Ad

ஞாயிறு, 2 மே, 2021

சென்னை: கள்ளச் சந்தையில் கூடுதல் விலையில் ரெம்டெசிவிர் மருந்து - சிக்கிய டாக்டர்கள்

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்திருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதால், கள்ளச் சந்தையில் விற்பனை நடந்துவருகிறது. அதைத் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சென்னையிலுள்ள அனைத்து துணை கமிஷனர்கள் தலைமையிலான போலீஸ் டீம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.

எஸ்.பி சாந்தி

சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி சாந்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து போலீஸார் தாம்பரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாம்பரம் மேம்பாலம் அருகே சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த காரில் 17 ரெம்டெசிவிர் மருந்துகள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்தபோது மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான்கானுக்கு (26) மருந்து கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த விஜய், டாக்டர் முகமது இம்ரான்கான் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில் 4,700 ரூபாய் மதிப்புகொண்ட ரெம்டெசிவிர் மருந்தை 6,000 ரூபாய்க்கு வாங்கி கள்ளச் சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பது தெரியவந்தது. டாக்டர் முகமது இம்ரான்கானின் நண்பர் விஜய் (27), பழவியாபாரம் செய்துவருகிறார். அவர்தான் டாக்டர் முகமது இம்ரான்கானுக்காக திருவண்ணாமலையிலிருந்து மருந்தை சென்னைக் கொண்டுவந்தது தெரிந்தது.

விக்னேஷ்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``டாக்டர் முகமது இம்ரான்கானுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான விக்னேஷ் என்பவர்தான் மருந்தை விற்றுவந்திருக்கிறார். புரோக்கராக ராஜ்குமார் என்பவர் செயல்பட்டுவந்திருக்கிறார். இவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

Also Read: கொரோனா: `4 லட்சத்தைத் தாண்டிய ஒரு நாள் பாதிப்பு!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சசிமோகன் மேற்பார்வையில் ஐ.சி.எஃப் வடக்கு காலனி கமல விநாயகர் கோயில் அருகில் போலீஸார் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரெம்டெசிவிர் மருந்தை இரண்டு பேர் விற்பது தொடர்பாக பேரம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (33), எர்ணாவூரைச் சேர்ந்த ஐஸ்பர் ஜானோ (31) ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து எட்டு ரெம்மெடசிவிர் மருத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது

புரசைவாக்கம் பகுதியில் சிலர் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் 15,000 ரூபாய்க்கு விற்கும் ரகசிய தகவல் வேப்பேரி போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சாம்பசிவம் (46), வேலூர் மாவட்டம் கண்டிபா என்ற ராமு (29) ஆகியோரைப் பிடித்து விசாரித்து அவர்களிடமிருந்து ஆறு ரெம்டெசிவிர் மருந்துகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் மருந்துகளைத் திருடி விற்றது தெரியவந்தது.

மேடவாக்கம் டெர்மினல் பகுதியில் மருந்தகம் ஒன்றின் எதிரில் பள்ளிக்காரணை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேடவாக்கம் வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த டாக்டர் தீபன் (28), வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மருந்தாளுநர் நரேந்திரன் என்கிற நரேஷ் (28) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிமிருந்து ஆறு ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/remdesvir-medcine-sold-in-balck-market-doctors-arrested-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக