பரமக்குடியில் முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பின் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பாக நடிகர் கருணாஸின் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் நடத்தி வரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கருணாஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த அமைப்பில் இருந்து விலகி முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பினை ஏற்படுத்தி அதன் பொதுச்செயலாளராக தற்போது இருந்து வருகிறார்.
கருணாஸ் குறித்தும், அவர் நடத்தி வரும் அமைப்பு குறித்தும் பாண்டித்துரை அவ்வப்போது விமர்ச்சனம் செய்து வந்தார். இதனால் கருணாஸ் ஆதரவாளர்களால் பாண்டித்துரைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது உயிருக்கு கருணாஸ் மற்றும் அவரது கட்சியின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேதுபதி ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு கேட்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாண்டித்துரை சில நாட்களுக்கு முன் மனு கொடுத்துள்ளார். இதனிடையே பல்வேறு வழக்குகள் தொடர்பாக சேதுபதியை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் பாண்டித்துரையின் வீட்டின் காம்பவுண்ட் கதவின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிகள் எறியப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பகுதியில் கண்ணாடி பாட்டில் துண்டுகள் சிதறி கிடந்துள்ளன. இது குறித்து மதுரையில் இருந்த பாண்டித்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பரமக்குடி வந்த பாண்டித்துரை இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் பாண்டித்துரை வீட்டு முன் வீசப்பட்டிருந்ததுடன், அவர் வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த வேறு நபர்களுக்கு சொந்தமான இரு வாகனங்கள் சேதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/petrol-bomb-attack-in-paramakkudi-police-investigation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக