சேலம் மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையத்தில் நேற்று சுற்றுச் சுவர் சரிந்து விழுந்ததில் ரயில்வே டிராக்கில் வேலைச் செய்து கொண்டிருந்த ஒரு பெண் பலியானார். உடன் வேலை செய்து கொண்டிருந்த 4 பெண்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ரயில் நிலையத்தின் சுற்றுச் சுவர் வேலை ஆட்கள் மீது சரிந்து விழும் வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேட்டூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை இரண்டாவது ரயில்வே டிராக் அமைக்கப்பட்டு வருகிறது. ரயில்வே டிராக்கின் அருகே குடியிருப்புகள் உள்ளதால் இந்த பகுதியில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நேற்று புதுசாம்பள்ளி கிராஸ் ரோடு அருகே நடைபெற்றது. இப்பகுதியில் ஏற்கனவே பழைய சுற்று சுவர் ஒன்று இருந்தது.
கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணத்தால் இந்த பழைய சுற்றுச் சுவர் ஈரமாக இருந்தது. பழைய சுற்றுச் சுவர் அருகே தங்கப்பொண்ணு, லட்சுமி, பத்மராஜன், கோகிலா, சீனிவாசன், கவிதா ஆகியோர் கட்டட வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பழைய சுற்றுச் சுவர் சரிந்து கட்டட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.
உடனே இவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். ஆனால் படுகாயம் அடைந்த கவிதா, பாதி வழியிலேயே இறந்துவிட்டார். மற்றவர்கள் மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பத்தை கேள்விப்பட்ட தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் சிவகாமி மற்றும் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டூர், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் வசந்தி, ''நாங்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பாழடைந்து சுற்றுச் சுவர் அருகே கழிவு நீர் கசிவு இருந்து கொண்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரிக்கும் போது கெம்பிளாஸ்ட் நிறுவனத்தின் பைப்புகள் அந்த வழியாக செல்வதாகவும், சுற்றுச் சுவர் கட்டுவதற்காக அடித்தளம் போடுவதற்காக பொக்லைன் மூலமாக குழிப் பறிக்கும் போதே சுற்றுச் சுவர் சரிந்து விழுந்ததாக கூறினார்கள். ரயில்வே துறையின் கவனக் குறைவே இந்த சம்பவத்திற்கு காரணம். உயிரிழந்தவர் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.
source https://www.vikatan.com/news/accident/mettur-railway-wall-collapsed-accident-women-died
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக