Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கொரோனா: இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் பத்மாவதி காலமானார்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,21,246 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,469 ஆக உயர்ந்துள்ளது. கொடூரமான இந்த வைரஸால் அமைச்சர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது, இந்தியாவின் முதல் பெண் இதயநோய் சிகிச்சை மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய இருதயவியல் நிறுவனம்

மருத்துவர் எஸ்.பத்மாவதி, இந்தியாவின் மிகச்சிறந்த இதயநோய் மருத்துவர்களில் ஒருவர். 103 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து கடந்த 11 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாகத் தேசிய இதயவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``God Mother of Cardiology - என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதல் பெண் இதயநோய் சிகிச்சை மருத்துவர் பத்மாவதி கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். கடுமையான காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

Also Read: கடும் போராட்டத்திற்குப் பிறகு கைகூடிய கனவு... வடகிழக்கின் முதல் திருநங்கை மருத்துவர் பியோன்சி!

மியான்மரில் 1917-ம் ஆண்டு மருத்துவர் பத்மாவதி பிறந்தார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டமான 1942-ல் அவர் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் தன்னுடைய படிப்பைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, ஜான் ஹாப்கின்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் மேற்படிப்புகளைத் தொடர்ந்துள்ளார். பின்னர், லண்டனில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் பயிற்சியை மேற்கொண்டார். படிப்பை முடித்து இந்தியா திரும்பியதும், லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். 1967-ம் ஆண்டு மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அக்கல்லூரியில் இதயவியல் துறையையும் அமைத்தார். இதயவியல் துறைக்கான ஆய்வுப்படிப்பு, இதய சிகிச்சைக்கான முதல் கிளினிக் எனப் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து, 1981-ம் ஆண்டு தேசிய இதயவியல் நிறுவனத்தையும் தொடங்கினார்.

மருத்துவர்

இதயநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக 1962-ம் ஆண்டு அகில இந்திய இதய அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார். இதயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற இவர் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் துறையில் பணியாற்றியுள்ளார். இதயவியல் துறையில் இவர் செய்த அசாதாரணமான பணிகளைப் பாராட்டி 1967-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருதையும் 1992-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்க இதயவியல் கல்லூரி மற்றும் ஃபாம்ஸின் ஃபெல்லோஷிப்பையும் இவர் பெற்றுள்ளார். இத்தனை சாதனைகளைச் செய்து இதயவியல் துறையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மருத்துவர் பத்மாவதியின் மரணம் பலரையும் கலங்க வைத்துள்ளது. அவரின் மாணவர்கள் மற்றும் உடன் பணியாற்றியவர்கள் பலரும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: செங்கல் சூளை பணி டு மருத்துவர்... ஏழை மாணவனின் வெற்றியும் தொடரும் போராட்டமும்!



source https://www.vikatan.com/news/india/indias-first-woman-cardiologist-dr-padmavati-dies-of-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக