Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

முதுகுளத்தூர்: குறையாத வேகம்; நேருக்குநேர் மோதிக்கொண்ட டூ வீலர்கள்! - 4 பேர் பலியான சோகம்

முதுகுளத்தூர் அருகே திருமண விழாவிற்கு சென்று திரும்பிய போது இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் உள்ள வளைவினால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

டூவீலர் விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அய்யனார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரும் முனீஸ்வரன் என்பவரும் நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு டூவீலரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சி முடிந்த நிலையில், நேற்று இரவு இருவரும் அய்யனார்புரத்திற்கு திரும்பிகொண்டிருந்தனர். இதேபோல் மேலக்கொண்டுலாவி கிராமத்தை சேர்ந்த முனியசாமி, பழனி ஆகிய இருவரும் பேரையூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்தில் சிக்கிய டூவீலர்கள்

பேரையூர்-இலந்தைக்குளம் விலக்கு ரோட்டில் அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த இந்த இரு டூவீலர்களும், நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டூவீலரில் வந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்த நிலையில், சாலையில் மயங்கியுள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் இதுகுறித்து பேரையூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

Also Read: சென்னை:`திருட்டு கார் விபத்து; காட்டிக்கொடுத்த சர்வீஸ் சென்டர்' - போலீஸில் சிக்கிய நபர்

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மயங்கிக் கிடந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு காயமடைந்தவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், காயமடைந்த 4 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள், முதுகுளத்தூர் மருத்துவமனை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

விபத்தில் பலியானவர்கள்

விபத்து குறித்து பேரையூர் காவல் நிலையை ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். `விபத்து நடந்த இலந்தைகுளம் சாலையும், பேரையூர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வளைவான பகுதி உள்ளது. 3 சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில் வேகத் தடைகளும் இல்லை. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. நேற்று இரவு நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே விபத்தினை தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத் தடைகள் ஏற்படுத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.



source https://www.vikatan.com/news/accident/4-died-on-the-spot-in-mudukulathur-road-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக