Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

போட்ஸ்வானா: `தேங்கியிருந்த நீர்; பாக்டீரியா தொற்று!’ - 360 யானைகள் இறப்புக்கு என்ன காரணம்?

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் உலகிலேயே மிக அதிகமாக யானைகள் உள்ளன. அங்கு சுமார் 1,30,000 யானைகள் இருந்த நிலையில் போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ என்ற டெல்டா பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 360-க்கும் அதிகமான யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளன. பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பின் இயக்குநர் நியால் மெக்கேன் இந்த யானைகளின் உயிரிழப்பை கண்டுபிடித்து உறுதி செய்தார்.

போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு

உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை தங்கள் முகம் முழுவதும் தரையில் விழும் படியும் இறப்பதற்கு முன்பு ஒரே இடத்தில் நீண்ட நேரம் வட்ட வடிவில் நடந்துள்ளதாகவும் இதனால் யானைகளின் நரம்பு மண்டலங்களில் ஏதோ தொற்று தாக்கியிருக்கலாம் என நியால் மெக்கேன் சந்தேகம் தெரித்தார். ஆனால் உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை என்பதையும் நியால் கூறியிருந்தார்.

Also Read: `3 மாதத்தில் 360 உயிரிழப்புகள்!’ - போட்ஸ்வானாவை உலுக்கும் யானைகளின் மர்ம மரணங்கள்

எனவே யானைகளின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்காக தென் ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது பெரும்பாலான நாடுகளிலிருந்து சோதனை முடிவுகள் வந்துவிட்டதாகவும் யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சு மூலமே உயிரிழந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு

இது தொடர்பாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குநர் க்றில் தாவோலோ (Cyril Taolo) கூறும்போது, “அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு அனுப்பப்பட்ட யானை மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. அதில், யானைகள் தொற்று நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அனைத்து முடிவுகளும் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழலில் காணப்படும் பாக்டீரியாக்களிலிருந்து இயற்கையாக உற்பத்தியாகும் நச்சுகள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து உருவாகும் நச்சுகளை ஆராய்வதிலேயே எங்கள் அடுத்த கவனம் உள்ளது.

ஒரு இடத்தில் தேங்கியிருக்கும் நீரினை யானைகள் பருகும் போது நீரில் இருக்கும் கடுமையான நச்சு பாக்டீரியாக்கள் யானைகளின் உடலைப் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கலாம். தற்போது கிடைத்துள்ள சோதனைகளை வைத்து இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர நாங்கள் விரும்பவில்லை. இன்னும் பல ஆய்வகங்களிலிருந்து முடிவுகள் வரவேண்டியுள்ளது. அவை அனைத்தும் வந்த பிறகு யானைகள் உயிரிழப்பு தொடர்பான முழுமையான அறிவிப்பினை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: இரண்டு நாள்களில் 2 யானைகள், 2 சிறுத்தைகள் உயிரிழப்பு!- என்ன நடக்கிறது கோவையில்?



source https://www.vikatan.com/news/international/an-infectious-disease-could-be-behind-elephant-deaths-botswana-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக