Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

`காங்கிரஸ்காரன்தான், ஆனா எம்.பி ஆனபிறகு பொது மனிதன்!’ - வசந்தகுமார் நினைவலைகள்

தொகுதிக்கான நிதி கிடைக்காமல் இருந்தாலும், தனது சொந்தப் பணத்தில் ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுப்பது, மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுப்பது என நற்காரியங்களைச் செய்துவந்தவர் வசந்தகுமார். கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரையில் கடந்த மாதம் அரச மரம் சாய்ந்து வீடுகள், கடைகள் சேதமடைந்தன. அங்கு நேரில் சென்று நிதி வழங்கி நெகிழவைத்தார் வசந்தகுமார். தனது சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கி வந்தார்.

வசந்தகுமார் எம்.பி

``வசந்த் அண்ட் கோவும், வசந்தகுமாரும் வேற வேற இல்லை. அங்கே கிடைக்கிற வருமானத்துல ஏழைகளுக்குத் தொண்டு செய்யறேன்’’ என அடிக்கடிச் சொல்வார் வசந்தகுமார். கொரோனா ஆரம்பகட்டத்தில் இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஒன்றரை லட்சம் மாஸ்க்குகளை இலவசமாக வழங்கினார். மீனவர் பிரச்னை பற்றி அடிக்கடிப் பேசுவார். ``கன்னியாகுமரி, தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்புல சுவர் எழுப்பணும்னு மத்திய அரசுக்கிட்ட கேட்டிருக்கேன். சுவர் எழுப்பினா கடல் அரிப்பிலிருந்து மீனவர் கிராமங்கள் காப்பாற்றப்படும்’’ என்பார்.

``14 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். இரண்டு மசோதாக்களை முன்மொழிந்திருக்கிறேன். நாடாளுமன்றத்துல அதிகப்படியாக 56 கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். கன்னியாகுமரி தொகுதி வளர்ச்சிக்காக 10 மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளித்திருக்கிறேன். நான் காங்கிரஸ்காரனாக இருந்தாலும், எம்.பி ஆன பிறகு பொது மனிதன். எனவே, மாவட்ட வளர்ச்சிக்காக, தேவைப்பட்டால் பிரதமரையே சந்திப்பேன்’’ என்று கூறுவார்.

வசந்தகுமார்

`உழைப்பால் உயர்ந்தவர்’, `உழைப்புக்கு உதாரணம்’ என்றெல்லாம் வசந்தகுமாரைக் கூறுவது அவரது சொந்தத் தொழிலில் மட்டுமல்ல, கட்சியிலும்தான். அடுத்துவரும் சட்டசபைத் தேர்தல் பற்றி அரசியல் கட்சிகள் இப்போதுதான் மெள்ளப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த மாதம் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில், ``தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இப்பவே அதிக சீட்டுகள் கேட்டு வாங்கணும். அந்தத் தொகுதிகளில காங்கிரஸ் சார்பாக இப்பவே எலெக்‌ஷன் வேலைகளைத் தொடங்கணும்’’ என்று முனைப்புடன் பேசினார்.

Also Read: கொரோனா: 19 நாள்கள் சிகிச்சை! - கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் காலமானார்

நாங்குநேரி எம்.எல்.ஏ-வாக இருக்கும்போது, அங்குள்ள விவசாயிகளுக்காக குளத்தைத் தூர்வாரவும், கால்வாய்களைச் சீரமைக்கவும் தனது சொந்தச் செலவில் ஜே.சி.பி வாங்கிக் கொடுத்திருந்தார் வசந்தகுமார். பின்னர் எம்.பி ஆன பிறகு ஜே.சி.பி-யை கன்னியாகுமரி மாவட்டத்துக்குக் கொண்டுவந்து செயல்படுத்தினார். குமரி மாவட்டத்தில் இருக்கும் நாள்களில் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டே இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்.

வசந்தகுமார்

`நாங்குநேரியில் எம்.எல்.ஏ-வாக இருந்து, தொடர்ந்து மக்கள் பணி செய்யாமல் நீங்கள் ஏன் எம்.பி-ஆக ஆசைப்படுகிறீர்கள்?’ என்று தேர்தல் சமயத்தில் கேள்வி எழுப்பியபோது, ``நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பது எனது நீண்டநாள் லட்சியம்" என்று பதில் சொன்னார். லட்சியம் நிறைவேறியது, ஆனால் லட்சியப் பணியை செய்து முடிப்பதற்கு முன்பாக, கொரோனா பாதியிலேயே உயிரைப் பறித்துச் சென்றுவிட்டது. கொரோனா காலத்தில் மக்கள் பணி செய்ய கையில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க் எனப் பாதுகாப்பாகத்தான் வலம்வந்தார். ஆனால் அவரின் உதவியாளர் மூலம் கொரோனா பரவிவிட்டது. வசந்தகுமாரின் மரணம் கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு.



source https://www.vikatan.com/government-and-politics/death/congress-mp-vasanthakumar-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக