைக்குழு மற்றும் தேர்வுக்குழுவிற்கு அனுப்பி ஆய்வு செய்து இந்திய அரசிதழில் வெளியிடப்படும். சாதாரண மசோதா 6 மாதங்கள் வரை எவ்வித நடவடிக்கையின்றி இருக்கலாம்.

பண மசோதா 14 நாள்களுக்கு மிகுதல் கூடாது. இருஅவைகளையும் கூட்ட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. சாதாரண மசோதாக்களை மட்டும் நிறைவேற்றலாம்.

கூட்டு கூட்டத்தில் நிறைவேற்றிய மசோதாக்கள் உண்டு.. உதாரணத்திற்கு 1960 வரதட்சணைத் தடுப்புச் சட்டம், 1977 வங்கிப் பணி ஆணையத் திருத்தச் சட்டம், 2002 பயங்கரவாத தடுப்புச் சட்டம் (POTA).


ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பது பட்ஜெட். ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டாகும். 2017-18 ம் ஆண்டில் பிப்ரவரி மாத துவக்கத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2000-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதம் கடைசி நாள் 5 மணி வரை ஆங்கிலேயர் கால வழக்கத்தை பின்பற்றியது. இதனை மாற்றி 2001-ம் ஆண்டு முற்பகல் 11 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.1921-ல் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டிலிருந்து பிரிக்கப்பட்டது.

Parliament

#தனித்தன்மை

நாடாளுமன்றத்தின் தனித்தன்மை முக்கியமானது. ஒரு மசோதாவின் சாதக,பாதகங்களை அலசி ஆராயும்போது பல்வேறு தரப்பு கருத்துகளிலிருந்து புதிய கருத்து தோன்றும். சில நேரங்களில் விவாதிக்கப்படாமல் நிறைவேறும்போது நம்பிக்கை குறைகிறது. அதிக முறை ஒத்திவைக்கப்படுகிறது. பணமும் நேரமும் வீணாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொள்வதே குறைந்துவிடுகிறது. இதனால் நம்பகத்தன்மையை இழக்கின்றனர்.

மறைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் சபாநாயகராய் இருந்த சோம்நாத் சட்டர்ஜி கூறுவார்..

''நான் இந்த அவையில் அதிகம் பேசியது Sit down please எனும் வார்த்தைதான். ஆரோக்கியமான விவாதத்தையே நான் எதிர்பார்க்கிறேன்.மேலும், பல உறுப்பினர்கள் நாடாளுமன்ற நூலகத்தைப் பயன்படுத்துவதே இல்லை. அன்றைய உறுப்பினர்கள், அவை முடிந்தவுடன் செல்லும் இடம் நூலகம்தான். இன்றைக்கு அது இல்லை'' என்றார்.

ஏ.கே கோபாலன் பேசுகிறார் என்றால் பிரதமர் நேருவே குறிப்பெழுதத் தயாராய் இருப்பாராம். அதுபோல், இப்போது வாதம் இருப்பதில்லையென அரசியலாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டம் அனைத்து உறுப்பினர்களும் சமூக இடைவெளியுடன் கூடத் திட்டமிடப்பட்டுள்ளது. Means and Ends both must be good.. லட்சியம் சீரியதாக, உன்னதமானதாக இருப்பதைப் போல, அதை அடையும் வழியும் உன்னதமானதாக இருக்க நமது நாடாளுமன்றம் என்றும் உறுதுணையாய் இருந்து வருகிறது.


-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-history-of-parliament

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக