சென்னை திருநின்றவூர், சி.டி.ஹெச் சாலை, பெட்ரோல் பங்க் அருகில் குடியிருந்துவருபவர் சரஸ்வதி (35). இவரின் மகன் சாமுவேல் (7). இவர், அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். சரஸ்வதி, இன்று காலை 9 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். அப்போது அவர், `என் மகனுக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் வீட்டிலேயே படுத்திருந்தான். கடந்த 3 நாள்களாக அவன் கண்விழிக்கவில்லை. இன்று அவனிடமிருந்து தூர்நாற்றம் வீசுகிறது’ என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட போலீஸார், முகவரியைக் கேட்டுள்ளனர்.
பின்னர், சரஸ்வதி கூறிய முகவரியை திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து போலீஸார் விவரத்தைக் கூறினர். இதையடுத்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குள் சாமுவேல் இறந்துகிடந்தார். அவர் இறந்து மூன்று நாள்களுக்கு மேலானதால் சடலம் அழுகி தூர்நாற்றம் வீசியது. மகனின் அருகில் சரஸ்வதி அழுதுக்கொண்டிருந்தார்.
போலீஸார், அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, உடல்நலம் சரியில்லை என்று சாமுவேல் கூறினான். அதன்பிறகு படுத்தே கிடந்தான். அவன் மீது எறும்பு எல்லாம் ஏறியது. அதைக்கூட அவன் கண்டுக்கொள்ளவில்லை. நான்தான் அதை தட்டிவிட்டேன் என்று சரஸ்வதி கூறினார். சரஸ்வதியின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்த போலீஸார் அவரின் பக்கத்து வீடுகளில் விசாரித்தனர். அப்போதுதான் சரஸ்வதிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.
சாமுவேலின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரஸ்வதி குடும்பப் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சோகமான தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து திருநின்றவூர் போலீஸார் கூறுகையில், ``கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதிக்கும், ஜீவா என்கிற ஜீவானந்ததுக்கும் திருமணம் நடந்தது. சரஸ்வதிக்கும் ஜீவாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதனால் மகனுடன் சரஸ்வதி, திருநின்றவூரில் வசித்து வருகிறார்.
Also Read: சென்னை: `உங்களுக்கு வீடு தர பயமாக இருக்கிறது!’ - ரூ.15 லட்சம் கொடுத்தவரை மிரட்டிய தம்பதி
சரஸ்வதி சொந்த வீட்டில் குடியிருந்துவருகிறார். இவர் ஹோமியோபதி டாக்டராகப் பணியாற்றி வந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதுகுறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. கொரோனா காரணமாக அவருக்கு 6 மாதங்களாக வருமானம் இல்லை. அதனால் வறுமையில் தவித்து வந்துள்ளார். யாரிடமும் அதிகமாக பேசாத சரஸ்வதியும் சாமுவேலும் கடந்த 3 தினங்களாக வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. இந்தநிலையில் இன்றுசரஸ்வதி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பிறகுதான் சாமுவேல் உயிரிழந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.
சரஸ்வதியிடம் விசாரித்தபோது அவர் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருகிறார். அதனால், அவரின் கணவர் ஜீவா மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம் விசாரித்ததால்தான் சரஸ்வதி குடும்பம் குறித்த விவரங்கள் தெரியவரும். மேலும் சாமுவேல் மரணத்துக்கு என்ன காரணம் என்ற விவரமும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் தெரியவரும். சரஸ்வதியிடம் விசாரித்தபோது ஜீவா, ஹோமியோபதி டாக்டர் என்று கூறியுள்ளார்
சாமுவேலுக்கு, கிட்னி பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களாக சரஸ்வதியும் சாமுவேலும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். அதனால், சரஸ்வதிக்கும் முதலுதவி மற்றும் சாப்பாடு வாங்கிக் கொடுத்துள்ளோம்" என்றனர்.
` சரஸ்வதி குறித்து அவரின் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. அதனால் சரஸ்வதியின் கணவர் ஜீவாவிடம் விசாரித்தபிறகுதான் இந்தச் சம்பவம் குறித்த முழு விவரம் தெரியும் என போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
சரஸ்வதி சொல்லும் முரண்பட்ட தகவல்களால் திருநின்றவூர் போலீஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/homeopathy-doctor-who-was-with-son-corpse-for-3-days-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக