Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தூத்துக்குடி: மின் இணைப்புக்கு கழிப்பறை அவசியமா?! - இருளில் தவிக்கும் வயதான தம்பதிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது இரு மகன்களும் தனியே வசித்து வருவதால் தன் மனைவி கஸ்தூரியுடன் வசித்து வருகிறார். கடந்த 23 ஆண்டுகளாக அக்கிராமத்தில் சிறிய அளவில் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு போதிய வருமானம் இல்லாததால் தீப்பெட்டி கம்பெனியை மூடிவிட்டார். இதை முறைப்படி அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்ததுடன், தனது கம்பெனிக்காக பெற்றிருந்த மின் இணைப்பு குறித்து கலிங்கப்பட்டியிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து துண்டித்து விட்டார்.

மனைவி கஸ்தூரியுடன் சீனிவாசன்

இந்நிலையில், சீனிவாசன், தனது மனைவி கஸ்தூரியுடன், முன்பு தீப்பெட்டி கம்பெனி வைத்திருந்த இடத்தின் அருகே இருந்த அறையை தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தின் மூலமாக வீடாக மாற்றி தற்போது வசித்து வருகிறார். அறையை வீடாக மாற்றியதற்கு முறைப்படி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் மனு அளித்து வீட்டு தீர்வை ரசீதும் பெற்றுள்ளார். வீட்டு மின் இணைப்பிற்காக விண்ணப்பித்த நிலையில், ஆய்விற்கு வந்த அதிகாரிகள், ‘வீட்டில் கழிவறை இல்லை. கழிவறை இருந்தால்தான் மின் இணைப்பு தரப்படும்’ எனக் கூறிவிட்டுச் சென்றனர். மூன்று மாதங்களுக்கு மேலாக இருளில் வசித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சீனிவாசனிடம் பேசினோம், ”என்னோட ரெண்டு மகன்களும் திருமணமாகி தனியே வசிச்சுட்டு வர்றாங்க. இந்த கிராமத்துல நானும் மனைவியும்தான் வசிச்சுட்டு வர்றோம். தொடர் நஷ்டம் ஏற்பட்டதுனால தீப்பெட்டி கம்பெனியை மூடிட்டேன். அந்த வணிக மின் இணைப்பை திரும்ப ஒப்படைத்து துண்டித்துவிட்டேன். மகன்கள் கைவிட்ட நிலையில் அதே இடத்தில் குடோனை வீடாக மாற்றி வசிச்சுட்டு வர்றோம். வீட்டுவரி ரசீது முதல் மின்வாரிய அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிச்சுட்டேன். வீட்டுக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், ‘கக்கூஸ் இல்லையா.. அப்போ கரண்ட் கிடையாது.

சீனிவாசனின் வீடு

முதல்ல கக்கூஸை கட்டுங்க. கரண்ட் வேணும்னா வணிக இணைப்புல கரண்ட் கனெக்‌ஷன் தர்றோம்’னு சொல்லிட்டு போய்ட்டாங்க. 3 மாதமா இருட்டுலதான் இருக்கோம். இரவு 8 மணிக்கு சாப்பிடும் உணவினை மாலை 4 மணிக்கே தயார் செய்து வைத்து விடுவோம். 8 மணிக்கு மெழுகுவர்த்தி பொருத்தி வைத்துதான் சாப்பிடுகிறோம். ரெண்டு மகன்களும் மாதந்தோறும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறாங்க.

100 நாள் வேலைக்குப் போகுறதுனால கிடைக்குற வருமானத்தை வச்சும், ரேசன்ல போடுற அரிசி, பருப்பு, சர்க்கரையை வச்சும் ரெண்டு பேரும் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம். சாப்பாட்டுக்கே வழியில்லை. கழிப்பறை எப்படிய்யா கட்டுறது?” என்றார் வேதனையுடன். இளையரசனேந்தல் கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், மின்சார வாரிய அலுவலகம் தென்காசி மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கலிங்கப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாபியிடம் பேசினோம்,

வீட்டில் சீனிவாசன், கஸ்தூரி

“வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க குடியிருப்புக்கான அமைப்பு, சமையலறை இருந்தாலே மின் இணைப்பு வழங்கலாம். கழிவறைக்கும் மின் இணைப்புக்கும் சம்மந்தமில்லை. நான் இந்த அலுவலகத்திற்கு வேலைக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகுது. இதற்கு முன்பு பணியிலிருந்த அதிகாரிகள் எதனால் இணைப்பு தரவில்லை, என்ன காரணம் சொன்னார்கள் என்பதைப்பற்றியெல்லாம் தெரியாது. உடனே ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/does-toilet-need-for-electrical-connection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக