``கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நான் வாழப் பழகிக் கொண்டேன். அதனால் முகக் கவசம் அணிவதில்லை." என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

முக கவசம் அணிவது கட்டாயம் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு சேவை கிடையாது என்று அரசு அலுவலகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன. முகக்கவசம் அணியாதவர்களிடம் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்து றையினர் அபராதம் வசூலிக்கிறார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முகக்கவசத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் செல்லூர் ராஜூ பேசியுள்ளது விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மதுரையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பபணிகளை கடந்த 28-ம் தேதி ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர்ராஜூ, செய்தியாளர்களிடம் ஸ்மார்ட் சிட்டிப் பணிகளைப் பற்றி கூறினார். தொடர்ந்து,``கொரோனாவுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும், நான் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டேன். முகக்கவசம் அணியாமல் உங்களுடன் பேசுகிறேன்'' என்றார்.
அவர் அப்படி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் புகார் அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில்,``கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில் மத்திய, மாநில அரசுகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. அணியாதபட்சத்தில் அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் கூட்டுறவு த்துறை அமைச்சராக உள்ள செல்லூர் ராஜு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம், தான் முகக்கவசம் அணிவதில்லை என்றும், கொரோனா ஒரு விஷயம் கிடையாது. கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டேன் என்றும் கூறியிருக்கிறார்..
Also Read: `டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழகத்தில் வளரவில்லை!’ பா.ஜ.க-வைச் சீண்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ
இது மத்திய மாநில அரசுகளின் சட்டத்திற்கு விரோதமானது. ஒரு அமைச்சரே இப்படி கூறினால், பொதுமக்கள் எப்படி பொது வெளியில் முகக்கவசம் அணிவார்கள்? எனவே, தமிழக முதல்வர், நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி முகக்கவசம் அணியாத பொதுமக்களிடம் இதுவரை பல கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலித்து உள்ள காவல்துறை, இவரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். சட்டத்தை மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுபற்றி அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டோம்.``நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. எனக்கு கொரோனா பாதிப்பு வந்து விட்டு சென்றதால், கொரோனாவுடன் வாழப் பழகிக் கொண்டேன் என்று யதார்த்தமாக சொன்னேன். முகக்கவசம் அணிந்தும் அணியாமலும் இருக்கிறேன் என்று சொன்னேன். எல்லோரும் கொரோனாவை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்றும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். இதை சிலபேர் தவறாக அர்த்தம் கற்பிக்கிறார்கள். நான் எப்போதும் முகக்கவசத்துடன்தான் இருக்கிறேன்'' என்றார்.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடமும் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/madurai-lawyer-seeks-governments-action-against-minister-sellur-raju-over-face-mask-comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக