தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் ஆளுநர் சுணக்கம் காட்டுவதை ஏற்க முடியாது. அவர் காலச்சக்கரத்தை மாற்றி சுழற்றுகிறாரோ எனத் தோன்றுகிறது. கவர்னர் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம். மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டம், தேர்வு எழுதுவது மற்றொறு பாடத்திட்டமாக இருப்பதை எதிர்க்கிறோம்.
12 ஆயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க முயல்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தி பேசும், இந்தியைத் தாய்மொழியாக உள்ளவர்கள் மட்டுமே உள்ளனர். இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இந்த குழுவைக் கலைக்க வேண்டும். ஒரு அரசாங்கத்தால் மக்களுக்கு தேவையான மணலை சமச்சீராக பிரித்து கொடுக்க இயலாமல் உள்ளது. இது அரசாங்கம் மணல் கொள்ளைக்கு உடந்தையாக, பணம் கொள்ளையடிக்கிறது என்பதை காட்டுகிறது.
Also Read: `40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று மிக மோசமாக பாதித்துள்ளது. தமிழக அரசு அதனைத் தடுக்க முயற்சிக்கிறது. ஆனால், முயற்சி போதுமானதாக இல்லை. தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன. அதனைத் தடுக்க அரசு தவறி விட்டது. திருமாவளவன் மீது வழக்கு போட எந்த வித முகாந்திரமும் இல்லை. புராணங்களில் உள்ளதை மறுபதிவு செய்துள்ளார். புராணங்களில் பெண்களை இழிவாகக் கூறியுள்ளனர். திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை.
மதத்தில் உள்ள தவறுகளை நாமே சுட்டிக்காட்டினால் தவறில்லை. திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது எங்கள் தொகுதி. குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றதால் காங்கிரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை. குஷ்புவுக்குத்தான் பின்னடைவு" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/we-support-thirumavalavan-says-tn-congress-committee-leader-ks-alagiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக