Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

கொரோனா விதிமீறல்: போலீஸாரும் இனி அபராதம் விதிக்கலாம்! - தமிழக அரசின் அவசரச் சட்டம் சொல்வதென்ன?

கொரோனா கால விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் குறித்த அறிவிப்பை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிட்டார். அதன்படி, தனிமைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் வாயையும், மூக்கையும் சேர்த்து மூடி முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

ஜெ.ராதாகிருஷ்ணன்

சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் மற்றும் அவற்றை பின்பற்றாத வாகனம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை தமிழக உள்ளாட்சி துறை நிர்வாகத்தில் வரும் மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் அமல்படுத்தி வருகின்றனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ``சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முகக்கவசம் அணியாத தனி நபர்கள் மறறும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களிடம் இருந்து நேற்று (28.9.20) ஒருநாளில் மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, மொத்தம், ரூ. 2,26,07,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத தொழில், வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது மூடி சீல் வைக்கப்படடு கடுமையான நடவடிக்கை எடுக்க்கவேண்டும் என்று கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டிருககிறார். அவர் சொன்னதைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம் '' என்றார்.

கோடம்பாக்கத்தில் முகக்கவசம் அணியாத மெடிக்கல் ஷாப் ஊழியருக்கு அபராதம்

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் கேட்டபோது, ``தமிழகத்தில் இன்றைய தேதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையாய் இருக்கிறது. சென்னையில் வழக்கமாக வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெதுவாக 200,300 என்று அதிகரித்து வருகிறது. கோவை, சேலம், கடலூர் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எங்கெல்லாம் பொருளாதார செயல்பாடுகள் தீவிரமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்களில் பலரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர கடைபிடிப்பது இல்லை.

Also Read: கொரோனா: `முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்!’ - ஜார்க்கண்டில் அவசர சட்டம்

எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 5-ம் தேதி கொரோனா காலகட்டத்தில் விதிமுறைகளை மீறினால் கடும் அபதாரம் விதிக்கும் அவசரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதைக் கண்காணித்து உள்ளாட்சி துறையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்களைத் தவிர, போலீஸாரும் தனிக்கவனம் செலுத்தி விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு அபதாரம் விதிக்கலாம் என்று சொல்லியிருக்கிறோம். இதுதொடர்பாக அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு சொல்லும் வழிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அப்போதுதான், கொரோனா பரவலில் இருந்து நாம் தப்பிக்கமுடியும் '' என்றார்.

தலைமைச் செயலகம்

சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``தற்போது 144 தடை உத்தரவு சென்னையில் அமலில் இருக்கிறது. 5 பேர்களுக்கு மேல் கூடுவது சட்டப்படி தவறு. அதேபோல், பொதுக்கூட்டம் நடத்துவது போன்ற விஷயஙகளைக் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு செய்த பிறகு, அதாவது செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்பு, கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 9,06,939. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,04,550. வாகனங்கள் பறிமுதல் - 6,99,826. வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ. 22,20,18,843.

தற்போது தமிழக அரசு புதுச் சட்டம் பிறப்பித்திருக்கிறது. அதை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடன் போலீஸாரும் இணைந்தே செயல்படுகிறார்கள் '' என்று முடித்துக்கொண்டார்.

தலைமைச் செயலாளர் சண்முகம் சொன்னதுபோல அவசரச் சட்டத்தில், போலீஸார் தனியாக ரோந்து சென்று விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு அபதாரம் விதிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள், தங்கள் கீழ் செயல்படும் கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்தால், கொரோனா விதிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிப்பதை உறுதி செய்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/police-can-collect-fine-for-corona-rules-violation-says-cs-shanmugam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக