Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

`கொரோனாவால் குறைந்துபோன கண் தானம்’ - பார்வைக்குக் காத்திருக்கும் விழிகள்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே மக்கள் மருத்துவமனையை நாடும் சூழல் உள்ளது. இந்நிலையில், பொதுவாகக் கண்தானம் அதிகம் பெறப்படும் டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில், இந்த ஆண்டு கண்தான எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா

2020-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 450 கண்கள் மட்டுமே எய்ம்ஸில் தானமாகப் பெறப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 1,244 கண்கள் தானமாகப் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைதான் இந்திய அளவிலும் உள்ளது. இதனால் விழித்திரை மாற்று அறுவைசிகிச்சைகளுக்கான விழித்திரைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விழித்திரை மாற்று அறுவைசிகிச்சையால் பலருக்குக் கண் பார்வை அளிக்க முடியும். இறந்தவரிடமிருந்து கண் தானம் பெறுவதற்கு முன் அவருக்கு பரிசோதனை மேற்கொள்வது அவசியம். நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் கண் தானத்துக்கு முன் வர வேண்டும். கண்தானத்துக்கான நடைமுறைகள் முடிவடைய நேரமாகும் என்ற காரணத்தால், இந்தக் கொரோனா பரவல் காலத்தில் கண்தானம் குறைந்துபோயுள்ளது.

கண்

எய்ம்ஸ் கண் வங்கியின் தலைமை இயக்குநர் டாக்டர் ஜெ.எஸ்.திதியல், "ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்தபோது, விழித்திரை தானம் பெறுவதையும், விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை செய்வதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம். இதனால் மருத்துவமனையில் தானமாகப் பெறப்படும் கண்களின் எண்ணிக்கையும், விழித்திரை மாற்று அறுவைசிகிச்சையின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 934 விழித்திரை மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற்றன. ஆனால், இந்த ஆண்டு அது 339 ஆகக் குறைந்துள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, ஆனால் தள்ளிவைக்கக்கூடிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும் 17 அவசர விழித்திரை மாற்று சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. ஜூலை முதல் கண் தானம் பெறுவதும், விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை செய்வதும் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டாலும் அதன் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது'' என்று கூறியிருக்கிறார்.

விழி

இந்தியாவின் கண் வங்கிகள் அமைப்பின் செயலாளரும் எய்ம்ஸின் கண்நல மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் நர்மதா ஷர்மா, "இந்தியா முழுவதிலும் உள்ள 20 கண் வங்கிகளில் ஊரடங்குக் காலமான மார்ச் முதல் ஜூன்வரை 1,125 விழித்திரைகள் மட்டுமே தானமாகப் பெறப்பட்டுள்ளன. விழித்திரை மாற்று அறுவைசிகிச்சைகள் 515 மட்டுமே நடைபெற்றுள்ளன. சென்ற ஆண்டு இந்த மூன்று மாதங்களில் 6,991 கண் தானங்களும், 2,345 விழித்திரை அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளன

Also Read: கண் எரிச்சல், நீங்காத கிருமிகள்... கேள்விக்குறியாகும் ஹேண்ட் சானிடைஸர்கள்!

இந்தியாவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விழித்திரைப் பிரச்னையால் கண் பார்வை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு இறந்தவர்களிடம் இருந்து எடுக்கப்படும் விழித்திரையின் மூலம் விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை செய்து, கண் பார்வை மீண்டும் கிடைக்கச் செய்ய முடியும். இந்தியாவுக்கு ஒவ்வொரு வருடமும் 2 லட்சம் விழித்திரைகள் தேவைப்படுகின்றன. ஆனால், தானமாகக் கிடைப்பவை 55,000 மட்டுமே" என்கிறார்.

கண் அறுவை சிகிச்சை

''கோவிட் 19 தாக்கத்தால், இந்தியாவில் கண் தானம் மிகவும் பின்னடைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டாலும் கண் தானம் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் விழித்திரை நோயால் கண் பார்வையை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விழித்திரை மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த நிலை விரைவில் மாறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்" என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மஹிபால் சிங் சச்தேவ் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/india/the-covid-19-pandemic-eye-donation-have-seen-a-drastic-fall-at-aiims

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக