சென்னை தி.நகர், விஜயராகவன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவி. இவரின் மனைவி அமுதா. இவர்களுக்கு சொந்தமான வீடு வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அந்த வீட்டை லீஸூக்குக் கொடுப்பதற்காக இணையதளத்தில் வீட்டின் போட்டோ மற்றும் செல்போன் நம்பர்களை ரவி பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி குலாம் முகமது, ரவியிடம் போனில் பேசி வீட்டை லீஸூக்குக் கேட்டுள்ளார். வீடு லீஸுக்கு 15 லட்சம் ரூபாயை ரவியிடம் குலாம் முகமது கொடுத்துள்ளார். ஆனால் ரவி, திடீரென வீட்டை லீஸுக்குக் கொடுக்கவில்லை. அதோடு பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி குலாம் முகமது, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது,`` நான் பேன்சி ஸ்டோர் வியாபாரம் செய்கிறேன். நான் கடந்த வருடம் இணையதளத்தில் வீடு ஒன்று குத்தகைக்கு விடுவதாக விளம்பரம் பார்த்தேன். பிறகு அந்த வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசினேன். லீஸ் (குத்தகை) தொகை 15,00,000 ரூபாய் என்று வீட்டின் உரிமையாளர் கூறினார். உடனே வீட்டை பார்த்து பிடித்த பிறகு 15,00,000 ரூபாய்க்கு குத்தகை ஒப்பந்தம் போட்டு அதற்கான காசோலையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்தேன்.
அதன்பிறகு வீட்டின் உரிமையாளர் ரவி, வீட்டை பெயின்ட் மற்றும் மராமத்து பணிகளை செய்து சாவி தருவதாகக் கூறினார். 2 மாதங்களுக்கு பிறகு சாவி கேட்டேன். அதற்கு ரவியும் அவரது மனைவி மனைவி அமுதாவும் உங்களுக்கு வீடு தரவே பயமாக உள்ளது. எனவே, நீங்கள் கொடுத்த பணத்தை காசோலையாக தருகிறேன் என்று கூறி ஒரு செக்கை கொடுத்தனர். அந்தக் காசோலையில் பணம் இல்லை என்றும் கையெழுத்து மாற்றி போட்டுள்ளதாக கூறியும் வங்கி அலுவலர் என்னிடம் காசோலையைத் திருப்பி கொடுத்துவிட்டார். மீண்டும் நான் ரவியை அணுகி கேட்டதற்கு என்னை மரியாதைக் குறைவாக பேசினார்.
ரவியின் மனைவி அமுதா, `இன்னொரு தடவை பணத்தை கேட்டு இங்கு வந்தா, என்கிட்ட தப்பா நடந்துக்கேறேன்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திடுவேன்’ என மிரட்டினார். அதனால் பயந்து நான் அங்கிருந்து வந்துவிட்டேன். எனவே, என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் ரவி மீதும் திரும்பப் பணம் கேட்டால் என் மீது காவல் நிலையத்தில் தவறாக நடந்து கொண்டதாக புகாரளிப்பேன் என்று மிரட்டும் ரவியின் மனைவி அமுதா மீதும் தக்க நடவடிக்கை வேண்டும். மேலும் நான் இழந்த பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரவி, அமுதாவைக் கைது செய்தனர்.
Also Read: சென்னை: நள்ளிரவில் வந்த ஸ்க்ரீன் ஷாட்! - பெண் தொழிலதிபர் புகாரால் சிக்கிய கணவரின் தம்பி
சென்னையில் வீட்டை லீஸுக்குக் கொடுப்பதாகக் கூறி மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. சென்னை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் வீடுகளை லீஸுக்குக் கொடுப்பதாகக் கூறி காயத்ரி, விக்னேஷ், பிரகாஷ் ஆகியோர் 70-க்கும் மேற்பட்டவர்களை நூதன முறையில் ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் காயத்ரி, அவரின் கணவர் விக்னேஷ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூன்று பேரும் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் லீஸுக்குக் குடியிருந்தவர்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்தவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் சொல்ல முடியாத நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பிவருகின்றனர்.
லீஸுக்கு இருப்பவர்கள் தாங்கள் குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் வீட்டின் உரிமையாளர்களுக்கு சாதகமாகத்தான் காவல்துறை நடந்துக்கொள்வதாக புகார் கொடுத்தவர்கள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் காயத்ரி, விக்னேஷ், பிரகாஷை போலீஸார் கைது செய்துள்ளனர். வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகைப் பணம் வராததால் சிலர், லீஸுக்குக் குடியிருந்தவர்களை மிரட்டி வீட்டை காலி செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், காயத்ரி, விக்னேஷ், பிரகாஷ் ஆகியோரிடமிருந்து பணத்தை மீட்டுதர வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்டவர்கள் விடுத்துள்ளனர். வீடு லீஸ் மோசடி புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு தம்பதி பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால், சென்னையில் வீடுகளை லீஸுக்கு எடுப்பவர்கள் உஷாராகவும் முன்எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்கின்றனர் போலீஸார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-couple-over-cheating-charges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக