மலை மாவட்டமான நீலகிரியில் மலையாள மொழி பேசும் மக்களும் அதிகளவு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கேரள மாநில எல்லையில் உள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிகளவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நீலகிரியில் உள்ள பள்ளி கல்லூரிகள், உணவகங்கள், தனியார் நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். ஓணம் பண்டிகையன்று நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ஓணத்தை கொண்டாடி வருகின்றனர்.
கொரோனாக்கால ஓணம் குறித்து நம்மிடம் பேசிய உபதலையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ், ``இங்கப் பொருத்தவரைக்கும் கேரளா மாதிரியே ஓணம் நடக்கும். இப்போ கொரோனா காரணமா மக்கள் ரொம்ப பாதிச்சிட்டாங்க. இங்கு வெளையும் காய்கறி, பூ எல்லாம் வெளி ஊருக்கு அனுப்புவாங்க, அதே மாதிரி அங்கிருந்தும் ஏராளமான பொருள்கள் வந்து குவியும். ஒரு வாரம் ஊரே கொண்டாட்டமா இருக்கும்.
அரசாங்க உத்தரவ மதிச்சி சமூக இடைவெளியோட கொண்டாடுறோம். மாஸ்க் போட்டுதான் பெண்கள் பூக்கோலம் போடுறாங்க. மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுறாங்க. அடுத்த வருஷம் நல்லபடியாக இருக்கும்னு கடவுள வேண்டுறோம்" என முடித்தார்.
ஊட்டி மார்கெட்டில் பூக்கடை நடத்திவரும் பெண் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``கடைக்கு பூ வந்து சேரவே பெரும்பாடாபோச்சி. நேத்து ஊரடங்குனு கடைய மூட சொல்லிட்டாங்க. பூ வியாபாரமே ரொம்ப டல்லா இருக்கு. இப்போதான் மக்கள் வர ஆரம்பிக்கிறாங்க. இந்த வருஷம் எல்லாத்துக்கும் பாதிப்புதான்" என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/nilgiri-onam-celebration-with-social-distancing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக