Ad

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

``ஐ கெனாட் லிவ் வித்தவுட் ஹெர்!" அப்பாவின் இறுதி வார்த்தைகள் - ஏ.ஆர்.லட்சுமணன் மகன்

உச்சநீதிமன்றத்தில் திறமையால் தடம் பதித்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மறைவு, செட்டிநாட்டுப் பகுதியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மீனாட்சி ஆச்சி இறப்பால் மனம் உடைந்த அவர், ஒரு நாள் கழித்து தானும் உயிர்விட்ட சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திடமான நீதிபதியாக, அறிவார்ந்த ஆளுமையாக அறியப்பட்ட அவர், அன்பு மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் மனம் உடைந்து இறந்துள்ளார் என்பது, அவர் மணவாழ்க்கையின் அடர்த்தியைச் சொல்கிறது.

மனைவியுடன் ஏ.ஆர்.லட்சுமணன்

ஏ.ஆர்.லட்சுமணனின் இளைய மகனும், மூத்த வழக்கறிஞருமான சுந்தரேசனிடம் பேசினோம்.

``அப்பாவுக்கு எப்போதும் குடும்பத்து மேல அதிக அன்பு, அக்கறை. நாங்க மொத்தம் நாலு பிள்ளைங்க. மூத்தவர் அண்ணன், ரெண்டு அக்கா, கடைசி மகன் நான். தவிர, ஒரு வளர்ப்பு மகன் இருக்கார். அம்மாவும் அப்பாவும் அம்மாவின் தங்கச்சி பையனை தத்தெடுத்து வளர்த்தாங்க. அவரை எந்த வேறுபாடும் இல்லாம வளர்த்தெடுத்தாங்க. அவரும் எங்க எல்லார் மேலயும் அன்பா இருப்பார். வெளிநாடுகளில் பெரிய நிறுவனங்களில் பணி செய்துவிட்டு இப்ப புதுக்கோட்டையில் விவசாய முறைகளைக் கையாண்டு வர்றார். என் சகோதரி இருவரும் திருமணம் முடிந்து நல்லாயிருக்காங்க'' என்றவர், அம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்துப் பகிர்ந்தார்.

``எங்க அண்ணன் மகன் திருமணம், கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. எங்க அப்பா, தன் பேரனின் திருமணத்தில் மிகவும் ஆர்வமாவும் நெகிழ்ச்சியாவும் இருந்தார். அப்போதான் அம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

திருமண விசேஷங்கள் எல்லாம் முடியும் நேரத்தில், அம்மா மருத்துவமனையில் இருந்தாங்க. பேரன் கல்யாண வேலைகளில் பரபரப்பா இருந்த எங்கம்மாவுக்கு சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டது. விசேஷ மும்மரத்தில், தனக்கு பெருசா ஒண்ணும் இருக்காதுனு நினைச்சாங்க. ஆனா, டெஸ்ட்டில் கொரோனா பாசிட்டிவ். மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அதுக்கப்புறம் அப்பா, பேரன் கல்யாணத்தில் முழுமையான சந்தோஷமில்லாமதான் இருந்தார். திருமணத்துக்கு வந்தவங்களைக்கூட சைகையில்தான் வரவேற்றார். மனைவி தன் கூட நின்னு வாழ்த்தாம பேரன் திருமணம் நடக்குதே என்ற வருத்தம் அப்பாவுக்கு இருந்தது. அப்போவே அப்பா மனசளவில் பலவீனமாகிட்டார்.

அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் ஏ.ஆர்.லட்சுமணன் மற்றும் அவரது மனைவி

மறுநாள் 25-ம் தேதி காலையில், அம்மா இறந்துட்டாங்க. அந்தச் செய்தியை அப்பாகிட்ட சொன்னப்போ அவர், ``ஐ வில் நாட் சர்வைவ் லாங்... ஐ கெனாட் லிவ் வித்தவுட் ஹெர்"னு அப்போவே இந்த வார்த்தைகளைச் சொல்லிட்டார். மனசு உடைஞ்சு போயிட்டார்னு நினைச்சோம். நடமாடினாரே தவிர, அதில் உயிரில்லாமதான் இருந்தார். அம்மா இறந்து ஒன்றரை நாளில், தன் உயிரையும் விட்டுட்டார்'' என்றவருக்கு வார்த்தைகள் தடைபடுகின்றன.

``அப்பாவுக்கு எந்த உடல்நலப் பிரச்னைகளும் இல்லை. அம்மாவின் இறப்பு துக்கத்துல, சடன் ஹார்ட் ஃபெயிலியர். ஆறு மணி நேரம் அப்பாவை ஹாஸ்பிட்டலில் வைத்து சிகிச்சையளித்துப் பார்த்தோம். ஆனாலும், அவரைக் காப்பாற்ற முடியலை.

ஒரே நேரத்தில் அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இழந்து மீளமுடியாத சோகத்தில் எங்க குடும்பம் தவிக்குது. அம்மாவும் அப்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப அன்பா, ஆதரவா, அந்நியோன்யமா இருப்பாங்க. ஆனா, இறப்பிலும் பிரியாம இப்படி சேர்ந்து போவாங்கனு நாங்க எதிர்பார்க்கலை'' - குரல் தடுமாறுகிறது சுந்தரேசனுக்கு.

ஏ.ஆர்.லட்சுமணன்

தேவகோட்டை அருணாசலம் அவர்களின் மகன், முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். 1942 மார்ச் 22 அன்று பிறந்தார். தேவகோட்டையில் பத்தாம் வகுப்பை முடித்து மதுரை, திருச்சி, சென்னை எனக் கல்விப் பயணத்தைத் தொடர்ந்தார். வழக்கறிஞர் படிப்பை முடித்த பல்வேறு மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

சிறப்பான வழக்கறிஞராக இருந்தபோது, வங்கி சார்ந்த தொழில் செய்ய வேண்டும் என முயன்றார். என்றாலும், பிற மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து நீதித்துறையில் இயங்கினார். கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினார். நீதிபதியாகத் தடம் பதித்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஆயிரக்கணக்கான வழக்குகளைக் கையாண்டுள்ளார்.

ஏ.ஆர்.லட்சுமணன் இறப்பு

2002 - 2007 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி செய்துள்ளார். தன் பணிக்காகப் பல விருதுகள் பெற்றார்.

`நீதியின் குரல்', `வரலாற்றின் சுவடுகள்', `பன்மலர் சோலை' எனப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். கேரளாவில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற சட்டம் இயற்றி நாடு முழுக்க கவனம் பெற்றார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் நியமித்த ஐவர் குழுவில் தமிழகம் சார்பாக இடம் பெற்றவர் ஏ.ஆர்.லட்சுமணன்.



source https://www.vikatan.com/news/general-news/justice-a-r-lakshmanan-son-shares-about-last-moments-of-him

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக