Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

`லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்ட ரவுல் வாலன்பெக்!’ - சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்

வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வோம். அப்படியும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும்.

சரி... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள்... அப்படிக் காணமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள்... அப்படி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதியைக் கோருவதோடு, அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

ஈழம்

அரசியல்,வன்முறை,போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா கடந்த 30.08.2011 தேதியன்று அறிவித்தது. இந்தநாளில் போராட்டம் நடத்தியும், பேரணியாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியும் இந்நாளை கடைப்பிடித்துவருகின்றனர் இலங்கை வாழ் தமிழ் மக்கள்.

இலங்கையில் 1980-ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது  ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசே காரணம் என காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிவருகின்றனர்.

குறிப்பாக சொல்லப்போனால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சியில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தீவிரமாக எதிர்த்த ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா... இல்லையா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாமலேயே இருக்கின்றன. உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர் காணாமல் போவதாக `மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கூறியிருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் - போராடும் மக்கள்
1996-ம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, 1980- 96 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,513 பேர் இலங்கையிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும்;1996-ம் ஆண்டு ‘ஆசிய மனித உரிமை ஆணையத்தின்’ அறிக்கைப்படி, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத வழக்குகள் 16,742 இருந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

2006 முதல் 2008 காலகட்டத்தில் காணாமல்போன பல நூறு தமிழ் மக்களுக்கு, இலங்கை ராணுவமும் அதன் துணைக் குழுக்களுமே காரணம் என்று `மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. `மீளாத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு’ என்ற தலைப்பிடப்பட்ட அறிக்கை ஒன்றையும் மார்ச் 2008-ம் ஆண்டில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆட்சியின்போது 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இலங்கை பாராளுமன்றத்தில் `காணாமல் போனோர் அலுவலகம்’ அமைப்பதற்கு ஒரு மசோதாவை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியது. மசோதா நிறைவேற்றப்பட்டாலும், திட்டம் சுமார் ஓராண்டு வரை தொடங்கப்படாமலேயே இருந்தது. 2017-ம் ஆண்டு, ஜூன் 21-ம் தேதி `காணாமல் போனோர் அலுவலகம்’ தொடர்பான திருத்தச் சட்டத்துக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தது. இந்த அலுவலகத்துடன் தொடர்புடையோர் ரகசியத்தைப் பேணிக்காக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கே

இந்தத் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது உரையாற்றிய அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ``காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொறுப்பு’’ என்றும், ``குற்றச்செயல்கள் பற்றி விசாரிக்கும் அதிகாரம் இந்த அலுவலகத்துக்குக் கிடையாது” எனவும் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் கருத்து பல விமர்சனங்களுக்கு உள்ளானது.

அதைப்போலவே, ``1983-ம் ஆண்டு நாட்டில் நடந்த கலவரத்தில் ஏழு தமிழர்கள் மட்டுமே உயிரிழந்தனர்” என்று 2017-ம் ஆண்டு, ஜூலை 28-ம் தேதி பாராளுமன்றத்தில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்திருந்ததும் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இறுதியாக, காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக அரசாங்கத்தால் `காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம்’ 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. காணாமல் போனோரையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் தேடிக் கண்டுபிடிப்பது, அதற்கான சூழ்நிலையைக் கண்டறிவது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது ஆகியவை இந்த அலுவலகத்தின் நோக்கமாகும்.

சென்னையில் போராட்டம்

மன்னார், மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இந்த அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. காணாமல் போனோரை கண்டறிவதற்கான முயற்சியை முன்னெடுத்துவரும் இந்த அலுவலகம் 2018-ம் ஆண்டு, 5-ம் தேதி காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அளித்திருந்தது. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய முழுமையான தகவல்கள் இதுநாள் வரை வெளியுலகுக்கு தெரியப்படாமலேயே உள்ளன.

இந்நிலையில்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆண்டுதோறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களைக் கேட்டு போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்திவருகின்றனர். கடந்த வருடம் (2019), ஆகஸ்ட் மாதம் இலங்கை, வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக இவர்களால் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் சுழற்சி முறையில் அன்றோடு 900 நாள்களைக் கடந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுபோல, தன் உறவினர்கள், மகன்கள், மகள்கள், கணவர், மனைவி, தம்பி, தங்கைகளின் தகவல்கள் கிடைத்துவிடாதா… அவர்களை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா? என்ற மனவருத்தம் கலந்த நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் இந்த தினத்தை கடைப்பிடித்துவருகின்றனர் இலங்கை வாழ் தமிழ் மக்கள்.

இந்தநிலையில், இது குறித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,

``ஆகஸ்ட் 30, உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாள். ஈழத் தாயகத்தில் நம் இன விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்காலச் சூழலில் 21,000 பேருக்கும் மேலானோர், சிங்கள அரசினரால் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களில் 59 குழந்தைகளும் அடக்கம். பன்னாட்டுச் சமூகமும் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இந்திய துணைக் கண்டத்தின் அரசுக்கு இசைவு தந்துதான் நம்மின உறவுகள் சரணடைந்தார்கள்.10 ஆண்டுகள் கழித்து அந்நாட்டின் அதிபர்கள், தலைவர்கள், `அவர்களெல்லாம் இறந்துவிட்டார்கள்’ என்று ஒற்றைச் சொல்லில் கூறி முடித்துவிட்டார்கள். ஆனால், நம் உறவினர்களெல்லாம் பதாகைகளை ஏந்தி, வீதிகளில் நின்று தன் சொந்தங்கள் எங்கே? எனக் கேட்டு கண்ணீர் விட்டுக் கதறி வருகின்றனர்.

21,000 பேரும் இறந்துவிட்டார்களென்றால், அவர்கள் எப்படி இறந்தார்கள், அவர்களுக்கு உடல் கூறாய்வு நடத்தப்பட்டதா, நோய்வாய்ப்பட்டு இறந்தார்களா அல்லது நீங்கள் கொன்று குவித்தீர்களா, அவர்களை எங்கு அடக்கம் செய்தீர்கள்... என்று எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. பெரும் பெரும் நாட்டின் தலைவர்கள், அதிபர்கள், குறிப்பாக தமிழக ஆட்சியாளர்கள், இந்தியாவின் ஆட்சியாளர்கள் என எவரும் இது குறித்துக் குரலெழுப்பவில்லை.

சீமான்

Also Read: "வைகோ பேச்சைக் கேட்க, வாடகை சைக்கிள் பயணம்!" - சீமான் ஃப்ளாஷ்பேக் பகிர்வு

ஆகவே, இந்த ஆகஸ்ட் 30-ல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மிகப்பெரிய பேரணியை, எழுச்சிமிகு நடைப்பயணத்தை கனடா நாட்டில் கிராம்டன் நகர அரங்கில் (City Hall) தொடங்கி ஒட்டோவா நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பயணத்தை நடத்தவிருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் ஏதுமின்றி, `நாங்கள் தமிழர்கள்’ என்ற உணர்வோடு ஒன்றிணைந்து நம்மின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க ஒன்றிணைவோம். இந்தப் பேரணி உலக சமூகத்தையே திரும்பிப் பார்க்கவைக்க வேண்டும்” என்றார் அவர்.

இந்தநிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், இந்தநாள் குறித்துப் பேசும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்,

''காணாமல் போனோரை மீட்கும் புனிதப் போரில் உலக மக்களால் இன்றுவரை போற்றப்படும் மாமனிதனாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ரவுல் வாலன்பெக் (Raoul Wallenberg) இருக்கிறார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் காணாமல் போனவர்களை மீட்பதற்காகவே அர்ப்பணித்தார். `20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதாபிமானிப் என்று இன்றுவரை உலகம் கொண்டாடுகிறது. ரவுல் வாலன்பெக் தனது வாழ்நாளில் காணாமல்போன ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உலக வரலாற்றிலேயே தனி ஒரு மனிதனாக, காணாமல்போன பல்லாயிரக்கணக்கானவர்களை மீட்டு வரலாற்றைத் தனதாக்கிக் கொண்ட இந்த மனிதக் கடவுளை நெஞ்சில் நிறுத்தி உலகத்திலுள்ள அனைத்துத் தமிழர்களும் குரல் கொடுக்க முன்வந்து தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சண் மாஸ்டர்

ஈழத்தில் வலிந்து காணமலாக்கப்பட்டோருக்காக அவர்கள் உறவுகளே தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியிலிறங்கிப் போராடுகின்றனர். இதுவரையில் சுழற்சிமுறையில் போராடுபவர்களில் 74 பேர் பெரும் ஏக்கத்துடன் உயிரிழந்துள்ளார்கள். போராட்டங்களில் பங்கேற்பவர்கள் ஒரு நாள் தங்கள் ஆதரவை நல்கி, மிகுதி நாள்களில் அவர்களை தனித்தே விடுகின்றனர்.

அதேவேளையில், கொத்துக் கொத்தாக தமிழர்களைப் படுகொலை செய்தும், காணாமலும் ஆக்கிய இனஅழிப்பு யுத்தக் குற்றவாளிகளாக ராஜபக்சே அரசாங்கத்திடம் நீதியைக் கோருவதும் மடமையாகும். ஆக, அனைத்துலக விசாரணையின் வழியாகவே காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கான நீதி என்பது ஜ.நா மனித உரிமை பேரவையில் தொடர்ந்து இந்த பிரச்னையை வலியுறுத்தும் அதே வேளையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழியாகவோ அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயத்தின் வழியாகவோ கிடைக்கப் பெறக்கூடியதாகும். அதற்கான நகர்வுகளையே ஈழத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.



source https://www.vikatan.com/social-affairs/international/special-article-on-international-day-of-the-disappeared

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக