Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

சர்க்கரை நோய் பற்களையும் பதம் பார்க்கலாம்... சமாளிப்பது எப்படி?

சர்க்கரைநோய் என்பது ஓர் அகல வாசல் கதவு போன்றது. உணவு, உடற்பயிற்சி, மாத்திரைகள் போன்றவற்றின் மூலம் அதன் கதவை அடைத்தே வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. மாறாக, எதையும் பின்பற்றாமல் கதவைத் திறந்து வைத்திருக்கும் பட்சத்தில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாக மாறி பல்வேறு நோய்களை வரவேற்று உடலுக்குள் அனுப்பிவிடும். அதனால்தான் மருத்துவரிடம் எந்தப் பிரச்னைக்காகச் சென்றாலும் அவர் முதலில் கேட்கும் கேள்வி, `நீங்க டயபட்டிக்கா? கடைசியா எப்போ சுகர் செக் பண்ணுனீங்க?' என்பதுதான்.

மரியம் சஃபி- பல் மருத்துவர்

கட்டுப்பாடில்லாத சர்க்கரை, ரத்தத்தில் கலந்தே இருக்கும் என்பதால் ரத்தம் போகும் உறுப்புகள் அனைத்துமே சேதப்படலாம். அந்த வகையில் சர்க்கரை நோய் பற்களையும் விட்டு வைப்பதில்லை. பல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பற்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளையும் அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.

என்ன பாதிப்புகள் ஏற்படும்?

- பற்கூச்சம் (Tooth Sensitivity)
- பல்லில் அழுக்குப் படிதல் (Plaque Formation)
- ஈறுகளுக்குள் தொற்று (Bacterial Gum Infection)
- ஈறுகள் வீக்கம் (Gingivitis)
- சொத்தை (Tooth Cavities)
- வாய் துர்நாற்றம் (Halitosis)
- பற்குழித் தொற்று (Periodontitis)
- வாய் வறட்சி (Xerostomia)
- வாய்ப்புண்கள் (Oral Thrush)
- வாய் எரிச்சல் (BMS- Burning Mouth Syndrome)

பல் போனால் சொல் போச்சு என்பது பற்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழி. அந்த வகையில் பற்களை முறையாகப் பராமரிக்காவிட்டால் அது நாளடைவில் பற்கள் அனைத்தையும் இழக்கும் ஆபத்தைகூட ஏற்படுத்தலாம்.

Also Read: உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள்... நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஓர் அலெர்ட்!

பாதுகாப்பது எப்படி?

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதுதான் பற்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கான அடிப்படையான விஷயம். இதுதவிர, அதிகமாகத் தண்ணீர் பருகுதல், ஆரோக்கியமான காய்கறிகள், புரத உணவுகளைச் சேர்த்துக்கொள்தல், மாவுச்சத்து மற்றும் ஸ்டார்ச் உணவுகளைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

நல்ல உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி என ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரை அணுகி பற்களைப் பரிசோதிக்க வேண்டும். பல்லின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மருத்துவர் கூறும் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். வலி, அசௌகர்யம் ஏற்படும்போது மருத்துவரை நாடுபவர்கள், அந்தக் குறிப்பிட்ட பிரச்னை சரியாகும் வரை மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவார்கள். அதன் பிறகு, சில நாள்களில் மீண்டும் பிரச்னை ஏற்படலாம். எனவே, பல் சுகாதாரத்தை எப்போதும் பேண வேண்டும்.

சர்க்கரை நோய்

Also Read: சர்க்கரை நோய்... குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #WorldDiabetesDay

மிகவும் முக்கியமாக புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். இது பற்களுக்கு மட்டுமல்ல, நுரையீரல், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் எனப் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். பற்களில் படியும் கறைகளை ஆறு மாதங்களுக்கு ஒருமுறையேனும் அகற்றிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை மிருதுவான பிரஷ் மற்றும் சர்க்கரை நோய்க்கு ஏற்ற பற்பசை கொண்டு பல் துலக்க வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு ஒருமுறையேனும் பல் இடுக்குகளை Floss செய்தல், வாயில் வறட்சி ஏற்படாமல் பாதுகாத்தல், சொத்தைப் பற்களை ஆரம்பத்திலேயே சுத்தப்படுத்தி அடைத்துக் கொள்ளுதல், ஈறு நோய்களை அலட்சியப்படுத்தாமல் உடனே அதற்கான சிகிச்சையை எடுத்து, பற்கள் பலமற்றுப் போவதைத் தடுக்க வேண்டும்.

இயற்கை நமக்களித்த பற்களை முடிந்தவரை விழாமல் பாதுகாப்பதுதான் உடலின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதற்கான வழியாகும்.

- மரியம் சஃபி, பல் மருத்துவர்



source https://www.vikatan.com/ampstories/health/healthy/how-diabetes-will-affect-our-dental-and-oral-health

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக