Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

ஜி.எஸ்.டி வசூல் பாதிப்பு ; கடவுளைக் காரணம் சொல்வது நியாயமா நிதியமைச்சர் அவர்களே?

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்துவருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து, மக்கள் பெரும் துயரத்திலிருக்கிறார்கள். வாழ்வதற்கு வழியின்றி ஏராளமான தற்கொலைகள் நிகழ்கின்றன. வேலை இழந்துவிட்டதால் வருமானமில்லாமல், தன் குடும்பத்தினருக்கு தன்னால் உணவளிக்கக்கூட முடியவில்லையே என்ற விரக்தியில், தன் மனைவிக்கும், இரண்டு மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார் ஒரு தொழிலாளி. இந்தக் கொடுமை கடந்த வாரம் சென்னையில் நிகழ்ந்தது. இத்தகைய தற்கொலைகள் அன்றாடச் செய்திகளாக மாறியிருக்கின்றன.

மோடி

இத்தகைய சூழலில்தான், சாந்தமான மனநிலையும் கருணை உள்ளமுமாக மயிலுக்கு உணவளிக்கும் புகைப்படத்தை பிரதமர் மோடி, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கடுத்து, பசுமை மிகுந்த சூழலில் ஒரு மரத்தடியில் அமர்ந்தவாறு வாத்துகளும், நூல்களும், மடிக்கணினியும் சூழ பிரதமர் மோடி புத்தகம் வாசிக்கும் புகைப்படங்கள் வெளியாகின. வாத்துகளுடன் உலவிக்கொண்டு, அந்த வாத்துகளை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் புகைப்படங்களும் வெளிவந்தன. இந்த போட்டோஷூட் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதன் மூலமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் என்ன செய்தி சொல்ல நினைக்கிறார் என்பது தெரியவில்லை.

விஷயத்துக்கு வருவோம். மயில், வாத்து போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியான ஐந்து நாள்களில் (ஆகஸ்ட் 27-ம் தேதி), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், டெல்லியிலிருந்து நிர்மலா சீதாராமனும் மத்திய அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். அதில் மாநிலங்களின் பிரதிநிதிகளாக அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் அதில் பங்கேற்றனர்.

மோடி

2017-ல் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலத்தின் வருவாய் குறைந்துவிட்டது. அதனால் தமிழக அரசு தொடர்ந்து நிதி நெருக்கடியில் இருந்துவந்தது. டாஸ்மாக் மதுபான வியாபாரம் தமிழக அரசுக்குப் பெரிய அளவில் கைகொடுத்துவந்த நிலையில், கொரோனா பிரச்னையால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடந்த ஐந்து மாதங்களில், பிரதமர் மோடி காணொலி மூலம் முதல்வர்களைச் சந்தித்தபோதெல்லாம், `கொரோனாவுக்காக நிதியுதவி செய்யுங்கள்’ என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கோரிக்கைவைத்தார். ஆனால், எடப்பாடி கேட்ட நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எனவேதான், கொரோனா குறையாத சூழலிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது என்ற முடிவை தமிழக அரசு எடுத்தது.

Also Read: `10,000 புதிய விண்ணப்பங்கள்; 7,876 பேருக்கு ரீஃபண்டு!’ - வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் ஜி.எஸ்.டி துறை

இப்படியான நிதி நெருக்கடியில் தமிழக அரசு இருந்துவரும் நிலையில், மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையையும், ஐ.ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையையும் மத்திய அரசு கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் ஜெயக்குமாரும், தமிழக அதிகாரிகளும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜெயக்குமார்

கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ``2018-2019 ஆண்டுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை ரூ.553.01 கோடி, 2019-2020 ஆண்டுக்கான நிலுவை ரூ.246.56 கோடி, 2020-2021 ஆண்டுக்கான நிலுவை ரூ.11,459.37 கோடி... ஆக மொத்தம் ரூ.12,254.94 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத்தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதுபோக, 2017-2018 ஆண்டுக்கு ரூ.4,073 கோடி ஐ.ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையையும் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிற மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் அதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். `கதவைத் தட்டிவிட்டோம், நிலுவைத் தொகை வந்து கொட்டிவிடும்’ என்று மாநில அமைச்சர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ அதிர்ச்சி மட்டும்தான். `மத்திய அரசின் வருவாய் குறைந்துவிட்டது’ என்றும், அதனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையைத் தருவதற்கு மத்திய அரசிடம் பணமில்லை என்றும் கையை விரித்துவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் அத்துடன் நிற்கவில்லை. வருவாய் குறைந்ததற்கு கொரோனாதான் காரணம் என்றும், இது `கடவுளின் செயல்’ என்று ஒரு போடு போட்டார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

ஜெயக்குமாரும் மற்ற மாநில அமைச்சர்களும் மத்திய அமைச்சரின் கடவுள் திருவிளையாடல் காரணத்தை நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். `கடவுளின் செயல்’ என்று சொல்லிவிட்ட பிறகு வேறு என்ன பேச்சு இருக்கிறது? `எங்களிடம் காசு இல்லை. உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய நிலுவைக்கு இரண்டு சிறப்புத் திட்டங்களைத் தருகிறோம்’ என்று இந்த விவகாரத்துக்கு ஒரு தீர்வை முன்வைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

``மாநிலங்கள் கடன் பெறுவதற்கு இரண்டு சிறப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஒன்று, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, மத்திய அரசு அமல்படுத்தவுள்ள சிறப்புத் திட்டத்தின்கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.97,000 கோடி வரை மாநில அரசுகள் கடன் வாங்கலாம். மற்றொன்று, மாநிலங்கள் சந்திக்கவுள்ள ஜி.எஸ்.டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள் கடன் பெற்றுக்கொள்ளலாம்” என்பதுதான் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ள சிறப்புத் திட்டங்கள்.

ஜி.எஸ்.டி

ஏற்கெனவே வருமானத்துக்கு வாய்ப்பில்லாமல்தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி என்ன வந்தாலும் சரி என்று டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்தது. அதுபோக, நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு கடன் வாங்கி வைத்திருக்கிறது. இப்படியான சூழலில், மாநில அரசுகளைப் பார்த்து, `வட்டிக்குக் கடன் வாங்குகள்...’ என்று சொல்வது என்ன நியாயம்? மத்திய அரசே தன் முழுப் பொறுப்புடன் கடன் வாங்கி செட்டில் பண்ணுவதுதானே நியாயம்!?

Also Read: ரேபிட் கிட் விலை, ஸ்டாலின் அரசியல், மத்திய அரசு நிதி... என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசியபோது, ``தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தினேன். ஐ.ஜி.எஸ்.டி பாக்கியாக ரூ. 4,073 கோடியை மத்திய அரசு தர வேண்டும். ஐ.ஜி.எஸ்.டி குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ.ஜி.எஸ்.டி நிலுவை மாநிலத்துக்கு கிடைத்துவிடும். ஜி.எஸ்.டி நிலுவைக்குத்தான் இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு கூறியிருக்கிறது. அது பற்றி தமிழக அரசு ஆராய்ந்துதான் முடிவெடுக்கும்” என்றார்.

ஜெயக்குமார்

பா.ஜ.க ஆதரவு வலதுசாரி பொருளாதார நிபுணரான ஸ்ரீராம் சேஷாத்திரியிடம் பேசியபோது, ``ஜி.எஸ்.டி நிலுவையில் பெரும் பகுதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்துவிட்டது. மீதியுள்ள நிலுவைத் தொகையை நிச்சயமாக மத்திய அரசு கொடுத்துவிடும். கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மத்திய அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது. எனவேதான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு கடன் திட்டங்களைக் கூறியிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது” என்றார்.

இதில் ஒரு முக்கியமான பிரச்னை என்னவென்றால், ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்கு பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரே ஜி.எஸ்.டி-யைக் கடுமையாக எதிர்த்தார். மாநிலங்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு மத்திய அரசு ஒரு வாக்குறுதி அளித்தது. அதாவது, ஜி.எஸ்.டி-யால் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை மத்திய அரசு ஈடுசெய்யும். ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2022-ம் ஆண்டுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று வாக்குறுதி அளித்தது. அதற்காக ஒரு சட்டத்தையும் மத்திய அரசு இயற்றியது. அதை நம்பித்தான் ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவர மாநிலங்கள் ஒப்புக்கொண்டன.

Also Read: தனியார்மயமாகும் விமான நிலையங்கள்... லாபம் யாருக்கு?

ஜி.எஸ்.டி

அந்த வாக்குறுதியை இப்போது மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. மத்திய அரசின் வருவாய் குறைந்ததற்கு கொரோனா காரணம் என்றும், அது `கடவுளின் செயல்’ என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், `கொரோனா இப்போதுதானே வந்தது. கொரோனாவுக்கு முன்பும் அரசின் வருவாய் குறைந்துதானே இருந்தது. அதற்கு என்ன காரணம்?’ என்று கேள்வி எழுப்பும் பொருளாதார நிபுணர்கள் சிலர், `பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே தற்போதைய பொருளாதாரப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக, `எல்லாம் அவன் செயல்’ என்று அனைத்தையும் கடவுள் பக்கம் திருப்பிவிடுவது நியாயமா அமைச்சர் அவர்களே?



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-reason-for-declining-in-gst-revenue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக