Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

`கடத்தல் தங்கத்தில் மோசடி.. கடத்தி வந்தவர்கள் மீது தாக்குதல்!’ - ராமநாதபுரத்தில் சிக்கிய கும்பல்

இலங்கையிலிருந்து கடத்தி வந்த ஒரிஜினல் தங்கத்திற்கு பதிலாக அதிக செம்பு கலந்த போலி தங்க கட்டிகளை கொடுத்து மோசடி செய்த 3 பேரை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் தங்கத்தில் மோசடி.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் ரகுமான்கான். இவர், மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார். இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக தங்கம் கடத்தி வரும் கடத்தல் தொழிலில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைதான கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்

இந்நிலையில் கடந்த 26-ந்தேதி சிவக்குமார் கூறிய இலங்கையை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் இருந்து 5 கிலோ தங்கக் கட்டிகளை ரகுமான்கான் கடத்தி வந்துள்ளார். அந்த கடத்தல் தங்கக் கட்டிகளை தொண்டி அருகே உள்ள சோழியக்குடி கடற்கரை பகுதியில் காத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது அசாருதீன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இந்த கடத்தல் தங்கத்தை விற்பனை செய்யச் சென்ற போது, அதில் 3 கிலோ தங்கக் கட்டிகளுடன் 2 கிலோ செம்பு கலந்த போலி தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதனால், ஒரிஜனல் தங்கத்திற்குப் பதிலாக அதிக செம்பு கலந்த போலி தங்கத்தைக் கொடுத்து மோசடி செய்த ரகுமான்கான் மீது சிவகுமார் ஆத்திரம் அடைந்தார்.

Also Read: ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவர் கைது

இதையடுத்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரகுமான்கானை தேவிபட்டினம் வரும்படி கூறியுள்ளார் சிவக்குமார். தேவிபட்டினம் வந்த ரகுமான்கானையும் அவரது நண்பர்களையும், தனது நண்பர்கள் ராவுத்தர் கனி, அயூப் கான் ஆகியோருடன் காரில் கடத்தி சென்ற சிவக்குமார், அவர்களை எலந்தைக் கூட்டம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து தாக்கியதுடன், ஒரிஜினல் தங்கக் கட்டிகளை தரக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கைதான கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்

இந்நிலையில் அங்கிருந்து தப்பிய ரகுமான்கான் இதுதொடர்பாக தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த நாகப்பட்டினம் சிவக்குமார், ராமநாதபுரம் முகமது அசாருதீன், வேதாளை இஸ்மாயில் சபீர், பாரதி நகர் யாசின், ஆவுடையார் கோவில் மருதுபாண்டி ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/ramanathapuram-police-arrest-5-over-gold-smuggling

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக