Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

மயிலாடுதுறை: `ஃபேஸ்புக் காதல்; கருக்கலைப்பு!’- பெண்ணை ஏமாற்றிய வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஒரடியம்புலத்தைச் சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ். கடந்த 2017-ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது விவேக் ரவிராஜிக்கும் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்துப் பேச காதலாக மாறி நெருக்கமாக பழகியதில் அப்பெண் கருவுற்றுள்ளார்.

மயிலாடுதுறை காவல்நிலையம்

அதன்பின் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க முயற்சித்துள்ளார். இதற்கு அப்பெண் உடன்படாததால் விவேக் ரவிராஜ், தன் தாயார் ராஜாத்தியை அழைத்து வந்து கருவை கலைத்துவிடச் சொல்லியுள்ளார், `தற்போது கருவைக் கலைத்து விடு. அதன்பின் என் மகன் உன்னைத் திருமணம் செய்து கொள்வான்’ என்று கூறீ கருவை கலைக்க ராஜாத்தி அறிவுறுத்தியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு அப்பெண் கருவை கலைத்துள்ளார்.

பின்னர், அப்பெண்ணிடம் பேசுவதைத் தவிர்த்த விவேக் ரவிராஜ் அப்பெண்ணை ஆபாசமாகத் திட்டி பேசி திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதுகுறித்து, காவல்துறை உயரதிகாரிகளிடம் அப்பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையில் விவேக் ரவிராஜிடம் அப்பெண் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் விவேக் ரவிராஜ் அந்தப் பெண்ணை மிரட்டும் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பெண் வழக்கு தொடுத்திருந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் விவேக் ரவிராஜ் மற்றும் அவரது தாயார் ராஜாத்தி மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்கு பதிவு செய்துள்ளார்.

விவேக் ரவிராஜ்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி விவேக் ரவிராஜ் மீது ஏமாற்றுதல், ஆபாசமாகத் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 417, 420, 294(பி), 312, 506(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழும், அவரது தாயார் ராசாத்தி மீது 107, 120 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/mayiladuthurai-police-files-case-against-valivalam-si

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக