நீ சந்தித்திராத ஒரு மனிதனின் கண்ணில் உன் மரணம் கண்ணீரை வரவழைக்கும் என்றால், உன் வாழ்வு அர்த்தம் நிறைந்தது. எல்லோருக்கும் அத்தகைய வாழ்வும், அளப்பரிய அன்பும் கிடைக்கப்பெறுவதில்லை.
பெரும்பாலும் சில மணி நேரத் துக்கமாக, சில நாள் செய்தியாகப் பல மரணங்களை நாம் கடந்துவிடுகிறோம். ஆனால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், நிகழ்ந்து சுமார் 80 நாள்களுக்குப் பின்னும், இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. தினம் ஒரு திருப்பமும், திடுக்கிடும் தகவலும் எனப் பரபரப்பாக இருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் விட, பாலிவுட் மாஃபியா, போதை பழக்கம், வாரிசு முன்னுரிமை அரசியல் (நெபோட்டிசம்) என பல நிழல் உலக பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. திரைத்துறையைத் தாண்டி மாநில அரசியலுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மரணம்.
சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தன்னுடைய இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். பாலிவுட்டில் நிலவும் நெபோட்டிசம் காரணமாகத் தொடர் அவமானங்களுக்கு ஆளான சுஷாந்த் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார் எனக் கருத்துக்கள் வெளியாகின. கோபமடைந்த மக்கள் பாலிவுட் சினிமாவின் வாரிசு பிரபலங்கள் அனைவரையும் எதிர்த்தனர். சில தினங்களில், சுஷாந்த் மரணத்தில் ஏதோ சதி இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சந்தேகம் எழ, இந்த வழக்கை மகாராஷ்டிரா போலீசார் விசாரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலி ரியாதான் காரணம் எனப் பீகார் போலீசில் புகார் அளித்தார் சுஷாந்தின் தந்தை. இதனைத் தொடர்ந்து இரு மாநில காவல் துறையினரிடையே பனிப்போராகவும் இந்த வழக்கு உருவெடுத்தது. அதன் பின்னரே வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் முதன்மை குற்றம்சாட்டப்பட்டவராக (Prime Accused), விசாரணை வளையத்தில் சிக்கினார் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி. சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரியா தனக்கும் சுஷாந்திற்குமான உறவைப் பற்றி விளக்கமாகப் பேசியிருந்தார். அதன்பிறகு சுஷாந்தின் அறை நண்பர் சித்தார்த் பிதானி, ரியா சக்ரபோர்த்தி, அவரது தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி, சுஷாந்தின் மேனேஜர் சாமுவேல் மிராண்டா ஆகியோரை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் அவர்மீதான சந்தேகத்தை அதிகமாகியிருக்கின்றன. மறைந்த நடிகருக்கு போதை பழக்கம் இருந்ததா, இல்லையா அதில் நடிகை ரியாவின் பங்கு என்ன என்பது குறித்தான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் வரை, அவருடன் ஒரே வீட்டில் ரியா வாழ்ந்துவந்திருக்கிறார். ரியா, அவரது தம்பி ஷோவிக், சுஷாந்த் ஆகிய மூவரும் கொரோனா சூழலுக்கு முன்பாக ஐரோப்பாவிற்கு சுற்றலா சென்றுள்ளனர். சுஷாந்த் மன அழுத்தத்துடன் இருப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார் ரியா. மேலும், சுஷாந்தின் பணத்தை ரியா செலவு செய்தது பற்றிய கேள்விக்கு, "சுஷாந்த் 2018-ம் ஆண்டு தன் ஆறு நண்பர்களோடு தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலா சென்றார். அங்கு அவர்களுக்காக 70 லட்சம் செலவு செய்தார். சுஷாந்த் அப்படித்தான், வாழும்போது ஒரு ராஜாவாகத்தான் வாழ்ந்தார்" என பதிலளித்துள்ளார்.
ஆனாலும், ரியா சுஷாந்தின் மீது பொருளாதார சார்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால், "எனக்காக சுஷாந்த் செலவு செய்யவில்லை, நான் மும்பையில் வாங்கிய வீடு கூட லோன் மூலம் வாங்கியதே. தற்போது மாதம் ரூபாய் 17,000 இஎம்ஐ கட்டுவது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறேன்" எனக் கூறியிருந்தார் ரியா. இந்நிலையில், சுஷாந்தின் கிரெடிட் கார்டு எப்போதும் ரியாவின் வசம்தான் இருக்கும், அவர் அதிலிருந்துதான் செலவு செய்வார் எனப் புதிய தகவல்களைக் கூறியுள்ளார் சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பித்தானி. அதேசமயம், "இஎம்ஐ கட்ட கூட காசில்லாத ரியா எப்படி மிகவும் காஸ்ட்லியான வழக்கறிஞர் கொண்டு வாதாடுகிறார்" எனக் கேள்வியெழுப்புகிறார் சுஷாந்தின் சகோதரி.
இந்நிலையில், உண்மையில் ரியாவிற்கு சுஷாந்த் மரணத்தைப் பற்றி என்ன தெரியும், சுஷாந்தின் மரண செய்தி அவருக்கு எப்படி கிடைத்தது, அவர் ஏன் சுஷாந்தின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை, அவர் சுஷாந்தின் உடலை எப்போது பார்த்தார், கடைசியாக சுஷாந்த்திடம் என்ன பேசினார், எப்போது பேசினார் ஆகிய கேள்விகளைத்தான் முக்கியமாக முன்வைக்கிறது சிபிஐ. இதற்கு முன்னர் அவர் பலமணிநேரம் மும்பை காவல்துறை, போதைமருந்துகள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல அமைப்புகளாலும் விசாரிக்கப்பட்டார்.
ரியா தவிர்த்து, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, சுஷாந்த்துடன் 'தில் பெச்சாரா' படத்தில் நடித்த நடிகை சஞ்சனா, தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா, இயக்குநர் - தயாரிப்பாளர் மகேஷ் பட் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் தினம் ஒரு புதிய தகவல் வெளியான வண்ணம் உள்ளது. சுஷாந்தின் தாய்லாந்து பயணத்தில், நடிகர் சயீஃப் அலி கானின் மகளும், 'கேதார்நாத்' படத்தில் உடன் நடித்தவருமான சாரா அலி கான் சென்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சாரா, சுஷாந்த் இருவரும் மூன்று நாள்கள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறியிருக்கிறார் உடன்சென்ற சுஷாந்தின் முன்னாள் உதவியாளர் சபீர் அஹமத்.
சுஷாந்திற்கு உளவியல் பிரச்னை இருக்கிறது என ரியா கூறியிருந்தார். ஆனால், அதை முற்றிலுமாக மறுக்கிறார் சுஷாந்த்தின் முன்னாள் காதலி அங்கிதா. ஆனால், தற்போது மூடிய இடங்களைக் கண்டால் பயம் ஏற்படும் கிளாஸ்ட்ரோபோபியா மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால் அவதிப்படுவதாக சுஷாந்த் அளித்திருந்த பழைய பேட்டி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக எல்லா திசைகளிலிருந்தும் சுஷாந்த் பற்றியான பல தகவல்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ரியாவின் தந்தையை அவர்கள் வீட்டின் வாசலில் வைத்து பத்திரிகையாளர்கள் தாக்கியதாகவும், அவரை சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் கேள்வியெழுப்புவதாகவும் ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார் ரியா. பிரபல ஆங்கில ஊடகம் ரியாவை பேட்டி காணும் போதும், அவர் குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமே என்பதை மறந்து அவரைக் குற்றவாளியாகவே கருதி அவரிடம் பேட்டி கண்டதாகவும் பலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் சுஷாந்த் வழக்கு குறித்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், "அனைத்து ஊடகங்களும் அறத்தோடு இந்த விஷயத்தைக் கையாள வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் மீது பழி சுமத்தி, பொதுமக்களின் மனநிலையை அவருக்கு எதிராகத் திருப்பும் வண்ணம் செய்திகளை வெளியிடக் கூடாது. காவல்துறையும், நீதிமன்றமும் இந்த வழக்கின் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஊடகங்கள் மற்றோர் விசாரணையை நடத்த வேண்டாம். உண்மையை ஆதாரங்களோடு வெளியிடாமல், வெறும் வதந்திகளைக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள், இதழியல் அறங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுகின்றன. இது வருத்தத்திற்குரிய விஷயம். இவ்வாறு செய்தி பகிர்வதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்" எனச் சொல்லியிருக்கிறது.
Also Read: பிரசாந்த்தின் `அப்பு', சஞ்சய் தத், அலியாவின் #Sadak2... எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?!
விரைவில், சுஷாந்தின் மரணம் குறித்து எல்லா மர்மங்களும் அவிழ்க்கப்பட்டு, அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் பிரார்த்தனை. உண்மைகள் வெளிவர பல மனஙகள் திறக்க வேண்டும்.
source https://cinema.vikatan.com/bollywood/new-information-comes-to-light-in-sushant-singh-rajput-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக