Ad

திங்கள், 28 ஜூன், 2021

`எம்.ஜி.ஆர் பாட்டு பாடிட்டேதான் ஆபரேஷன் தியேட்டர் போனேன்!' - புற்றுநோயை வென்ற `மெனுராணி' செல்லம்

ஆனந்த விகடனால் `மெனுராணி' என்ற அடைமொழி வழங்கப்பட்டு அப்படியே அறியப்பட்டவர் சமையல்கலை நிபுணர் செல்லம். சமையல்கலையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். விகடன் குழுமத்தின் அவள் கிச்சனின் `யம்மி செஃப்' விருது பெற்றவர். பத்திரிகை மற்றும் சேனல்களில் இவர் வழங்கியிருக்கும் சமையல் குறிப்புகளும் நிகழ்ச்சிகளும் வெகு பிரபலம்.

கடந்த வருடம் செப்டம்பரில் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகள்களின் வீட்டுக்குச் சென்றவர், அங்கிருந்து சமையல் வீடியோக்கள், பத்திரிகைகளுக்கான சமையல் குறிப்புகள் எல்லாம் வழங்கிக்கொண்டு பிசியாக இருந்தார். 75 ப்ளஸ் வயதிலும் ஆக்டிவ்வாக இருக்கும் செல்லத்துக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8 மணி நேர அறுவை சிகிச்சை, அதையடுத்து சில நாள்கள் மருத்துவமனை அட்மிஷன் என எல்லாம் கடந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார் செல்லம். மரணத்தை நெருக்கத்தில் பார்த்த பயமோ, பதற்றமோ அவரிடம் துளியும் இல்லை. வழக்கமான பாசிட்டிவ் எனர்ஜியுடன் வீடியோ காலில் உரையாடினார்.

மெனுராணி செல்லம்

``என் கணவர் இறந்த பிறகு எங்க வீட்டுல மாத்திரை, மருந்துக்குனு அலமாரியெல்லாம் கிடையாது. டயாபடீஸ், கொலஸ்ட்ரால்னு எனக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சாதாரண ஜுரம் வந்துகூட படுத்ததில்லை. தனி மனுஷியா ஆரோக்கியமா, சந்தோஷமாவே வாழ்ந்திருக்கேன். சாதாரண வாய்ப்புண்ல ஆரம்பிச்ச பிரச்னை. இதுக்கு முன்னாடியும் எனக்கு அடிக்கடி வாய்ப்புண் வந்திருக்கு. சமையல் வேலையில இருக்கேன், அதிக காரம், மசாலா கலந்த சாப்பாடு சாப்பிடறதால இருக்கும்னு அதைக் கடந்துபோயிருக்கேன். இந்த முறை அமெரிக்கா போனதும் நாலஞ்சு மாசத்துக்கு நார்மலாதான் இருந்தேன்.

திடீர்னு ஒருநாள் வாய்ப்புண் வந்தது. ஒருவாரமாகியும் சரியாகலை. அதனால டாக்டரை பார்த்தோம். அவர் டெஸ்ட் பண்ணிட்டு இது வாய்ல வரக்கூடிய ஓரல் கேன்சரா இருக்கலாம்னு சந்தேகப்பட்டார். அடுத்தடுத்து டெஸ்ட்டெல்லாம் எடுத்து அதை உறுதிப்படுத்தினாங்க. பல்லுக்கும் கன்னத்துக்கும் இடையில கேன்சர் கட்டி. ஜூன் 15-ம் தேதி, அமெரிக்காவின் டாப் 10 ஹாஸ்பிட்டல்ஸ்ல ஒன்றான பார்ன்ஸ்-ஜூயிஷ்ல கிட்டத்தட்ட 8 மணி நேர சர்ஜரி நடந்தது. ஆபரேஷன் நடக்கவிருந்த அன்னிக்கு காலையிலவரை சமையல் பண்ணிட்டு, ஃபிரெண்ட்ஸோடு அரட்டை அடிச்சிட்டுதான் இருந்தேன். `அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா'னு எம்.ஜி.ஆர் பாட்டு பாடிட்டே ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே போனேன்.

'மெனுராணி' செல்லம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை

75 வயசுல 8 மணி நேர் சர்ஜரியை என் உடம்பு தாங்குமானு என் மகள்களுக்கு பயம். ஆபரேஷன் நடந்திட்டிருந்த நாலு மணி நேரத்துலயே எனக்கு நினைவு திரும்பிடுச்சு. அப்போ என் மகள் `உன் ஃபேவரைட் ஹீரோ யாரும்மா'னு வேடிக்கையா கேட்டா. நான் கமல்னு சரியா சொன்னேன்.

வாய் கேன்சராச்சே... அதனால பல் எல்லாம் எடுத்துட்டாங்க. கால்லேருந்து சதை எடுத்து கன்னத்துல வெச்சுத் தச்சிருக்காங்க. அடுத்து ரேடியேஷன் மட்டும் மிச்சமிருக்கு. அஞ்சு வாரத்துக்கு தினம் பத்து நிமிஷம் ரேடியேஷன் கொடுக்கணும்.

சிடி ஸ்கேன்ல பார்த்தபோது இருந்ததைவிட ஆபரேஷன்போது பார்த்த கேன்சர் கட்டி சின்னதாயிருந்தது. நான் தினமும் சொல்ற விஷ்ணு சகஸ்ரநாமமும் நாராயணீயம் ஸ்லோகமும்தான் என்னைக் காப்பாத்தியிருக்குனு நம்பறேன். டாக்டர்ஸை பொறுத்தவரை அது மிகப் பெரிய மெடிக்கல் மிராக்கிள்னு சொன்னாங்க.

மெனுராணி செல்லம்

சர்ஜரி முடிஞ்ச மூணாவது நாளே எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டேன். பாத்ரூம் போறது உட்பட என் வேலைகளை நானே பார்த்துக்கறேன். இப்ப நார்மலா இருக்கேன். பல் இல்லாததால செமி சாலிட் உணவுகளா சாப்பிடறேன். வலிக்கான மருந்து மட்டும் எடுத்துக்கறேன். தைரியமா இருக்கேன். என் மன உறுதியைப் பார்த்துட்டு, அமெரிக்க டாக்டர்ஸ் `அமேஸிங் வுமன்'னு எனக்கு டைட்டில் கொடுத்துட்டாங்க. வாழ்க்கையில எப்போதும் எந்த விஷயத்துக்கும் கலங்கி, அழுது நின்னு எனக்குப் பழக்கமில்லை. இதுவும் கடந்துபோகும்னு எடுத்துப்பேன். இந்த முறையும் அப்படித்தான். சீக்கிரமே முழுசா குணமாகி இந்தியா வந்துடுவேன். மறுபடி என் குக்கரி கிளாஸ், டி.வி ஷோஸ்னு பிசியாகப் போற அந்த நாளுக்காக ஐ'ம் வெயிட்டிங்....''

கற்பனைக்கெட்டாத பாசிட்டிவிட்டியை நமக்கும் கடத்துகிறார் செல்லம்.



source https://www.vikatan.com/lifestyle/women/interview-of-menu-rani-chellam-who-successfully-recovered-from-cancer-recently

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக