Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

`தினம் தினம் ஆறாயிரம் பேருக்கு பாதிப்பு’ என ஒருபுறம் எண்களால் தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா. மறுபுறம், `இந்தக் கட்சிக்கு இத்தனை இடங்கள்’ என தேர்தல் சீட் எண்ணிக்கையைத் தொடங்கிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். அதனால், கொரோனாவை மிஞ்சிய பேசுபொருளாக தற்போது கூட்டணிப் பங்கீடுகள் மாறியிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஆயுள்காலம் வரும் மே மாதத்தோடு முடிவடைகிறது. கொரோனா நெருக்கடியால் தேர்தல் நடக்குமா, நடக்காதா என அனைவரும் குழம்பிப்போயிருந்த வேளையில், பெருந்தொற்றுக் காலத்து தேர்தல் விதிமுறைகளை அறிவித்து, அனைத்துக் கட்சிகளின் தேர்தலை நோக்கிய பயணத்தை முடுக்கிவிட்டிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.

தி.மு.க - அ.தி.மு.க

தமிழகத்தில் விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு அரசியல் கட்சிகள் நிரம்பியிருந்தாலும், பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க-வைச் சுற்றியே தேர்தல்களம் அமையும். அந்தவகையில், `இந்த இரண்டு கட்சிகளுமே யாருக்கு எத்தனை சீட்டுகள் இப்போதே முடிவு செய்துவிட்டன’ என்கிறார்கள் அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள்.

அந்தவகையில், எதிர்க்கட்சியான தி.மு.க-வின் தேர்தல் பங்கீடு கணக்குகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய பாடம். கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் சீட்டுகளை வாரி இறைத்துவிட்டு கடைசியில் மயிரிழையில் தனது வெற்றியைத் தொலைத்தது தி.மு.க. உதாரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 41 இடங்களில் அந்தக் கட்சி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கிய ஐந்து இடங்களில் அந்தக் கட்சி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. புதிய தமிழகத்துக்கு ஒதுக்கிய நான்கு இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய ஐந்து இடங்களும் அப்படியே அ.தி.மு.க-வின் வசம் சென்றன. கிட்டத்தட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கிய 55 இடங்களில் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதிலும், `காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிய கூடுதல் இடங்களைக் குறைத்து அந்த இடங்களில் தி.மு.க நின்றிருந்தாலே எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம்’ என அப்போது அரசியல் விமர்சகர்களால் சொல்லப்பட்டது. எனினும், கடைசிவரை தே.மு.தி.க., கூட்டணிக்கு வரும் எனக் காத்திருந்து அந்தக் கட்சி வராத காரணத்தாலேயே காங்கிரஸ் கட்சிக்கு அத்தனை இடங்களை அப்போது ஒதுக்க வேண்டிய நிலைக்குத் தி.மு.க தள்ளப்பட்டது.

தி.மு.க - காங்கிரஸ்

அதனால், இந்த முறை தேர்தல் கூட்டணிப் பங்கீடு விவகாரத்தில் முதலில் சாட்டையைச் சுழற்ற முடிவெடுத்தது காங்கிரஸிடம்தான். `20 இடங்கள் எனப் பேச்சை ஆரம்பித்து, இருபத்தைந்தோடு நிறுத்திக்கொள்வது... அதை மீறி காங்கிரஸுக்கு ஓர் இடம்கூடக் கிடையாது’ என தி.மு.க தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்குவதைவிட, தே.மு.தி.க-வை எப்படியும் கூட்டணிக்குள் இழுத்து வந்துவிடவேண்டும் என அந்தக் கட்சியோடு முனைப்போடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறதாம். அப்படி தே.மு.தி.க கூட்டணிக்குள் வந்துவிடும் பட்சத்தில், அந்தக் கட்சிக்குப் பத்து இடங்களை ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், `தே.மு.திக அதற்கு ஒத்துவராததால்தான் பேச்சுவார்த்தை இன்னும் ஒரு முடிவை எட்டாமல் இருக்கிறது’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தவிர கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மொத்தமாக 10 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஐந்து இடங்களும், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஓர் இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உலாவருகின்றன.

அப்போ, ம.தி.மு.க?

ம.தி.மு.க மட்டுமல்ல, கொங்கு மக்கள் தேசிய கட்சி, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவைக்க பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறதாம். அந்தவகையில், ம.தி.மு.க-வுக்கு 5, கொ.ம.தே.க-வுக்கு 2 , இ.ஜ.கட்சிக்கு 1 , த.வா.கவுக்கு 1 என தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க, கம்யூனிஸ்ட், விசிக, ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு ஒன்பது இடங்கள் ஒதுக்கியது போக மீதமுள்ள 170 இடங்களில் தி.மு.க சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தனிப்பெருப்பான்மையுடன் ஆட்சி அமைக்கவே தி.மு.க தலைமை விரும்புகிறதாம். தவிர, கட்சியில் ஐம்பது வயதுக்குக் குறைவானவர்களுக்கும், உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மட்டுமே சீட் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

வைகோ

இது அ.தி.மு.க-வின் கணக்கு :

தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை தற்போதிருக்கும் கூட்டணியில் பெரிய மாற்றத்தை எதுவும் செய்துகொள்ள விரும்பவில்லை அந்தக் கட்சி. கூடுதலாக விஜயகாந்தை மட்டும் எப்படியாவது உள்ளே இழுத்துவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தக் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க., தன் கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யத் தயாராக இருக்கிறது. அதில் முதலாவது குறி பா.ஜ.கவு-க்குத்தானாம். பா.ஜ.க கூட்டணியில் இருந்தால் கண்டிப்பாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இடைத் தேர்தலில் கணிசமாக வெற்றியைப் பெற்றபோதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது அதனால்தான். அதனால், எப்படியாவது இந்தத் தேர்தலில் பா.ஜ.கவைக் கழற்றிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களாம் அந்தக் கட்சியின் நிர்வாகிகள். `தேர்தலில் மட்டும் விலகியே இருக்கலாமே...’ என டெல்லி பா.ஜ.க தலைமையைச் சமாதானம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம்.

Also Read: 2021 சட்டமன்றத் தேர்தல்... ஊடக வழி பிரசாரங்கள்... எந்தக் கட்சிக்கு சாதகம்? #2021TNElection

பா.ஜ.க கூட்டணியைவிட்டுப் போய்விட்டால் தானாக, த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வார்கள். அந்தவகையில் பா.ம.க-வுக்கு 25 இடங்களும், தே.மு.தி.க-வுக்கு 15 இடங்களும், மனித நேய மக்கள் கட்சியை கூட்டணிக்குள் இழுத்து அந்தக் கட்சிக்கு 3 இடங்களும் செ.கு.தமிழரசன், கருணாஸ், தனியரசுக்கு தலா ஓர் இடமும் மீதமுள்ள 3 இடங்களை வேறு ஏதாவது கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரிக்கு இந்தமுறை சீட்டு வழங்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவரை ஈடுகட்டுவதற்காகத்தான் மனிதநேய மக்கள் கட்சியை உள்ளிழுக்கும் வேலைகள் நடந்துவருகின்றனவாம். நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கேட்டு தி.மு.க கொடுக்காததால், ஏற்கெனவே ஜவாஹிருல்லா ஒதுங்கித்தான் இருக்கிறார், அதனால் எளிதாக உள்ளே கொண்டு வந்துவிடலாம் எனவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - எல்.முருகன்

ஆக மொத்தத்தில், 185 இடங்களில் கண்டிப்பாக தனித்துப் போட்டியிட்டே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறதாம் அ.தி.மு.க. ஒருவேளை தே.மு.தி.க முரண்டுபிடித்தால் அல்லது தி.மு.க கூட்டணிக்குச் சென்றுவிட்டால் அந்த 15 இடங்களையும் சேர்த்து 200 இடங்களில் போட்டியிடலாம் எனவும் முடிவு செய்திருக்கிறதாம் அந்தக் கட்சி. கூட்டணிக் கட்சிகளால் நமக்கு எந்த நன்மையும் இல்லை... நம்மால்தான் அவர்களுக்கு லாபம். அதனால், கூட்டணிக் கட்சிகளை நம்புவதைவிட மக்களை நம்பியே களத்தில் இறங்கிவிடலாம் என்பதே அ.தி.மு.க வட்டாரத்தின் தாரக மந்திரமாக மாறியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-many-seats-for-alliance-partys-dmk-and-admk-election-calculations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக