``தான் நடித்த சில திரைப்படக்காட்சிகள் பார்ன் வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்று கிட்டத்தட்ட ஆறு வருடங்களாகப் போராடி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகை. அவரைப் பற்றிய செய்தி, கடந்த சில நாள்களாகப் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஏழு வருடங்களுக்கு முன்பாக, சோனா ஆப்ரஹாம் `For Sale’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். 2013-ல் வெளிவந்த இந்தப் படம், தன் தங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதைப் பார்த்துவிட்டு, அக்கா தற்கொலை செய்துகொள்வதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சோனா. அப்போது அவருக்கு வயது வெறும் 14 தான். பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதான காட்சிகளில் விருப்பமில்லாமல், சங்கடத்துடன் நடித்திருக்கிறார்.
இந்தக் காட்சிகள் ஹேண்டிகேம் மூலமாகத் தனியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் சில காட்சிகளை மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற காட்சிகளை நீக்கிவிடுவோம் என்று அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் உறுதியளித்திருக்கின்றனர். ஆனால், 2014-ல் அந்தக் காட்சிகள் இணையதளத்தில், குறிப்பாக யூடியூபில் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து சோனாவின் குடும்பம் தயாரிப்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள மறுத்திருக்கிறார்.
சோனாவின் குடும்பம் காவல்துறையை அணுகியிருக்கிறது. ஆனால், ஆறு வருடங்களாகியும் இதற்கு எதிரான அவர்களது போராட்டம் தற்போதுவரை முடியவில்லை. 2014-ம் ஆண்டு எர்ணாகுளம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபோது, அது முதல் தகவல் அறிக்கையாகப் பதியப்படவில்லை. அந்த வீடியோ யூடியூப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையரால் வலியுறுத்தப்பட்டு, யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், வெகு விரைவிலேயே அந்தக் காணொளி மீண்டும் பார்ன் வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களில் உலவ ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் இது குறித்து 2016-ம் ஆண்டு சோனாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தை அணுகி, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் ஆகியோரை குற்றவாளிகளாக இணைத்து புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவதூறு (s. 500) மற்றும் கேரள காவல்துறை சட்டத்தின் கீழ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அல்லது வேறு ஏதேனும் வகையில் பெண்களின் தனியுரிமையைப் பாதிக்கும்படி பரப்புதல் (s. 119(b)) ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டும் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி, ஆறு வருடங்களாகக் காணொளிகள் நீக்கப்படுவதும், மீண்டும் இணையதளங்களில் வெளியிடப்படுவதுமாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையில், புகாருக்குக் காரணமான காணொளி எடுக்கப்பட்டது 7 வருடங்களுக்கு முன்பு. அப்போது, சோனா மைனர். எனவே, புகாரில் போக்சோ சட்டம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்குக் கீழும் புகாரைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இரண்டே சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட புகாரின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்திலேயே பிணையைப் பெற்றிருக்கிறார்கள்.
இறுதியாக, 2016-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் சோனா. அதன் பிறகே, பெண்கள் ஆணையமும் சைபர் செல்லும் தற்போது அவருடன் தொடர்பில் இருப்பதாக WCC (Women in Cinema Collective)-ல் வீடியோ மூலமாகத் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார், தற்போது இறுதி வருடம் இளங்கலை சட்டம் படித்து வரும் சோனா.
இந்தப் பிரச்னையில், அந்தக் காணொளிக் காட்சிகள் நிச்சயமாக இயக்குநர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் கவனம் இல்லாமல் வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை. யாராவது ஒருவராவது இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், தேவையில்லாத காட்சிகள் உடனடியாக நீக்கப்பட்டுவிடும் என்று அவர்களேதான் உறுதியளித்திருக்கிறார்கள். மேலும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளால் நடக்கும் தற்கொலைகள் பற்றிய சமூக அக்கறையுள்ள படம் அது என்பது, முரண்.
சோனாவின் இந்த சட்டப் போராட்டம் பற்றிப் பேசும்போது, மியா காலிஃபாவும் நினைவுக்கு வருகிறார். யார் அவர்?
மியா காலிஃபா, முன்னாள் பார்ன் நடிகை. தலையில் ஹிஜாப் அணிந்து பார்ன் காட்சிகளில் நடித்ததால் தீவிரவாத குழுக்களிடமிருந்து வரும் கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, அந்தக் காட்சிகளை நீக்கக்கோரி பல்வேறு பிரசாரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இருந்தும், அந்தக் காட்சிகள் தற்போதுவரை நீக்கப்படவில்லை. பார்ன் காட்சிகளைத் தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக அவர் வழக்கும் தொடுத்திருக்கிறார்.
நிச்சயமாக சோனாவையும் மியா காலிஃபாவையும் ஒப்பிட முடியாது. இருவரின் கதையுமே மொத்தமாக வேறு இடங்களில் தொடங்கி வெவ்வேறு இடங்களில் பயணிக்கின்றன. ஆனால், இவர்கள் இருவரும் ஒரே மனநிலைக்குத்தான் `விக்டிம்'களாகியிருக்கின்றனர். அது, பெண்கள் உடலின் மீதான ஆண்களின் வன்மம். பார்ன் ஸ்டாரோ, சினி ஸ்டாரோ, எந்தப் பெண்ணாக இருந்தாலும் பெண்களுடைய உடலின் மீதான மொத்த உரிமையும் தன்னிடமே இருப்பதாக ஆண்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அதற்கு எதிராகச் சட்டத்தின் கதவைத் தட்டினால், நீதி கிடைக்கவே பல வருடங்கள் ஆகிவிடும். அதிலிருந்தும் எப்படியோ தப்பித்துவிடலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது.
முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் பெண்களின் உடல் லாபம் கொழிக்கும் பொருள். ஏனெனில், இந்தச் சமூகம் பெண்கள் உடலின் மீது வன்மம் பிடித்த சமூகம். எனவே, அதை `பார்ன் இண்டஸ்ட்ரி' மூலமாக விற்கிறது. இதுதான் முதலாளித்துவத்தின் ரியாலிட்டி. இந்தியா போன்ற நாடுகளில் அது சாதியோடு ஊன்றிப்போன ஆணாதிக்க மனநிலையோடு சேர்ந்துவிடுகிறது. பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை குறித்த புரிந்துணர்வுகளில் எந்தளவுக்கு முன்னேற்றம் உருவாகிறதோ, அதே அளவில் வன்முறையின் வடிவமும் மாறிவருகிறது. இதையே சோனாவின், மியா காலிஃபாவின் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
source https://www.vikatan.com/social-affairs/women/how-actor-sona-m-abraham-and-mia-khalifa-made-victims-of-capitalism
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக