Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கிடாய் விருந்து - தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்பனை சுற்றும் சர்ச்சை!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., நாகராஜன் 15 கிடாய்கள் வெட்டி தொகுதி மக்களுக்கு விருந்து வைத்து வழிபட்டார். சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை தொகுதி, அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு போகும் வாய்ப்பிருப்பதாக கட்சிக்குள் பேசப்பட்ட நிலையில், தனக்கே மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்று கிடாய் வெட்டு நிகழ்ச்சி நடத்தினார், என விவரமறிந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி தான் கிடா வெட்டு நிகழ்ச்சி நடத்தினேனே தவிர சீட்டுக்காக அல்ல ,என்று நாகராஜன் அதை மறுத்தார்.

பெரியகருப்பன்

தேர்தல் நெருக்கத்தையொட்டி, சீட் கிடைக்க வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, பல கிடாய் விருந்துகள் சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தி.மு.க., எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் கிடாய் விருந்து நடத்தியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. 2006, 2011, 2016 என நடைபெற்ற கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களிலும் தி.மு.க வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனே வெற்றி பெற்றிருக்கிறார்.

சிவகங்கை மாவட்ட செயலாளராக உள்ள பெரியகருப்பனுக்கு மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் சீட் கொடுக்கப்பட உள்ளது என்று உறுதியாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடிவாரத்தில், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள 'அழகுசொக்கர்' கோயிலில், கிடாய் வெட்டி விருந்து ஒன்று நடைபெற்றிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கிடாய் விருந்தை பெரியகருப்பன் தான் நடத்தியதாக கூறப்படுகிறது.

கிடாய் விருந்தில் பெரியகருப்பன்

இது குறித்து சிங்கம்புணரி ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க.வினரிடம் பேசிய போது " தேர்தல் சமயத்தில் அண்ணன் எப்போதும் விருந்து அளிப்பார். எல்லை தெய்வங்கள் வெற்றியை கொடுக்கும் என்பது அவருக்கு நம்பிக்கை உள்ளது. சிங்கம்புணரி பகுதியில் இந்து, முஸ்லிம் ஒற்றுமை அதிகமாக இருப்பதால் இஸ்லாமிய தெய்வங்களையும் வழிபட்டார். அதனால் கந்தரி விழாவை நடத்தினார். ” என்றனர்.

இது குறித்து எம்.எல்.ஏ., பெரியகருப்பனிடம் கேட்ட போது " சிங்கம்புணரி ஒன்றியச் செயலாளர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். நான் வீட்டுக் தான் வருகிறேன் என்றேன். அவர் அழைப்பால் தான் விழாவிற்கு போனேன். நான் போகும் பல இடங்களில் கறி விருந்தும் இருக்கும், சைவமும் இருக்கும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றார்.

Also Read: தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..! உடைகிறதா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி..?

இது குறித்து சிங்கம்புணரி பகுதி காவல்நிலையத்தில் விசாரித்த போது " புதுக்கோட்டை மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பிச்சங்காலப்பட்டி கிராமத்தில் உள்ள அழகுசொக்கர், கருப்பசாமி கோயிலில் 51 ஆடுகள் வெட்டப்பட்டு கே.ஆர்.பெரியகருப்பன் விருந்து வைத்துள்ளார். 1500 முதல் 2000 நபர்கள் விருந்தில் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட லிமிட் என்பதால் கூடுதல் தகவல் இல்லை" என்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது, கிடாய் விருந்து நடத்தியது விதிமுறை மீறல் தானே? என்று சர்ச்சை எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/news/politics/dmk-mla-periya-karuppan-host-kidai-virunthu-during-code-of-conduct

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக