கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு மீன்பிடித் துறைமுகங்களில், தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் மட்டுமே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பொழிமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகு விபத்தில் சிக்கியதில் இரண்டு மீனவர்கள் மரணமடைந்தனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஒரு மீனவர் இறந்தார். 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு ஆண்டுக்குள்ளாகவே மணல்மேடு உருவாகி உயிர்ப்பலிக்கு காரணம் ஆகிவிட்டது.
இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ”தமிழ்நாட்டிலேயே தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மட்டும்தான் ஆறு கடல்ல கலக்கிற பொழிமுகத்தில கட்டப்பட்டிருக்கிறது. மற்ற துறைமுகங்கள் எல்லாம் கடலில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேங்காப்பட்டணம் துறைமுகத்தோட முகத்துவாரத்தில் அலை அடிப்பதால் அப்பகுதியில் மணல் மேடு ஏற்பட்டு கடல் அலை துறைமுகத்துக்கு உள்ளேயே வருது. இதனால துறைமுகத்தவிட்டு படகு வெளியே போகிற சமயத்திலயும், உள்ளே வர்ற சமயத்திலயும் படகு கவிழ்ந்து மீனவர்கள் மரணிக்கும் நிலை ஏற்படுது. படகு விபத்து அடிக்கடி ஏற்பட்டு காயங்களோட மீனவர்கள் தப்பிவருவதும் அடிக்கடி நடக்குது. நிதிபற்றாக்குறைன்னு சொல்லி சரியா துறைமுகத்தை அமைக்காம விட்டுட்டாங்க. துறைமுக கடலலை தடுப்புச்சுவர் 530 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கு. அதை 200 மீட்டர் அதிகரிக்கிறதோட, 90 மீட்டர் அகலத்தில இருக்கிற முகத்துவாரத்தை 200 மீட்டராக மாற்றணும்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``துறைமுகத்துக்கு தண்ணீர் வரும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில ஒரு தடுப்பணை கட்டுறாங்க. இதனால தண்ணீரின் வேகம் தடைப்படுது. தண்ணி வேகமாக வந்தால்தான் துறைமுகத்தில இருக்கிற மண்ணை அடிச்சி வெளியே கொண்டு போகும். எனவே தடுப்பணையை இன்னும் தள்ளி கணபதியான்கடவு பகுதியில் மாற்றி அமைக்கணும். கொரோனாவுக்கு பிறகு கேரள மாநிலத்தில தொழில் செய்த மீனவர்கள் படகுகளோடு சொந்த ஊர் வர்றாங்க. இதனால மீனவர்களின் படகுகளை துறைமுகத்துக்குள் கட்டுவதற்கு போதிய இடம் இல்லாததுனால ஆத்துல நிறுத்துறாங்க. தடுப்பணையை தள்ளி கட்டுனா ஆத்துல படகுகளை நிறுத்தவும் இடம் கிடைக்கும்" என்றார்.
தடுப்பணையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் கொதித்துப்போன தாமிரபரணி கரையோர மக்கள் வேகமாக தடுப்பணை பணியைமுடிக்க வேண்டும் என போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து வைக்கல்லூர் குடியிருப்போர் ஐக்கிய முன்னணி நல சங்கம் கவுரவ தலைவர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம், "கோடை காலத்தில தாமிரபரணி ஆத்துல கடல் தண்ணீர் புகுந்திரும். இதனால பரக்காணி, வைக்கல்லூர், மங்காடு, முஞ்சிறை, புதுக்கடை, பைங்குளம், நித்திரவிளை, கொல்லங்கோடு வரைக்கும் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. பல வருட போராட்டங்களுக்கு பிறகு பரக்காணியில இப்பதான் தடுப்பணை அமைக்கப்படுது. தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில இருந்து இரண்டரை கிலோமீட்டர் தள்ளிதான் தடுப்பணை அமைக்கிறாங்க. தாமிரபரணி ஆற்றின் ரெண்டுபக்கமும் முன்பு தென்னை விவசாயமும், தேங்காய் நார் தயாரிக்கும் தொழிலும் நடந்துகிட்டிருந்தது.
தேங்காப்பட்டணம் துறைமுகம் அமைக்கப்பட்டதும் சிலர் விளைநிலங்களில் அனுமதி இல்லாமல் படகு கட்டும் கம்பெனிகளை செயல்படுத்தினாங்க. அந்த கம்பெனியில இருந்து வெளியேறும் கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் மாசு ஏற்படுத்தியது. தடுப்பணை கட்டி முடிச்சிட்டாங்கன்ன இங்க படகு வரமுடியாது. படகு கம்பெனிகளுக்கு சிக்கல் ஏற்படும்ங்கிறதுனால துறைமுகத்துல மணல் சேருதுன்னு தடுப்பணை மேல பழி போடுறாங்க. தாமிரபரணி ஆறுதான் குமரி மாவட்டத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குது. மீனவ கிராமங்களுக்கும் இங்கிருந்து குடிநீர் போகுது. எனவே தாமிரபரணி உப்பாக மாறாமல் இருக்க பரக்காணியில் தடுப்பணை கட்டுறது அவசியம். தடுப்பணை பணியை விரைந்து முடிக்கக்கோரி மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின் மீன்பிடித் துறைமுக நிர்வாக பொறியாளர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம், "புனே சி.டபிள்யூ.பி.ஆர்.எஸ் (செண்ட்ரல் வாட்டர் அண்ட் ரிசர்ச் ஸ்டேஷன்) கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது விபத்து ஏற்படுவதால் துறைமுக கடலலை தடுப்பணையை நீட்டித்து மாற்றி அமைக்க 140 கோடி ரூபாய்க்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். புதிய திட்டத்தை செயல்படுத்தும் குழுவில் மீனவர்களின் பிரதிநிதிகளையும் இணைக்க திட்டமிட்டுள்ளோம். புதிய வடிவமைப்பால் அதிக படகுகள் நிறுத்தும் வசதியும் ஏற்படும். தாமிரபரணி ஆற்றில் அமையும் தடுப்பணைக்கும் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் மணல் சேருவதற்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.
மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரவும், தாமிரபரணி ஆற்றில் உப்புத் தண்ணீர் புகாமல் இருக்கவும் அரசு நிபுணர்கள் மூலமாக விரிவாக ஆய்வு செய்து இருதரப்புக்கும் பாதகம் இல்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/article-about-tenkapattanam-fishing-harbor-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக