Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

ஆசிரியர்களின் ஆன்லைன் கல்வியும், ஆஃப்லைன் விவசாயமும்... பள்ளிக்குள் ஒரு பசுமை புரட்சி!

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள், அதன் அருகே ஏராளமான காய்கறி, கொடி, கீரை வகைகளுடன் அந்த பள்ளி வளாகமே பசுமை மண்டலமாக காட்சியளிக்கிறது. கோழிகள், ஆடுகள், நாட்டு நாய்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. விவசாய மண்டலமாக மாறியிருக்கும் கோவை வீரபாண்டியில் உள்ள புனித ஜான்ஸ் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தேன்.

கோவை தனியார் பள்ளி விவசாயம்

Also Read: ஈரோடு: முன்னணி நிறுவனத்தில் வேலை; பார்ட்டைமாகக் கிழங்கு விவசாயம்! - அசத்தும் ஐ.டி இளைஞர்

கொரோனா பாதிப்பு வகுப்பறை கல்வியை, ஆன்லைன் கல்வியாக மாற்றிவிட்டது. புனித ஜான்ஸ் பள்ளியும் அதில் விதிவிலக்கில்லை. ஆனால், ஆன்லைன் கல்வியுடன் விடுவதில்லை. ஆன்லைன் கல்வி எடுக்கும் அதே ஆசிரியர்களை வைத்து, தங்களது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முக்கால் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

சொற்பொழிவு ஆற்றுவது போல, செந்தமிழில் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் தமிழ் ஆசிரியர் சக்திவேல். வகுப்பு முடிந்தவுடன், உடையை மாற்றியவர் நேராக விவசாய நிலத்துக்குள் நுழைந்து விறுவிறுவென பணிகளைத் தொடங்கினார். அவரிடம் பேசினோம். "நான் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இத்தனை நாள்கள் ஊதியம் சரியாக வரும், பணியும் நடந்து கொண்டிருக்கும்.

ஆசிரியர் சக்திவேல்
ஆன்லைன் கல்வி
கோவை தனியார் பள்ளி விவசாயம்

அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. திடீரென கொரோனா வந்தவுடன் வீட்டில் முடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை வந்தது. நான் எனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டேன். ஊதியப் பிரச்னையால் குடும்பம் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. நாங்கள் விவசாய குடும்பம். அதனால் விவசாயம் செய்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான், பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. 'ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டே, விவசாயம் பார்க்க முடியுமா?' என கேட்டனர். உடனடியாக கிளம்பி வந்துவிட்டேன். மாணவர்களை நேரில் பார்த்து வகுப்பு எடுக்க முடியவில்லை என்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆன்லைன் கல்வியில் மாணவர்களை சந்தித்தாலும், அது ஒரு இயந்திரத்தன்மையாகத்தான் தெரிந்தது. அதில் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை.

விவசாய பணியில் ஆசிரியர் சக்திவேல்

அதேநேரத்தில், வகுப்பு முடிந்தவுடன் விவசாயம் செய்வது மனதுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தருகிறது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணியில் இருப்பது எனது மன உளைச்சலையும் குறைக்கிறது" என்கிறார்.

பள்ளியின் முதல்வர் பாஸ்கர், "2016-ம் ஆண்டில் இருந்தே எங்களது பள்ளியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்திலேயே முதல்முறையாக (தனியார் பள்ளியில்) அக்ரிகல்சர் செயின்ஸ் என்ற க்ரூப்பை தொடங்கினோம். ஒரு காலத்தில் விவசாயம் என்றாலே அது இயற்கை விவசாயம்தான். இப்போது, உரம், பூச்சிக்கொல்லி நிறைய பயன்படுத்துகிறோம். பள்ளிகள் இயங்கிக் கொண்டிருந்தபோதே, அனைத்து வகுப்புகளுக்கும் விவசாயம் கற்று கொடுத்து வந்தோம்.

முதல்வர் பாஸ்கர்

மாணவர்களே பராமரித்தனர். அதில், கிடைக்கும் காய்கறிகளை, அவர்களே சக மாணவர்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். மண் புழு உரம் தயாரிப்பதில் தொடங்கி விவசாயத்தின் அனைத்து முக்கியத்துவங்களையும் அவர்களுக்குச் சொல்லித் தருகிறோம்.

ஊரடங்கு வந்த உடனேயே எல்லோரும் அரிசி, பருப்பு, காய்கறிகளைத்தான் தேடி ஓடினோம். சாப்பாடு இல்லாமல் மனிதனால் ஒருநாள் கூட வாழ முடியாது. அந்த சாப்பாட்டுக்கு விவசாயம் முக்கியம். குழந்தைகளிடம் இருந்துத் தொடங்கினால்தான், அந்த விஷயத்தை அடுத்தத் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முடியும். ஊரடங்கில் பள்ளிகளுக்கு அனுமதியில்லை. விவசாயத்துக்கு அனுமதி இருந்தது.

கோவை தனியார் பள்ளி விவசாயம்
கோவை தனியார் பள்ளி விவசாயம்

அதனால்தான், பள்ளி மைதானத்தை உழுது, நிலக்கடை, கீரை, காய்கறி வகைகளைப் பயிரிட்டோம். எங்களுக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் இங்கிருந்துதான் எடுத்துக் கொள்கிறோம். கொரோனா பிரச்னையால், பகுதி நேர விவசாயம் பார்த்து வந்த எங்களது பள்ளி, இப்போது முழு நேர விவசாயத்தில் இறங்கிவிட்டது. ஆசிரியர்களும் அதீத ஈடுபாட்டுடன் விவசாயம் செய்து வருகின்றனர்" என்றார் பெருமிதத்துடன்.

பள்ளி தாளாளர் அரவிந்தன், "சிறு வயதில் இருந்தே எனக்கு விவசாயம் மீது ஆர்வம் அதிகம். குழந்தைகளின் பிறந்தநாள்களுக்கு முள்ளங்கி விதைப்பை கொடுப்போம். காரணம், முள்ளங்கியை எளிதில் அறுவடை செய்துவிடலாம். குழந்தைகளுக்கு விவசாயம் மீது ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக அதைத் தொடங்கினோம். பிறகு மாடித்தோட்டத்தில் விவசாயம் செய்தோம். ஒருமுறை 8-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம், 'தக்காளி எதில் இருந்து வருகிறது?' என கேட்டேன்.

அரவிந்தன்

அதற்கு அவர், வேப்ப மரத்தை காட்டி 'அதில் இருந்துதான் தக்காளி கிடைக்கிறது' என்று சொன்னார். இதுகூட தெரியாத மாணவருக்கு எலக்ட்ரான், புரோட்டான் பற்றி சொல்லி எப்படிப் புரிய வைக்க முடியும்? என்று யோசித்தேன். படிப்பு முக்கியம்தான். அதே அளவுக்கு உணவுக்கு ஆதரமாக உள்ள விவசாயம் குறித்தும் மாணவர்களுக்கு தெரியவேண்டும்.

பிறகு, பள்ளி மைதானத்தில் ஒரு ஓரமாக இயற்கை விவசாயம் செய்து வந்தோம். கொரோனாவில் அது விரிவடைந்துவிட்டது. இயற்கை விவசாயம் என்றாலே அதன் விதைகள்தான் மிகவும் முக்கியம். எனக்கு அதில் அதிக ஆர்வம் என்பதால் பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான நாட்டு விதைகளை சேகரித்துள்ளோம். அப்படி சேகரிக்கும் விதைகளை, பெருக்கி அதை எங்களைப் போல ஆர்வமுள்ள பல்வேறு நபர்களுக்கு இலவசமாகப் பகிர்ந்து வருகிறாம்.

கோவை தனியார் பள்ளி விவசாயம்
கோவை தனியார் பள்ளி விவசாயம்
கோவை தனியார் பள்ளி விவசாயம்

இந்தப் பணிகள் எல்லாம் காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளில் இதுபோல விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அனைத்துப் பள்ளிகளுமே விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அடுத்தத் தலைமுறை மிகவும் நலமாக இருப்பார்கள்" என்றார் அழுத்தமாக.



source https://www.vikatan.com/news/education/coimbatore-private-school-teachers-doing-agriculture

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக