புதுப்புது நோய்கள் வருவதற்கும் நம் சுற்றுச்சூழலில் உள்ள மாறுபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே அறிவியல் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு வகையான புயல், அவற்றுக்கு விதவிதமான பெயர்கள், அடிக்கடி வரும் பெருமழை, கடல் சீற்றம், காட்டு உயிரினங்களின் இடம்பெயர்தல், பறவை விலங்குகளின் வாழ்வியல் என அனைத்து விஷயங்களுமே இதில் அடங்குகிறது. பறவைகள் காடு விட்டு நாட்டுக்குள் பறந்து வருவதும், விலங்குகள் தம் வனப்பாதையை தேடி ஊருக்குள் நுழைவதும், செல்லப் பிராணிகள் விடை அறியாத நோயால் பாதிக்கப்படுவதும், நாம் உண்ணும் மாமிசங்களிலும் காய்கறிகளிலும் ஒட்டிவரும் கிருமிகளும் என்னவென நம்மில் எவரேனும் அறிவோமா?
இவற்றால் ஏற்படும் நோய்கள் Zoonotic diseases எனப்படுகின்றன. இப்படி மனித இனத்தைத் தாக்கிய நோய்கள் ஏராளம்.
Bubonic Plague எனப்படும் மிக மோசமான ப்ளேக் நோய் கி.பி 570-ம் ஆண்டு முதல் மூன்று முறைக்குமேல் கொடுமையாக மனித இனத்தை அழித்தது. மனித இனத்தின் அறியப்பட்ட முதல் பெருந்தொற்றும் இதுவே. இதற்கான காரணம் விலங்குகள் மற்றும் எலிகள். கொசு மற்றும் பறக்கும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்கள் நம் சீதோஷ்ண நிலை மாறுபாடுகளால் மிகப்பெரிய அளவில் தம் நோய் பரப்பும் விதத்தில் மாற்றம் கண்டுள்ளதாக அறியப்படுகிறது.
மலேரியா பரப்பும் Plasmodium vivax, Plasmodium falciparum, டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்களின் வாழ்நாள் சுழற்சிகூட மாறி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கொசுக்கள் தம்முடைய கடி மூலம் நோய் பரப்பும் காலம் சுருங்கி இருப்பதாகவும், அடிக்கடி இவ்வகை கொசுக்கள் நம்மைக் கடித்து Blood meal எனும் முறை மூலம் நமக்கு நோயை அளித்துச் செல்வதும், இதனால் முன்பைவிட இன்னும் எளிதாக நோய் பரவிவிடுவதும் அதிர்ச்சியான உண்மைகள்.
அதேபோல் கடந்த சில வருடங்களாக நாம் பார்த்துவரும் வரிசையான கொடும் வைரஸ் நோய்கள் அனைத்துமே Zoonotic diseases ஆகவே காணப்படுகின்றன.
சிக்குன்குன்யா, டெங்கு, எபோலா, ஜிகா, நிபா மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா எனும் SARS-CoV-2 வைரஸ் வரை அனைத்துமே விலங்கினத்தில் இருந்து மனித இனத்தைத் தாக்கும் நோய்களாகவே இருக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் சீதோஷ்ண மாற்றங்களும் இதற்கு ஒரு காரணம்.
மண் மாசு, நில வளம் மாற்றம், வன அழிப்பு, மரம் வெட்டுதல், நீர் மாசு, கடல்வள சீர்கேடு, ஏரி, குளம், வாய்க்கால் சீர்கேடு, வயல்வெளி, தோட்டங்களில் ரசாயன உரப் பயன்பாடு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள், மறக்கப்பட்ட பாரம்பர்ய உணவுகள், உணவு கலப்படம் என நம் காலத்து சூழலியல் மாற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
பறவைகள், விலங்குகள், புழு, பூச்சிகள் என அனைத்தும் நம்மைச் சார்ந்து வாழ்கின்றன. நாம் அவற்றைச் சார்ந்துதான் வாழ வேண்டும். இந்தப் பிரபஞ்சம் சரிசமமான வளத்தைக் கொண்டு நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இங்கே வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்வியலும் ஆரோக்கியமும் முக்கியம். அதில் சிறு மாறுதல் ஏற்பட்டாலும் இயற்கையின் மொத்த சுழற்சியும் ஆட்டம் காணும்.
வெப்ப மண்டலப் பகுதிகள் உஷ்ண பகுதிகளாக மாறுவதும், குளிர்ப் பிரதேசங்கள் வெப்பமயமாவதும், மழை பொழியும் இடங்களில் மழை குறைந்து போவதும், ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் வெப்பக்காற்று வீசுவதும் நமக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
மின்விசிறி, குளிர்சாதன வசதி, அறையை வெப்பமூட்டும் ஹீட்டர் என நாம் பழகிக்கொள்வோம். ஆனால், இந்த வசதிகள் இல்லாத இதர உயிர்களை எண்ணிப் பாருங்கள். அவை இடம்பெயர்தலை மட்டுமே தேர்ந்தெடுக்கும். பல மைல்கள் கடக்கும்; வழியில் நோய்வாய்ப்படும்; சில நேரம் இறக்கும்,
அவற்றுக்கு வந்த நோய்க்கிருமி, காற்று, நீர், நிலம், உணவு என மனித இனத்துக்கு Spill over நோய்களாக வருகின்றன. மருத்துவ விஞ்ஞானம் கண்டிராத மிகக்கொடிய வைரஸ்களாக, பாக்டீரியாவாக அவை காணப்படுகின்றன! அவற்றுடன் ஒட்டுமொத்த விஞ்ஞான மற்றும் மருத்துவ உலகமும் ஒரு போரை நடத்துகின்றன.
Also Read: பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ்... உலகம் அச்சம் கொள்ள காரணம் என்ன?
தற்போது பரவிவரும் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் கூட ஐரோப்பாவில் வாழும் மிங்க் விலங்குகளால் வந்த புதுவகை எதிர்ப்புத்திறன் நகர்வு (Antigenic drift) எனக் கருதப்படுகிறது. இனியும் இதுபோன்ற போர்கள் அடிக்கடி வரலாம். மிக பயங்கர நோய்கள் இறக்குமதி ஆகலாம். இயற்கையை மதிக்காது போனால், அது நிச்சயமாக நம் பின் தொடர்ந்து எதிர்வினை ஆற்றியே தீரும். இது பற்றி சற்று ஆழ்ந்து சிந்திப்போம், இயற்கையுடன் ஒன்றிணைவோம். அடுத்தடுத்த நோய்களிலிருந்து மனித இனத்தைக் காத்திடுவோம். அடுத்த தலைமுறையினருக்கு நோயற்ற, பெருந்தொற்று இல்லாத பூகோளத்தைக் கொடுக்க முயல்வோம்.
source https://www.vikatan.com/health/healthy/how-environmental-changes-lead-humans-to-new-zoonotic-diseases
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக