தன் உற்சாகச் சிரிப்பையே தன் நிறுவனத்தின் பிராண்டாக்கி, பிசினஸில் பெரும் வெற்றி கண்டவர் வசந்த அண்ட் கோவின் தலைவரான ஹெச்.வசந்தகுமார். கடுமையான உழைப்பு, நேர்மையான அணுகுமுறை, புதுமையான மார்க்கெட்டிங் அணுகுமுறையை வைத்து வசந்தகுமார் அடைந்த வெற்றிக்கதை சுவாரஸ்யமானது. `நம்மால் என்ன சாதிக்க முடியும்?’ என்று துவண்டு கிடப்பவர்களுக்கு உற்சாக டானிக் போன்றது. 70 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த வசந்தகுமார் இன்று ஆயிரம் கோடி டேர்ன் ஓவர் கொண்ட வசந்த் & கோ நிறுவனத்தை வளர்த்தெடுத்தது எப்படி என்கிற சக்ஸஸ் ஸ்டோரி இனி...
படித்தது தமிழ் எம்.ஏ
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம்தான் வசந்தகுமாரின் சொந்த ஊர். 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று பிறந்தார். (அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று தானும் பிறந்ததில் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி!) அகத்தீஸ்வரத்தில் உள்ள பஞ்சாயத்து பள்ளியில் படித்தார். விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தார். பிற்பாடு அஞ்சல் வழிக் கல்வி மூலமாக எம்.ஏ படித்து முடித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமரி அனந்தனின் சொந்த சகோதரர்தான் வசந்தகுமார். 1978-ம் ஆண்டு சென்னை ராயபுரம் தொகுதியில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் குமரி அனந்தனுக்கு உதவி செய்வதற்காக சென்னைக்கு வந்தார் வசந்தகுமார். ஆனால், தேர்தல் முடிந்தபிறகும் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
முதல் வேலை வி.ஜி.பி.யில்...
அப்போது சென்னையில் வேகமாக வளர்ந்துவந்த வி.ஜி.பி. நிறுவனத்தின் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸிடம் சொல்லி தன் சகோதரர் வசந்தகுமாருக்கு வேலை வாங்கித் தந்தார் குமரி அனந்தன். வி.ஜி.பி அலுவலகத்தில் அவருக்கு கணக்காளர் வேலை. மாதச் சம்பளம் ரூ.70. பாதிப் பணத்தைக் கட்டி, பொருளை வாங்கிக்கொண்டு, மீதமுள்ள பணத்தை மாதம் தோறும் கட்டுவது அப்போது பிரபலமான நடைமுறையாக இருந்தது. மக்கள் கட்டும் ரூ.5, ரூ.10 பணத்தை கச்சிதமாக வாங்கி, தன் அலுவலகத்திடம் ஒப்படைக்கும் வேலையை சரியாகச் செய்தார் வசந்தகுமார்.
எப்படிப்பட்ட மக்கள் என்றாலும் அவர்களுடன் சகஜமாகப் பழகி அவர்களின் மனதில் தனி இடத்தைப் பிடிப்பது வசந்தகுமாரின் பிறவிக் குணம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். வாடிக்கையாளர் சொல்கிற விஷயங்களை உடனுக்குடன் செய்துகொடுப்பார் என்பதால், பல மனதில் இடம்பிடித்துவிட்டார்.
மும்பைக்கு வேலை மாற்றம்
அன்றாட உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்ட நிலையில், நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தார். அடுத்த ஏழு ஆண்டுகளில் ஒரு கிளையின் மேலாளர் பொறுப்பு வகிக்கும் அளவுக்கு அவர் பதவி உயர்வு பெற்றார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் ரூ.300.
அந்தக் காலத்தில் வி.ஜி.பி தனது கிளைகளைப் பல்வேறு நகரங்களில் ஆரம்பித்து, தன் பிசினஸை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மும்பையிலும் தன் கிளையைத் தொடங்கியது. இந்தக் கிளையைப் பொறுப்பேற்று நடத்த சரியான நபர் வசந்தகுமார்தான் என்று முடிவு செய்தது வி.ஜி.பி நிர்வாகம்.
ஆனால், மும்பைக்குச் சென்று வேலை பார்க்க வசந்தகுமாருக்கு விருப்பம் இல்லை. எனவே, அந்த வேலையை விட்டுவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார். எட்டு ஆண்டுகள் வேலை பார்த்திருந்தாலும், சொந்தத் தொழிலில் முதலீடு செய்ய அவரிடம் பணம் எதுவும் இல்லை. வி.ஜி.பி.யில் வேலை பார்த்தபோது நன்கு பழகிய வாடிக்கையாளர் ஒருவர் தி.நகர் உஸ்மான் சாலையில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்தக் கடையை காலி செய்துவிட்டு, இன்னொருவருக்குத் தரும் ஏற்பாட்டில் இருந்த அவரிடம் பேசி, அந்தக் கடையை வாங்கினார். அந்தக் கடைக்காரர் அவருக்கு விதித்த ஒரே கண்டிஷன், ``இன்னும் ஆறு மாதங்களுக்குள் ரூ.8000 தரவேண்டும்’’ என்பதுதான். கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு கடையை எடுத்தார். பொருள்களை பார்சல் கட்டும் மரப்பலைகையில் தன் கடையின் பெயரை எழுதி மாட்டினார். சிக்கனம்தான் தன்னை ஜெயிக்க வைக்கும் என்பது அவர் கற்ற பாலபடமாக இருந்தது.
முதல் வருமானம் ₹22
அப்போது அவரிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே. மடக்கக்கூடிய சேர்கள் அப்போது எல்லோரும் விரும்பி வாங்கக்கூடிய பொருளாக இருந்தது. சைக்கிள் கேரியரில் ஒன்றிரண்டு சேர்களைக் கட்டிக்கொண்டு, சென்னையின் எல்லாத் தெருக்களில் உள்ள வீடுகளின் படிகளையும் ஏறத் தொடங்கினார். வி.ஜி.பி.யில் அறிமுகமான வாடிக்கையாளர்கள் அனைவரின் கதவுகளையும் தட்டினார். பாரி முனையில் பூ விற்கும் பட்டம்மாள் என்பவரும் தேனாம்பேட்டையில் இருந்த பக்தவச்சலம் என்பவரும்தான் வசந்தகுமாரின் முதல் வாடிக்கையாளர்கள். அவர்கள் தந்த 22 ரூபாய்தான் அவரது முதல் வருமானம். இப்படி பல நூறு பேரை தனது வாடிக்கையாளர்களாக அடுத்த சில ஆண்டுகளிலேயே ஆக்கிக்கொண்டார் வசந்தகுமார்.
ரீடெய்ல் டு இன்ஸ்ட்டிடியூஷனல் சேல்ஸ்
தனித்தனியாக பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் தன்னிடம் இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் தன் வாடிக்கையாளர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வந்தது. இந்த இன்ஸ்ட்டிடியூஷனல் சேல்ஸுக்காக அவர் முதலில் நாடியது எண்ணூரில் இருந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்தை. தி.நகரிலிருந்து எண்ணூரில் உள்ள அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு சைக்கிளில் செல்ல இரண்டரை மணி நேரம் ஆனது. கஷ்டம் பார்க்காமல், அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளை தொடர்ந்து பலமுறை போய்ப் பார்த்தார். ஆனால், ஆர்டர் எதுவும் கிடைத்தபாடில்லை.
அப்போதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை மக்கள் டி.வி.களில் பார்த்து ரசிக்கத் தொடங்கினர். அசோக் லேலாண்ட் ஊழியர்களும் இந்தப் போட்டியை டிவியில் பார்த்து ரசிக்க விரும்பியதைத் தெரிந்துகொண்டு, அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை அணுகினார். இ.எம்.ஐ அடிப்படையில் இந்தப் பொருள்களை விற்கத் தேவையான கடனை சக்தி ஃபைனான்ஸ் நிறுவனம் தரத் தயார் என்பதை எடுத்துச் சொன்னவுடன், 960 கலர் டிவிகளுக்கான ஆர்டர் அவருக்கு ஒரே நேரத்தில் கிடைத்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அப்போது யாரும் செய்திராத சாதனை அது.
பல்கிப் பெருகிய பிசினஸ்!
இதன்பிறகுதான் வசந்த் & கோவின் பிசினஸ் பல்கிப் பெருகத் தொடங்கியது. சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களை கிளைகள் திறக்கப்பட்டன. குறிப்பிட்ட அளவு பணத்தை முதலில் தந்து, பொருளை வாங்கி, மீதமுள்ள பணத்தை மாதந்தோறும் கட்டும் இ.எம்.ஐ முறையை நம் மக்கள் நிறையவே விரும்பினார்கள். பலரும் இந்த முறையில் டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கிக்கொண்டு செல்ல, வசந்த் அண்ட் கோவின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வந்தது.
சுலபமான தவணை முறை என்பது மட்டுமல்ல, பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாகப் பேசி, அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்து வாங்கியதால், விலையைக் கணிசமாக குறைத்து வாங்கும் சக்தி வசந்த் & கோவுக்கு இருந்தது. இதனால் நிறுவனத்தில் லாபம் நன்கு அதிகரித்தது. வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிச் சென்றபின் அந்தப் பொருளில் ஏதாவது குறை ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்து தரும் வேலையை கச்சிதமாக செய்து தந்ததால், ஒரு முறை வசந்த் அண்ட் கோவில் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து வாங்கி, நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறினார்கள். வாடிக்கையாளர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்காகவே நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசிகளை வைத்திருந்தார் வசந்தகுமார்.
ஆயிரம் கோடிக்குமேல் ஆண்டு விற்பனை
இன்றைக்கு தமிழகம், கர்நாடக மாநிலங்களில் 83 கிளைகள் உள்ளன. ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு டேர்ன் ஓவர் இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான நுகர்பொருள்களை மக்களுக்கு அளிப்பதில் முன்னணி நிறுவனமாக வசந்த் & கோ இருக்கிறது.
போட்டியாளர்களே விரும்பிய வெற்றி
`ஒயிட் குட்ஸ்' என்று சொல்லப்படும் வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரானிக் பொருள்களை விற்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் பல உள்ளன. இந்த நிறுவனங்களின் அதிபர்கள் வசந்தகுமாரை ஒரு போட்டியாளராக நினைக்காத அளவுக்கு அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட வெற்றியாளர்தான் வசந்தகுமார்.
அவருக்கு முதலில் வேலை தந்த வி.ஜி.பி குழுமத்தின் தலைவர் சந்தோஷம் இப்படி பாராட்டுகிறார்.
சாலிடெர் நிறுவனத்தின் டிவியை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியவர் வசந்தகுமார். சாலிடெர் நிறுவனத்தின் உயரதிகாரியாக இருந்த வெங்கடேஷ், வசந்தகுமாரைப் பற்றி இப்படிப் பாராட்டுகிறார்.
வசந்த் & கோவின் வெற்றி சாம்ராஜ்யம் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும்.
source https://www.vikatan.com/business/news/success-story-of-vasanthakumar-and-his-company-vasanth-co
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக