Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களின் கவனத்துக்கு... சில விஷயங்கள்! #WorldBreastfeedingWeek

`தாய்ப்பால்' - உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்பட வேண்டிய முதல் உணவு. அத்தியாவசிய உணவும்கூட. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை உள்ள ஏழு நாள்கள் உலகத் தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருட தாய்ப்பால் வாரம் `Support breastfeeding for a healthier planet' என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தாய்ப்பால்

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு அது தொடர்பாக எழும் சந்தேகங்களை `ஹேப்பி மாம் (HappyMom)' என்ற அமைப்பை உருவாக்கி நிவர்த்தி செய்துவரும் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணனிடம் தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், தாய்ப்பால் தரும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியும் கேட்டோம்.

குழந்தை பிறந்ததிலிருந்து எத்தனை மாதங்களுக்குத் தாய்ப்பால் புகட்டப்பட வேண்டும்?

பிறந்த குழந்தைகளுக்குத் தரப்படும் முதல் தடுப்பு மருந்து, தாய்ப்பால். இதில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும், அதனுடன் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அம்சங்களும் நிறைந்துள்ளன.

ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும். தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும், தண்ணீர் கூட தேவையில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை வழங்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையின்படி ஒரு குழந்தைக்குக் குறைந்தபட்சம் அதன் 2 வயது வரை அவசியம் தாய்ப்பால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம். சிலர் தங்கள் குழந்தைக்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவே தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிடுகிறார்கள். இவ்வாறு நிறுத்தப்படும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமாகக் காணப்படுவார்கள்.

சிசேரியன் பிரசவம் எனில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா?

இல்லை. பொதுவாக பிரசவமானவுடன் வெளிப்படும் தாய்ப்பாலுக்கு `கொலஸ்ட்ரம்' என்று பெயர். இது அடர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து முதல் 3 நாள்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் சுரக்கும். இது சிறிதளவு மட்டுமே சுரக்கக்கூடியது. ஆனால் அதை அறியாத பலர், தங்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கிறது என்று நினைத்துவிடுகிறார்கள். குழந்தை பால் குடிக்கத் தொடங்கியவுடனேயே அதன் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாய்க்கு பால் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தை பிறந்த அரை மணிநேரத்தில் அதற்கு முதல் பால் கொடுத்துவிடுவது நல்லது.

தாய்ப்பால்

எந்தெந்த உடல்நலக் குறைபாடு உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டக்கூடாது?

ஹெச்.ஐ.வி இருக்கும் பெண், மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட நம் நாட்டில் அனுமதி உண்டு. ஒரு பெண் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, போதைப்பொருள்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தாலோ அவர் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சையில் இருப்பவர்களும் தாய்ப்பால் புகட்டக்கூடாது.

ஆஸ்துமா, டைபாய்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் தரக்கூடாது. நியூக்ளியர் ஸ்கேன் எடுத்தபிறகு உடலில் சிறிதுநேரம் அந்த கதிர்வீச்சுகள் இருக்கும் என்பதால் இதுபோன்ற ஸ்கேன்கள் எடுத்தபிறகு சிறிது நேரம் கழித்தே தாய்ப்பால் தர வேண்டும். `Herpes Simplex Virus (HSV)' என்ற வைரஸ் தொற்றால் பெண்களுக்கு மார்பகங்களில் அக்கி புண்கள் ஏற்பட்டிருப்பின் அவர்களும் தாய்ப்பால் வழங்கக் கூடாது.

Also Read: கொரோனாவால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்னை... தீர்வு என்ன? #ExpertExplains

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்கலாமா?

ஒரு பெண்ணுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், தொற்று ஏற்பட்டு குணமாகியிருந்தாலும் அவர் தாராளமாக தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். கொரோனா தொற்றுள்ள தாயின் உடலில் அந்த வைரஸுக்கு எதிராக உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் உடலில் சென்று சேர்வதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் தரும்போது மார்பகங்கள் மற்றும் கைகளைத் தூய்மையான நீரில் நன்றாகத் துடைத்துவிட்டு பால் தருவது, மாஸ்க் அணிந்திருப்பது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா

குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் சந்தேகங்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில் சந்தேகங்களோ, குழப்பங்களோ ஏற்பட்டால் உங்கள் தோழிகளிடமோ, அருகில் உள்ளவர்களிடமோ அறிவுரை கேட்காமல் தாய்ப்பால் ஆலோசகரிடமோ, மகப்பேறு மருத்துவரிடமோ ஆலோசனை கேட்பது நல்லது. ஏனெனில் அருகில் உள்ளவர்கள் அவர்களின் அனுபவத்தின் அடிப்படையிலேயே உங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். அவை சில நேரத்தில் தவறான வழிகாட்டலாகக் கூட அமைந்துவிடலாம். அதனால் சம்பந்தப்பட்ட நிபுணரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது" என்கிறார் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.

அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டவும், கவனித்துக்கொள்ளவும் தமிழக அரசு வழங்கியிருக்கும் வசதிகள் குறித்துப் பேசினார் இந்தியாவின் தாய்ப்பால் வழங்கும் சங்கத்தின் உறுப்பினரான நிர்மலா செல்வம்.

நிர்மலா செல்வம்

``ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து 80 நாள்கள் வேலை நிறைவடைந்துள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு (பிரசவ தேதிக்கு முன் 6 வாரங்கள், பின் 6 வாரங்கள்) வழங்கப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற சலுகைகளை தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிலருக்குக் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு பால் சுரப்பு குறைந்தது போன்று தெரிந்தால் உணவு முறையில் அதிக நீர்ம பொருள்களையும், சத்தான உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் பால் சுரப்பு அதிகரிக்கலாம்'' என்றார்.

Also Read: நோய் எதிர்ப்புத்திறனைக் குறைத்து COVID-19-க்கு வழிவகுக்கும் புகைப்பழக்கம்!

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பதிலாக மாற்று உணவு தரப்படும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தமிழ்நாடு பச்சிளங் குழந்தை பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் சண்முக வேலாயுதத்திடம் பேசினோம்.

``பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாகத் தரமற்ற உணவுப்பொருள்களை வழங்கிவிடக் கூடாது.

சண்முக வேலாயுதம்

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி பிறந்த குழந்தைக்கு அதன் 6 மாதம் வரையில் தாய்ப்பால் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். இந்நேரத்தில் பால் சுரப்பு இல்லை என்ற காரணத்தினாலோ, குழந்தையின் தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ உடனே பசும்பால், பால் பவுடர் போன்றவற்றை மாற்று உணவாகத் தருவதற்கு பதிலாக, `தாய்ப்பால்' வங்கியிலிருந்து பாலை தானமாக வாங்கி குழந்தைக்குத் தரலாம். அல்லது உறவினர்களில் யாராவது பாலூட்டும் தாய்மார்கள் இருந்தால் அவர்களின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்யலாம்.

6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் உணவுகளைக் கடைகளில் வாங்கும்போது அது தயாரிக்கப்பட்ட தேதி, அவற்றில் அடங்கியிருக்கும் பொருள்கள், அரசின் அங்கீகாரம் போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்" என்றார் சண்முக வேலாயுதம்.



source https://www.vikatan.com/health/healthy/a-breastfeeding-guidance-for-mothers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக