கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடுமுழுவதும் பொது முடக்கம் அமலிலுள்ளது. கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, ஒவ்வொரு மாதமாக நீடிக்கப்பட்டு, தற்போது 7-ம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது.
தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5,900-க்கும் அதிகமான நபர்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 7- ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் பொதுப்போக்குவரத்து தொடங்குவது குறித்தும், பொது முடக்கத்தில் தளர்வுகள் வழங்குவது குறித்தும் முதல்வர், மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை நடத்திவருகிறார்.
இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்திய பிறகு, தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக ஆட்சியர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 75,000 பரிசோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அளவு குறையாமல் தொடரட்டும் எனப் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் மட்டும் 46 லட்சம் மறு உபயோகம் செய்யக்கூடிய முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 72.56 லட்சம் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. இது அனைவர்க்கும் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை உறுதிசெய்ய முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மழைக்கால ஆரம்பம் ஆகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நீர்நிலைகளின் பராமரிப்பை உறுதிசெய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு முகாம்களின் சேவை, அங்கு வழங்கப்படும் உணவு, கழிப்பறை வசதிகளை உறுதிசெய்யவும், தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கையை தற்போதை விடக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த முறை மண்டலங்களாகப் பிரித்து பேருந்துகளை இயக்கியது போல், தற்போது இயக்கினால் தொற்று எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது என்பதினால், மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்க திட்டமிருப்பதாகத் தெரிய வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை பொதுப் போக்குவரத்தைத் தொடங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் மேலும் சில தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உணவகங்களில் தற்போதைய நிலை தொடரும் என்றே தெரிய வருகிறது.
தற்போதுவரை கூட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனையை முடித்த பின்னர், மருத்துவ நிபுணர்க் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை முடிந்ததுமே, அடுத்த மாதமும் பொது முடக்க நீடிப்பு மற்றும் என்னென்ன தளர்வுகள் வழங்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/will-buses-run-in-tamil-nadu-what-happened-at-the-cm-collectors-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக