"விகடன் முயற்சியால் எனக்கு புது ரேஷன் கார்டு கையில் கிடைச்சிருச்சு. இனி, நான் ரேஷன் கடையில் அரிசி வாங்கி, நல்ல சாப்பாடு சாப்பிடுவேன். இந்த உதவியை என் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன்" என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார் மாரியப்பன்.
Also Read: `மூணு வேளையும் முருங்கைக்கீரைதான் சாப்பாடு!’ - துயரத்தில் தவிக்கும் 70 வயது மாரியப்பன்
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் மாரியப்பன். விகடன் இணையதள வாசகர்களுக்கு மாரியப்பன் ஏற்கனவே அறிமுகமானவர்தான். மனைவி, குழைந்தைகளும் இறந்துவிட, அரவணைக்க ஆதரவின்றி ஓலைக்குடிசையில் தனிமரமாக வாழ்ந்துவருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, இவரது ரேஷன் கார்டை, ரேஷன் கடை ஊழியர், ஏமாற்றி வாங்கிச்சென்றார். அதன்பிறகு, மாரியப்பன் பலமுறை கேட்டும், ரேஷன் கார்டை திருப்பிதரவில்லை. இதனால், சாப்பாட்டுக்கு வழியில்லாமல், அக்கம்பக்கத்து வீடுகளில் யாசகம் கேட்டு சாப்பிட்டு வந்திருக்கிறார். முடியாதபட்சத்தில் முருங்கைகீரையை கிண்டித் தின்று, உயிர்வளர்த்து வந்தார்.
இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும், வயோதிகம் என்பதாலும் வேலைக்குகூட இவரால் போகமுடியவில்லை. கொரோனா பாதிப்புக்கு பிறகு, தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு ரூ. 1, 000 என்று அறிவித்ததைகூட, ரேஷன் கார்டு இல்லாததால் இவரால் வாங்கமுடியாத சூழல். இவரின் இந்த அவலநிலை குறித்து, விகடன் இணையதளத்தில் கட்டுரை ஒன்று எழுதினோம். அதனைப் படித்த பல வாசகர்கள், இந்தப் பெரியவருக்கு உதவிகள் செய்தனர்.
இன்னொருபக்கம், நம் கட்டுரையைப் படித்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், 'அந்த பெரியவரின் ரேஷன் கார்டு பிரச்னையை உடனே என்னன்னு பாருங்க' என்று கடவூர் தாசில்தார் அமுதாவுக்கு உத்தரவிட்டார். அவர், தெற்கு அய்யம்பாளையம் வி.ஏ.ஓவை முடுக்கிவிட்டார். தெற்கு அய்யம்பாளையம் ரேஷன் கடைக்குச் சென்ற வி.ஏ.ஓ, அங்கு விசாரணை மேற்கொண்டார். அப்போதுதான், மாரியப்பன் ரேஷன் கார்டு, அருணாச்சலம் என்பவரின் குடும்ப கார்டாக முறைகேடாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் அப்போதும், 'மாரியப்பனே விருப்பப்பட்டு அவரது ரேஷன் கார்டை அருணாச்சலத்தின் குடும்ப கார்டாக பயன்படுத்தச் சொன்னார். இதுல, எங்க தப்பு ஒன்றுமில்லை' என்று சமாளித்தனர். ஆனால், வி.ஏ.ஓ சத்தம் போட, 'அருணாச்சலம் வீட்டு கார்டில் இருந்து மாரியப்பன் பெயரை தனியே பிரித்து, மாரியப்பனுக்கு புதுகார்டு கிடைக்க வழிவகை செய்கிறோம்' என்று சொன்னார்கள்.
'இதுபோல் இனி செயல்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து, தெற்கு அய்யம்பாளையம் ரேஷன் கடையில், மாரியப்பனுக்கு புது ரேஷன் கார்டு கிடைக்க அப்ளை செய்யப்பட்டது. இந்த தகவலையும், விகடன் இணையதளத்தில் செய்தியாக பதிந்திருந்தோம். இந்த நிலையில், மாரியப்பனுக்கு தனி ரேஷன் கார்டு தற்போது கையில் கிடைத்திருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்களே கொண்டு வந்து மாரியப்பன் கையில் கொடுக்க, 'இரண்டு வருடங்களாக மாயமாக போயிருந்த ரேஷன் கார்டு கையில் கிடைத்துவிட்டதே' என்று மகிழ்ந்துபோயிருக்கிறார்.
இதுகுறித்து, மாரியப்பனிடம் பேசினோம். ``வயதான காலத்தில், ரேஷன் அரிசியில்கூட சாப்பாடு ரெடிபண்ணி சாப்பிடமுடியாதவனா இருந்தேன். என் ரேஷன் கார்டை வாங்கி வச்சுக்கிட்டு, திருப்பி தராம, 'இந்தா அந்தா'னு ரெண்டு வருஷமா அலைக்கழிச்சாங்க. இதனால், கடந்த ரெண்டு வருஷமா சாப்பாட்டுக்கு வழியில்லாம நான்பட்ட அவஸ்தை, அந்த ஆண்டவனுக்குதான் தெரியும். இதனால், பலவேளைகள்ல வெறும் முருங்கைகீரையை கிண்டி தின்னுட்டு, காலத்தை ஓட்டிக்கிட்டு வந்தேன். எனக்கு ஆதரவுகாட்டகூட ஆளில்லாம இருந்தேன்.
அப்போதான், என்னைப்பற்றி விகடன் பத்திரிகையில் எழுதினீங்க. அதன்பிறகு, ஏகப்பட்ட உதவிகளும், உறவுகளும் எனக்கு கிடைச்சுச்சு. உங்க பத்திரிகை முயற்சியால, இப்போ என் கையில் ரேஷன் கார்டும் கிடைச்சிருச்சு. இனி, சாப்பாட்டுக்கு பிரச்னையில்லை. ரேஷன் அரிசியை வாங்கி பொங்கித் தின்னுட்டு, விதி வந்ததும் போய் சேர்ந்துருவேன். இந்த உதவியை என் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன் தம்பி" என்று நெக்குருகிபோய் சொன்னார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-old-man-get-new-ration-card-after-vikatan-article
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக