Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

ஏன் ஜாதவ், சாவ்லாக்களைத் தேடி ஓட வேண்டும்... மணிமாறன், ஜெகதீசன், அபராஜித்கள் வென்ற கதை தெரியுமா?!

ஒரே ரன் வித்தியாசத்தில் போன முறை கை நழுவிப்போன கனவுக் கோப்பை..... பதினான்கு வருடக் காத்திருப்புக்குப் இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்குள் வந்து சேர்ந்துவிட்டது. சையது முஸ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. போட்டியின் முதல் பந்திலிருந்தே 'கப்பு முக்கியம் தினேஷு' என்பதை உணர்ந்து அந்த நோக்கத்தோடே காய்களை நகர்த்திய தினேஷ் கார்த்திக், அதை, தனது சுழல் படை மற்றும் பேட்டிங் படை கொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறார்.

அரையிறுதிப் போட்டிகளில், ராஜஸ்தானைத் தோற்கடித்து தமிழ்நாடும், பஞ்சாப்பை வீழ்த்தி பரோடாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தன. இதுவரை இரண்டு முறை சையத் முஸ்தாக் கோப்பையை வென்ற பரோடாவும், ஒருமுறை கோப்பையைக் கையிலேந்தியுள்ள தமிழ்நாடும், இந்த வருட சாம்பியனாக முடிசூட்டிக் கொள்ள முட்டி மோதிக் கொண்டன. அஹமதாபாத்தில் நடைபெற்றது, இந்த பரபரப்பான இறுதிப் போட்டி.

இறுதிப் போட்டி ஏற்றும் அழுத்தத்தைக் கணக்கில் கொண்டும், போன வருடம் ஒரு ரன்னை எடுக்க முடியாமல், கர்நாடகாவிடம் கோட்டை விட்டதை மனதில் நிறுத்தியும், டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அழுத்தமோ பயமோ எதுவும் எங்களை எதுவும் செய்து விடாது என்று துணிவைத் துணை கொண்டு, பனிப்பொழிவுவின் மீதும் நம்பிக்கை வைத்து, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் தினேஷ்.

குர்னால் பாண்டியா என்ற மிகப்பெரிய ஆளுமையை, தொடரின் இடையில் இழந்ததால் வலிமை குன்றிக் காணப்பட்ட பரோடாவின் பேட்டிங் லைன் அப்பைப் பந்தாடும் நோக்கோடே களம் கண்டது தமிழ்நாடு. இந்தத் தொடரில் தமிழ்நாட்டின் ஒரே பலவீனமாகக் கருதப்பட்ட பவர்ப்ளேவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு திணறுகின்றனர் என்ற வார்த்தைகளையும் பொய்யாக்க வேண்டும் என்ற முனைப்போடே பந்துடன் புறப்பட்டு வந்தனர், தமிழ்நாட்டின் பௌலர்கள்.

ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என பிட்ச் ரிப்போர்ட் கூற, தினேஷ் கார்த்திக், தன்னுடைய ஸ்பின் ட்வின்களான, சாய் கிஷோர் மற்றும் பாபா அபராஜித்துடன் தாக்குதலைத் தொடங்கினார். பரோடாவின் பக்கம், தேவ்தர் மற்றும் ரத்வா ஓப்பனர்களாகக் களமிறங்கினர். இந்தத் தொடரில் ரன்மழை பொழிந்த தேவ்தர், பவுண்டரியுடன் முதல் பந்துக்கு வரவேற்புக் கொடுக்க, இன்றைய போட்டி, கடந்த ஆண்டு இறுதிப்போட்டியைப் போலவே அனல்பறக்கப் போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், போட்டியின் இரண்டாவது ஓவரில், தனது முதல் பந்திலேயே ரத்வாவேவின் விக்கெட்டை வீழ்த்தி அதிரடி காட்டினார் அபராஜித். இதன்பிறகு விஷ்ணு சோலாங்கி இறங்க, தன்னுடைய வார்ப்பான மணிமாறன் சித்தார்த்தை தினேஷ் இறக்கினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய அபாயகரமான தேவ்தரை, அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசிய பந்தின் மூலமாக, மணிமாறன் காலி செய்ய, பரோடாவின் வீழ்ச்சி தொடங்கியது.

சொலாங்கியைத் தவிர அதற்கடுத்து வந்த அத்தனை பேட்ஸ்மேன்களையும் ஒற்றை இலக்கத்தில் அனுப்பி வைத்து தமிழ்நாட்டின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தார் மணிமாறன் சித்தார்த். அவர் ஸ்மித் படேலை எல்பிடபிள்யூவில் வீழ்த்த, பாணுரன் தானாகவே அவுட்டாகி வெளியேறினார். காட் அண்ட் பெளலிங்கில் மணிமாறன் அபிமன்யூவையும், போல்டாக்கி கக்காடேவையும் அனுப்பி, விக்கெட் எடுக்க இருக்கும் அத்தனை வழிகளிலும் வகைக்கொன்றாய் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 9 ஓவரின் முடிவில், 36/6 என்ற நிலையில் பரோடா திணற, 36 என்ற எண்ணின் அச்சமூட்டும் நினைவுகள் ஒருமுறை பரோடா ரசிகர்களுக்கு வந்து போக, சையத் முஸ்டாக் அலி தொடர் வரலாற்றில் குறைவான ஸ்கோரான 30-ஐ தாண்டியதே போதும் என நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதற்கடுத்து இணைந்த சொலாங்கி ஷேத் கூட்டணிதான் பரோடா அணியை அவமானகரமான தோல்வியிலிருந்து மீட்டெடுத்தது. ஹரியானாவுக்கு எதிரானப் போட்டியில், கடைசி மூன்று பந்தில் 16 ரன்களை எடுத்து, அணியை அரையிறுதிக்கு அழைத்து வந்த, அதே பொறுப்பான ஆட்டத்தை நேற்றும் கையிலெடுத்தார் சொலாங்கி.

இந்த இருவரும் அணியின் ஸ்கோரை, தங்களது 58 ரன்கள் பார்னர்ஷிப்பால், 94-க்கு எடுத்துச் சென்றுபோது, அடுத்தடுத்த பவுண்டரிகளால் பயமுறுத்திக் கொண்டிருந்த ஷேத்தை சோனு யாதவ் அனுப்பிவைத்தார். இதற்கடுத்து உள்ளே வந்த பாட், சொலாங்கியுடன் இணைந்து அதிரடி காட்ட, 9 பந்துகளில் 26 ரன்களை அதிரடியாகக் குவித்தது இந்தக் கூட்டணி! எனினும் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த தமிழ்நாடு, 120 ரன்களுக்கு பரோடாவைச் சுருட்டியது.

13 ஓவர்கள் வரை சுழலினாலேயே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, காரியத்தை முடித்தது தமிழ்நாடு. எனினும் சொலாங்கி மற்றும் ஷேத் கூட்டணி, பரோடாவை பள்ளத்தாக்கில் இருந்து மீட்டெடுத்திருந்தது.

இலக்கு எளிதானது, பலமான பேட்டிங் வரிசை இருக்கப் போகிறது, பனிப்பொழிவும் பக்கபலமாக இருக்கப் போகிறது என அத்தனை நேர்மறையான விஷயங்களுடனும் தனது இன்னிங்சைத் தொடங்கியது தமிழ்நாடு. இந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெகதீசனை, இந்தத் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மெரிவாலா, வெறும் 14 ரன்களுடன் அனுப்பி வைக்க, உள்ளே வந்த அபராஜித், நிஷாந்த்துடன் ஜோடி சேர்ந்தார்.

பரோடா பௌலர்களின் திறமையான பந்துவீச்சாலும், மைதானத்தின் ஒத்துழையாமையாலும், ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணற, ரன்களை மெதுவாகவே சேர்த்தது தமிழ்நாடு. அவர்களது நிலையை இன்னும் இக்கட்டில் தள்ளுவதைப் போல, 12-வது ஓவரில் பதான், செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த நிஷாந்தை வெளியேற்ற, 52 பந்துகளில் 54 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது தமிழ்நாடு.

விக்கெட்டுகளால் மட்டுமே கோப்பையைத் தங்களை நெருங்க வைக்க முடியும் என முடிவு செய்த பரோடா பலவகைகளிலும் அதற்கு முயற்சித்தது‌. ஆனால் ரன்களை ஒவ்வொன்றாய்ச் சேர்த்த தமிழ்நாடு பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழக்கூடாது என்பதில் கவனமாக இருக்க, பந்தும் தேவைப்படும் ரன்களும் சரிசமமாகவே சென்று கொண்டிருந்தன. இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து, உண்டான அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்த தினேஷ், திரும்பவும் ஒரு பெரிய ஷாட் ஆட முயற்சித்து, ஷேத் பந்தில், சொலாங்கியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தேவைப்படும் ரன்களுக்கும் பந்துகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான ஓட்டப்பந்தயத்தில் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறத் தொடங்கியது. மெரிவாலாவின் ஓவரில் பவுண்டரி அடித்த ஷாருக்கான் தமிழக ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைத்தார். பின் இதற்குமேல் பொறுமையில்லை என்பதைப் போல, லாங் ஆனில் அடித்த அற்புத சிக்ஸால், ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தார். மேலும் துரிதகதியில், வெற்றிக் கோட்டை, அந்த ஓவரின் கடைசிப் பந்திலேயே மேலும் ஒரு பவுண்டரியோடு தொட, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 12 பந்துகள் மிச்சமிருக்கும் போதே, அற்புதமான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது தமிழ்நாடு.

ஹர்திக், குர்னால், தீபக் ஹூடா போன்ற சிறந்த வீரர்கள் இல்லாமலே இந்தளவு சாதித்ததிருக்கிறது பரோடா. தமிழ்நாட்டின் தரப்பிலோ, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சுழலில் மாயாஜாலம் காட்டி, கேப்டன் தன் மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியதோடு இல்லாமல் தன்னுடைய திறனையும் முழுவதுமாய் நிரூபித்து, அழகிய தமிழ் மகனாக ஜொலித்தார் மணிமாறன் சித்தார்த். பல ஆண்டுகளாகக் காத்திருந்த வெற்றிக் கோப்பையைக் களிப்புடன் கையிலேந்தியுள்ளனர் தமிழக வீரர்கள். 2006-ம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப்பில் முதன்முறையாகக் கோப்பையை வென்ற தமிழகம், இத்தனை ஆண்டுகள் கழித்து மறுபடியும் அவரது மேலான தலைமையிலேயே அதைச் சாதித்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு.

வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!



source https://sports.vikatan.com/cricket/how-tamilnadu-won-the-syed-musta-ali-trophy-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக