Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தஞ்சை: `எனக்கு வேறு வழி தெரியலை' - வங்கி வாசலிலேயே தீக்குளித்த கணவர்... கதறிய மனைவி

தஞ்சாவூர் அருகே வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகையை கேட்டு தனியார் வங்கி ஒன்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததில், மனமுடைந்த ஒருவர் வங்கியின் முன்பே தீ வைத்து எரித்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தீக்குளித்த ஆனந்த்

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (40) இவருடைய மனைவி ஹேமா. இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனந்த் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் வல்லம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வங்கி ஒன்றில் 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

அதில், வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனால் வங்கி தரப்பில் மேலும் ரூ.6 லட்சம் கடன் தொகை நிலுவையில் உள்ளது அதனை உடனே திருப்பி செலுத்துங்கள் என ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து பதறிய அவர் வங்கிக்கு வந்து மேனேஜர் மற்றும் பணியாளர்களிடம் பணம் செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுங்கள் உடனே கட்ட முடியாது. கொரோனா நேரத்தில் பொழப்பே இல்லாமல் இருக்கிறேன் என கேட்டுள்ளார். அதற்கு வங்கி தரப்பில் முடியாது உடனே கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த நிலையில் வங்கியை விட்டு வெளியே வந்த ஆனந்த் வங்கி வாசலிலேயே தன் உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பட்டப்பகலில் அதுவும் வங்கி வாசலில் ஒருவர் தீ வைத்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையறிந்து பதறியடித்து ஓடி வந்த ஆனந்த் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த முடிவை ஏன் எடுத்தீங்க என கேட்டு கதறினர்.

ஆனந்தின் குழந்தைகள்

`எனக்கு வேறு வழி தெரியலை' என ஆனந்த் அந்த நிலையிலும் கூறியது கண்களை கலங்க வைத்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனந்த் குடும்பத்தினர் தரப்பில் பேசினோம், வங்கி தரப்பில் தொடர்பு கொண்டு கடன் பணத்தை செலுத்தவில்லை என்றால் வீடு ஏலம் விடப்படும் என கூறி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். கொரோனா நேரத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கிறோம் இப்ப போய் பணம் கட்ட சொல்றாங்களே என புலம்பி கொண்டிருந்தார்.

வங்கி முன் தீக்குளித்தவர்

அத்துடன் வங்கியில் போய் பேசிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். கொஞ்ச நேரத்தில் தீ வைத்து கொண்டதாக தகவல் வந்து எங்களை நிலைகுலைய வைத்து விட்டது. தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சோகத்துடன் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/man-set-fire-on-himself-in-front-of-bank-in-loan-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக