Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

`ஆஸ்திரேலியா - ஜனவரி...’ அன்று பார்டர், இன்று கோலி... வரலாற்றின் சுவாரஸ்ய தொடர்பு!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர் தமக்குக் குழந்தை பிறக்கப்போகும் நிகழ்வை ட்விட்டரில் தெரிவித்தனர். இந்த அறிவிப்பும் புகைப்படமும் வைரலாகிவருகிறது. 'ஜனவரி 2021ல் நாங்கள் மூன்று பேராக இருப்போம்' என்று அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.
விராட் கோலி

அடுத்த வருடம் ஜனவரி மாதம் விராட்-அனுஷ்கா தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கவுள்ளது. ஆனால், ஜனவரி 2021ல் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் இருப்பார்கள். டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 17 வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதைக் குறிப்பிட வேண்டிய காரணம், இதோடு தொடர்புடைய மற்றொரு வரலாற்று நிகழ்வு.

1986ம் ஆண்டு இதே ஜனவரி மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணம் சென்றிருந்தது. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஜனவரி 2 அன்று தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக சுனில் கவாஸ்கர் 172 ரன்கள் எடுத்தார். 'ஆலன் பார்டர்' தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெற்றிகரமாக 396 ரன்களைப் பெற்றது. ஆனால், ஃபாலோ ஆனில் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 119 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால், அப்போதைய ஆஸ்திரேலிய அணியினர் இதைக் கொண்டாட்டமாகவே ஏற்றனர். ஏனெனில், ஒரு சுவாரஸ்ய தருணத்திற்காகவே அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

கேப்டன் ஆலன் பார்டருக்கு ஆட்டம் நடைபெற்ற அன்று பிற்பகல் 'பிரிஸ்பேன்' நகர மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆட்டத்திலிருந்த ஆலனை எப்படியாவது அங்கு செல்ல வைக்க வேண்டும் என்று மற்ற வீரர்கள் நினைத்தார்கள். ஆட்டத்தின் நடுவே, 'வாழ்த்துகள் ஆலன் பார்டர், உங்கள் மகள் நிகோல் பிறந்துள்ளார்' என்று அறிவிப்புப் பலகையில் தெரிவித்தார்கள். இந்த நிகழ்வால் வழக்கமான பேட்டிங் ஆர்டர் மாறியது. ஆலன் கடைசியில் டெயில் எண்டர்களுடன் இறங்கி அவுட்டானார். விக்கெட் சரமாரியாக விழுந்து டிராவுக்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா. ஆனால், மறுநாள் 'ஆலன் குழந்தையை வென்றார்' என்று சுவாரஸ்ய செய்திகள் வெளியாகின.

வரலாறு திரும்பும் விதமாக அதே ஆஸ்திரேலியா - இந்தியா ஆட்டம் ஜனவரியில் நடக்கிறது. இந்த முறை இந்திய அணியின் கேப்டனுக்குக் குழந்தை பிறக்கவுள்ளது. குறிப்பாக, பார்டருக்குக் குழந்தை பிறந்த அந்தக் குறிப்பிட்ட தேதியை ஒட்டி (ஜனவரி 3-7) அதே டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இப்படியொரு நாஸ்டால்ஜியா தொடர்பு ஏற்படவிருக்கிறது.

தோனி மகளுடன்...

Also Read: `இந்தக் கேள்வியை மகி பாயிடம்தான் கேட்க வேண்டும்!’ - கோலி பகிரும் கீப்பிங் அனுபவம்

இதுபோன்ற நிகழ்வு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் நடந்தது. தோனி-ஷாக்ஷி தம்பதியினருக்குப் பிப்ரவரி 6, 2015ம் ஆண்டு குழந்தை பிறந்தது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம் நடைபெற்ற இரண்டு நாள்களுக்கு முன், 'குழந்தை பிறந்ததைச் சொல்ல அப்போது தோனியின் கையில் மொபைல்கூட இல்லை' என்றார் ஷாக்ஷி. பின், ரெய்னாவைத் தொடர்பு கொண்டு அவர் மூலமாகத்தான் ஒரு வழியாக தோனிக்குத் தெரியப்படுத்தினார். "உங்களுக்குக் குழந்தை பிறந்த அந்தத் தருணத்தில் அருகில் இல்லாததை நினைத்து வருந்துகிறீர்களா?" என்று தோனியிடம் அப்போது கேட்கப்பட்டது. "உண்மையில் இல்லை. எனது நேஷனல் டியூட்டிக்கு முன் மற்றவையெல்லாம் பிறகுதான். உலகக் கோப்பையே அப்போது முதன்மை நோக்கமாக இருந்தது" என்றார் தோனி.



source https://sports.vikatan.com/cricket/child-birth-and-the-similarities-between-allan-border-and-virat-kohli

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக