யானை - மனித மோதலை தடுக்கும் ஒரு பகுதியாக, பிரச்னைக்குரிய காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு, வளர்ப்பு யானைகளாக பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சின்னத்தம்பி என்ற காட்டு யானை வனத்துறையால் மயக்க ஊசி பிடிக்கப்பட்டது. அதை டாப்ஸ்லிப் அருகே வரக்களியாறு பகுதியில் விட்டனர். ஆனால், மீண்டும் அந்த யானை வெளியில் வந்ததால் அதை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்து மரக்கூண்டில் அடைத்து வளர்ப்பு யானையாக பயிற்சி கொடுத்தனர்.
Also Read: காட்டு ராஜா டு அரிசி ராஜா... நடந்தது என்ன..? ஒரு டீடெயில் டைம்லைன்!
அதேபோல், பொள்ளாச்சி அருகே கடந்த ஆண்டு அரிசி ராஜா என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டது. அரிசியை விரும்பி சாப்பிட்டதால், அந்த யானையை மக்களில் சிலர் அரிசி ராஜா என்றழைத்தனர்.
இந்த அரிசி ராஜா யானை கடந்த 2017-ம் ஆண்டு கோவை வெள்ளலூர் பகுதியில் 4 பேரை கொன்றது. அதேநாள் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட அந்த யானையும் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. ஆனால், அந்த யானையும் வனத்தில் இருந்து வெளியில் வந்தது. 7 வயது குழந்தை, விவசாயி மற்றும் ஒரு பெண் என பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் என்ற கிராமத்தில் அந்த யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது.
இந்த முறை வரகளியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட எட்டரை மாத பயிற்சிக்குப் பிறகு, அந்த யானை கூண்டில் இருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர், ``கடந்த 21-ம் தேதி அந்த யானையை கூண்டில் இருந்து வெளியில் எடுத்தோம். கூண்டில் இருக்கும்போதே அதன் உணவுப்பழக்க வழக்கத்தை மாற்றிவிட்டோம். இங்கு அதற்கு நல்ல உணவு கொடுக்கப்படுகிறது. யானையும் நன்கு சாப்பிடுகிறது. பாகன்கள் மூலம் அந்த யானை ‘முத்து’ என்றழைக்கப்படுகிறது. இப்போதும், சிலர் அரிசி ராஜா என்றே அழைக்கின்றனர். அதிகாரபூர்வமாக அதற்கு இன்னும் பெயர் மாற்றவில்லை.
இந்த யானை ஏற்கெனவே பலரை கொன்றிருப்பதால், இப்போதும் பயமாகத்தான் இருக்கிறது. கூண்டுக்குள் இருக்கும்போது, கட்டளைக்கு அடிபணிந்துதான் ஆகவேண்டும். அதே யானை வெளியில் வந்தப் பிறகும் கட்டளைகளுக்கு கீழ்படிகிறதா? என்று பார்க்க வேண்டும். யானையின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/arisi-raja-elephant-came-out-from-kraal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக