Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தஞ்சை: `எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி!' - முதல்வர் பழனிசாமி

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் எப்படி அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தோமோ அதே போல் இப்போது மட்டுமல்ல எப்போதும் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்' என தஞ்சாவூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு மேடை அமைக்கப் பட்டிருந்தது. பெண் தூய்மை பணியாளர் ஒருவர் அடிக்கடி மேடையை சுத்தம் செய்து கொண்டே இருந்தார். மேடையில் பெண் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததும் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவுவதற்கு பூக்களை கொடுப்பதற்காக ஜெயலலிதா போட்டோ அருகிலேயே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தார்.

விழா மேடையில்

நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகளுக்கு பெயர் அழைக்கப் பட்டதும், எப்படி வந்து பெற்று கொள்ள வேண்டும் என்பதை முன்பே பயனாளிகளிடம் அதிகாரிகள் ரிகர்சல் செய்து காண்பித்தனர். பின்னர் சரியாக 2.40 மணிக்கு முதல்வர் மேடைக்கு வந்தார். அப்போது செவிலியர் ஒருவர் உடல் வெப்பநிலை கருவியை கொண்டு முதல்வருக்கு வெப்பநிலை சரியாக இருக்கிறதா என பார்த்தார். அவரிடம் முதல்வர் வெப்பம் சரியாக இருக்கிறதா என புன்னகைத்தபடியே கேட்டார்.

அதன் பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.71 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டிலான 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 39 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 36 பணிகளுக்கான திறப்பு விழாவிற்கான கல்வெட்டையும், 8,357 பேருக்கு ரூ.46 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைம் வழங்கினார்.

கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில்

பின்னர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளிடமும், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணித் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடமும், தொழில் முனைவோர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், ``தஞ்சாவூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறையில் பல கோடி ரூபாய் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதே போல் கல்வித்துறையிலும் உயர்கல்வி பயில பல கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது அரசின் கவனத்துக்கு தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு ஆந்திரா, தெலங்கான மாநில முதல்வர்களோடு முதற்கட்ட பேச்சுவார்த்தை நல்லபடியாக துவங்கியுள்ளோம். இந்த திட்டம் நல்லபடியாக நிறைவேறும்.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது, காவிரி மேலாண்மை ஆணையம் நமக்குரிய நீரைப் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தரும். எனவே சம்பா சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை இருக்காது. தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தேர்தலை சந்தித்த போதும் அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்தித்து வந்தோம்.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்

அவர்கள் இல்லாமல் சந்தித்த கடந்த எம்.பித் தேர்தலிலும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியுடன் தான் சந்தித்தோம். இப்போது மட்டுமல்ல இனி தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி அமைக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-talks-regarding-political-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக